Last Updated : 29 Dec, 2015 11:56 AM

 

Published : 29 Dec 2015 11:56 AM
Last Updated : 29 Dec 2015 11:56 AM

மறுகட்டுமானமும் மீண்டு எழுதலும்

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது கோபத்தையும் மனச்சலிப்பையும் எல்லாவற்றையும் இழந்துபோன ஒரு மனநிலையையும் நிறைய மாணவர்கள் வெளிப்படுத்தினார்கள். இருந்தாலும் இவற்றிலிருந்து வெளியே வருவதற்கு அவர்களுக்கு அவரவர்களின் மனதுக்குக்கேற்ற பல வழிகள் உள்ளன. பாதுகாப்பான இடங்களுக்கு படகுகள் மக்களை எடுத்துச்சென்றன. ஹெலிகாப்டர்கள் சாப்பாட்டு பாக்கெட்டுகளுடனும் தண்ணீர் பாட்டில்களுடனும் வானில் அலைந்தன.

சினிமா போன்ற பேரழிவு

நமக்கு நன்றாகத் தெரிந்த இடங்கள் எல்லாம் தண்ணீரில் மிதந்தன. 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 15 லட்சம் பேருக்கும் மேல் தங்களின் இருப்பிடம் விட்டு வேறு இடத்துக்கு மாறும்படி ஆனது. விஞ்ஞானக் கற்பனை தொடர்பான சினிமாவில் வரும் பேரழிவு போல இருந்தது இது. ஆனால் வெள்ளத்தின் வன்முறை நிஜமானது என்பதைத் தவிர. 100 ஆண்டுகளாக இல்லாத மழை என்று வர்ணிக்கப்பட்ட இயற்கையின் கோபத்தைச் சென்னையும் கடலோரத் தமிழகமும் தாங்கின.

அசையும் வாழ்வை வெள்ளம் சிலையைப் போல நிறுத்திவைத்தது. ஏறக்குறைய எல்லோரும் ஏதாவது ஒன்றை இழந்ததைப் போல உணர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர்.வானிலையின் தயவிலும் நல்ல பாதுகாவலர்களின் கருணையிலும் விடப்பட்டனர். நகரத்தை விட்டுத் தூரத்தில் இருக்கிற எங்களைப் போன்றவர்கள் தொலைக்காட்சியின் பார்த்தவை ‘‘நமக்கு இப்படியெல்லாம் நடந்தா எப்படியிருக்கும்” என்று நினைக்கவைக்கும் மனநிலையையும் நம்மால் எதுவும் செய்ய முடியாமலிருக்கிறதே என்ற நிலையையும் ஏற்படுத்தியது.

அனுபவங்களில் வகுப்பறை

சென்னையில் உள்ள ஒரு ஆசிரியை அவரது மாணவர்களைப் பற்றிய அக்கறையைப் பகிர்ந்துகொண்டார். அவரின் மாணவர்களில் பலர் மனவருத்தத்தோடு உள்ளனர். அவர்கள் பார்த்த பேரழிவின் பாதிப்பிலிருந்து விடுபட்டுவர முடியாமலிருக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் கோபத்துக்கும் பயத்துடன் கூடிய மனவெறுப்புக்கும் ஆளாகியுள்ளனர்.பல்வேறுபட்ட நிலைகளில் வெளியே ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் மையமாகப் பள்ளி வகுப்பறை மாறிப்போனது. பெரும்பாலான வாழ்க்கை அனுபவங்களுக்கு போலத் தயாராக இருக்கும் தீர்வுகள் எதுவும் கிடையாது.

இருந்தாலும் இழப்பையும் கவலையும் எதிர்கொள்ள அவரவர் மனப்போக்குக்கேற்ற பல்வேறு வழிகள் உள்ளன.

அமெரிக்காவில் ஒரு பேரழிவில் சிக்கிப் பிழைத்த ஒரு பெண் மற்றவர்களுக்கான நிவாரணப் பணியில் ஈடுபட்டதால் தனது தனிப்பட்ட கவலை எப்படி மாறியது என்று பகிர்ந்து கொண்டார். வீடு இல்லாதவர்களுக்கு உணவு அளித்ததும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு வண்ணம் அடித்ததும் அவளது இழந்துபோன மனநிலையை மீட்டது என்றார் அவர்.

அதிகரிக்கும் மாணவ ஆற்றல்

தன்னைவிட அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம். வீட்டின் பணியாளர் குடும்பங்களுக்கும் பக்கத்துக்கு வீடுகளுக்கும் உதவுவதிலிருந்து ஆரம்பிக்கலாம்.

சின்னச் சின்னச் செயல்கள் பெரிய மாற்றத்தை உருவாக்கும். சுனாமி பேரழிவுக்குப் பிறகு மாணவர்கள் குழு ஒன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஓவியமும் நடனமும் பாட்டும் சொல்லிக்கொடுத்து அவர்களின் மனதைத் தளர்த்தினார்கள்.

இத்தகைய பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்குத் தங்களாலும் நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை பிறக்கும். இன்னமும் இத்தகைய சமூகசேவையை அமைப்புகள் செய்துவருகின்றன. அவற்றில் ஒரு தன்னார்வத் தொண்டராகச் சேர்வதன் மூலம் மாணவர்கள் தங்களை ஆற்றல்மிக்கவர்களாக உணர முடியும்.

பிரார்த்தனையும் கலை வெளிப்பாடுகளும்

கவலையும் துன்பங்களைப் பார்வையிட்டதும் கலை வடிவங்களில் வெளியாகும்போது இன்னொரு வடிவத்துக்கு உருமாறும். பாடலும் எழுத்தும் வலிமையான ஊடகம். நாடகமும் அப்படித்தான். பாதிக்கப்படுகிறவர்களின் உணர்வு களோடு நமது ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க உதவலாம்.

பிரார்த்தனையின் சக்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் நமது தினசரித் தேவைகளுக்கான வேண்டல்களைத் தாண்டிய ஒரு அமைதியில் நம்மால் மதம்,சாதி உள்ளிட்ட தடைகளைத் தாண்டிய ஒரு பந்தம் எல்லா மனிதர்களையும் பிணைப்பதை உணரலாம். நாம் மனிதராக இருக்கிறோம் என்று நமக்கு நினைவூட்டுகிற ஒரு ஆழமான தொடர்பை உலக அளவிலான மொழியான துக்கம் கொண்டுவருகிறது. அழிவு ஒன்று நடந்த பிறகு மறுகட்டுமானத்துக்கான நம்பிக்கையையும் அதன் பல்வேறு வடிவங்களையும் வரலாறு பதிவு செய்துள்ளது.

ஜப்பான் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. போரிலும் இயற்கைப் பேரழிவிலும் அது மீண்டுள்ளது. அத்தகைய நேரங்களில் ஜப்பானின் தாங்கும் திறனும் மனதின் பரிவு, செயலாக மாறுவதும் மனதை நெகிழவைப்பவை.

சாகசத்துக்குத் தயாரா?

ஆர்வமில்லாத மனநிலையைக் காட்டும் காட்சிகளோடு நல்லெண்ணங்களைச் சொல்லும் அனேக நிகழ்வுகளையும் நாம் பார்த்தோம். யார் என்று தெரியாதவர் களுக்காகப் பலர் தங்களின் வீடுகளைத் திறந்துவிட்டார்கள். ராணுவம், கப்பல்படை, உள்ளாட்சி பணியாளர்கள் தங்களின் சொந்தப் பாதுகாப்பைப் பற்றிக் கவலை கொள்ளாமல் மக்கள் காப்பாற்றப்படுவதை உறுதி செய்தனர். ஒரு நண்பர் தனது சின்ன சமையலறையில் 3,000 சாப்பாடுகளை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகத் தயாரித்தார். பழைய பிரச்சினைகளை மறந்து அக்கம்பக்கத்தினர் ஒருவருக்கு ஒருவர் கைகோத்துக்கொண்டனர்.

குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒரு பக்கத்து வீட்டுக்காரரை ஒரு நண்பர் எப்போதும் தவிர்த்துவிடுவார். அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்தான் இந்த வெள்ளத்தில் நண்பரின் அம்மா, அப்பாவுக்குப் பாதுகாவலர் ஆனார். இப்படிப்பட்ட சம்பவங்கள் மனிதருக்குள் உள்ள அடிப்படையான நல்ல தன்மை தொடர்பானவை. இவை நம்பிக்கையூட்டுபவை. நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி நினைத்திருப்பதை விட அதிகமான அளவில் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளவர்களாக நாமிருப்பதை நினைவுபடுத்தும்.

நம்முடைய சொந்த ஆளுமை வளர்ச்சிக்கு ‘எழுகிறது சென்னை’ என்ற அடையாளம் அற்புதமானது. நமது சொந்த பயங்களுக்கும் மேலாக எழுவதும் அதனை மறுகட்டு மானத்துக்கான நம்பிக்கையாக அதை மாற்றுவதும்தான் ஒரு வாழ்நாள் சாகசம்.

© ‘தி இந்து’ ஆங்கிலத்திலிருந்து சுருக்கித் தமிழாக்கம்- நீதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x