Published : 12 Sep 2017 10:40 AM
Last Updated : 12 Sep 2017 10:40 AM

உதவித்தொகையுடன் படிப்பு: பொதுத்துறை நிறுவனங்களின் வேலைக்கு நுழைவுவாயில்!

மத்திய அரசின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் உதவித்தொகையுடன் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். படிப்பதற்கு ‘கேட்’ நுழைவுத்தேர்வில் (Graduate Aptitude Test in Engineering-GATE) தேர்ச்சி பெற வேண்டும்.

யார் விண்ணப்பிக்கலாம்?

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்சர் உள்ளிட்ட பல்வேறு பொறியியல், தொழில்நுட்பப் பாடப் பிரிவுகளில் ‘கேட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.எஸ்சி., எம்.சி.ஏ. உள்ளிட்ட பட்டதாரிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

‘கேட்’ நுழைவுத்தேர்வு மதிப்பெண், 3 ஆண்டுகள் செல்லத்தக்கது . மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில், கெயில், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே ‘கேட்’ நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டே பொறியாளர் பணிக்கு ஆட்களைத் தேர்வுசெய்து வருகின்றன. கேட் தேர்வு மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பொறியாளர் பணி தொடர்பான நியமனங்களை மேற்கொண்டுவருகின்றன.

வேலை தரும் நிறுவனங்கள்

அந்த வகையில், தற்போது, பொறியியல் பட்டதாரிகளைப் பொறியியல் நிர்வாகப் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2018 கேட் நுழைவுத்தேர்வு மூலமாகத் தேர்வு செய்ய கெயில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், தேசிய அனல்மின் கழகம், ஓ.என்.ஜி.சி., பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் நிறுவனம், உள்ளிட்ட பல்வேறு முன்னணிப் பொதுத்துறை நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன. பணி நியமனம் தொடர்பான விரிவான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் அந்த நிறுவனங்களின் இணையதளத்தில் வெளியாகும். அப்போது, கேட் தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

கேட் நுழைவுத்தேர்வை ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் ஒரு மத்திய அரசு உயர்கல்வி நிறுவனம் நடத்தும். அதன்படி, 2018-ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத்தேர்வை கவுஹாத்தி ஐ.ஐ.டி. நிறுவனம் (Indian Institute Technology ) நடத்த இருக்கிறது. ஆன்லைன் பதிவு செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

நுழைவுத்தேர்வுக்கான தகுதி, பாடத்திட்டம், முந்தைய ஆண்டு வினாக்கள், அவற்றுக்கான விடைகள், மாதிரித் தேர்வுகள் உள்ளிட்ட விவரங்களை www.gate.iitg.ac.in என்ற இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம். பொறியியல் பட்டதாரிகள் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர கேட் நுழைவுத்தேர்வு முதன்மை நுழைவுவாயில்!

முக்கிய நாட்கள்

ஆன்லைன் தேர்வு: 2018-ல் பிப்ரவரி 3, 4, 10, 11.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 5

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x