Published : 13 Oct 2015 11:03 AM
Last Updated : 13 Oct 2015 11:03 AM

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: செய்திகள் யோசிப்பது அருள்

படைப்பாக்கக் கல்வி குறித்துக் கடந்த சில ஆண்டுகளாக எல்லாரும் பேசுகிறார்கள். கல்வியில் CCE (continuous and comprehensive Evaluation) எனும் சொற்றொடர் நுழைந்தது. அதன் பிறகு ‘மனப்பாடத்துக்கு அல்ல.. படைப்பாற்றலுக்கே முதலிடம்’ என்று பேசப்பட்டது.

மொத்தம் 100 மதிப்பெண்களில் 40 குழந்தையின் படைப்பாற்றலுக்கும் காகித பென்சில் (Paper Pencil test) மனப்பாடத் தேர்வுக்கு 60 எனவும் பிரிக்கப்பட்டது. முன்பு ஒரே விடையை அனைவரும் ஒன்றுபோல மனப்பாடம் செய்து எழுதி மதிப்பெண்கள் பெற்றுவந்தனர். அவற்றை இரண்டாகப் பிரித்து அதில் ஒரு சிறுபகுதியை அவரவர் கற்பனைத் திறன்படி உருவாக்கும் பாடம் சம்பந்தமான படைப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

ரெடிமேடு ‘படைப்பாற்றல்’

ஆனால், இந்தக் கல்விமுறை பெற்றோர்களை, ஸ்டேஷனரி கடைகளை நோக்கிப் படையெடுக்கவைத்தது. அவரவர் வசதிக்கு ஏற்ப ரெடிமேடாக - கல்வி சார்ந்த காட்சிப்பொருள்களை ‘வாங்கி’ வந்து வைக்கும் சடங்காக இப்போது மாறிவிட்டது. பெற்றோர்களே அதனைச் செய்துவிடுவதும் நடக்கிறது.

குழந்தைகளின் படைப்புத் திறனை அளந்து அதற்கு மதிப்பெண் தருவது சிக்கலான விஷயம் அதிலும் அது ஆசிரியர்களது கற்பனா வளமும் சார்ந்த ஒன்றாக ஆகிவிடுகிறது. அதனால் குழந்தைகளுக்குச் சரியான ‘நீதி’ கிடைக்குமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். கற்பனை வளமும் படைப்பாற்றலும் குழந்தைகளின் உடன்பிறந்தவை. அவை உச்சத்துக்குப் போவது அவர்களது குறும்புத்தனத்தைப் பொறுத்தது என்பதை எனக்குப் புரியவைத்தவர்தான் ஜெயம் அருள்.

குறும்புக்குப் பரிசு

‘குழந்தைகளின் கற்பனைக்கு மிஞ்சிய எதுவும் உலகில் இல்லை’ என்பார் ஜப்பானியக் கல்வியாளர் ட்சுனசபுரோ மாக்கிகுச்சி. படைப்பாக்க வாழ்க்கை கல்வி (Education for creative living) என்பதை ஒரு கல்விக் கோட்பாடாக முன்வைத்தவர். ஜப்பானில் 1914-ல் சோக்கா காக்காய் (Soka Gakkai) எனும் படைப்பாக்கப் பள்ளியைத் தொடங்கினார் அவர். குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதையே (Happiness of Learner) பள்ளியின் நோக்கமாக முன்வைத்தவர். அவரது படைப்பாற்றல் கல்வியில் குழந்தைகளின் குறும்புத்தனத்தை வளர்த்தெடுப்பது பிரதான அம்சம்.

வீட்டில் மூன்று வயதுவரை ஒரு குழந்தை அடிக்கும் லூட்டி சொல்லி மாளாத ஒன்று. ஆனால், பள்ளியில் அடி எடுத்து வைத்த நாளிலிருந்து குழந்தைகளின் சுட்டித்தனமும் குறும்புகளும் முற்றிலும் முடக்கப்பட்டுச் சத்தமும் சிரிப்பும் கும்மாளமும் அடங்கி ஒடுங்கிவிடுவது ஏன்? குழந்தைகள் அச்சத்திலிருக்கும்போது கற்பது இல்லை என்கிறார் மாக்கி குச்சி. கற்றலும் படைப்பாற்றலும் ஒன்றுக்கு ஒன்று பின்னிய செயல்பாடுகள். ஒருவரது படைப்பாற்றல் என்பது சமயோசித புத்தி எனும் நான்காம் பரிமாணத்தால் ஊக்கம் பெறுகிறது.

அதனால்தான் மாக்கி குச்சி தன் பள்ளியில் குழந்தைகளின் குறும்புகளைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார். அவரது கல்வியில் குழந்தைகள் கேலிச் சித்திரம், கட்டிட விளையாட்டு எனக் கிறுக்கும் ரஃப் நோட்டுக்கு அதிக மதிப்பு இருந்தது. குழந்தைகளது கற்பனைத் திறனை அறிய வெறும் வெள்ளைத்தாள் போதும் என்பார் அவர். படைப்பூக்கத்தை மதிப்பிட ஆசிரியர்களை அனுமதிக்காமல் மாணவர் குழுக்களையே ஒருவரையொருவர் மதிப்பீடு செய்பவராகக் கல்வியில் ஜனநாயக மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்தவர் மாக்கிகுச்சி. குறும்புத்தனமும் சமயோசித அறிவுமே படைப்பூக்கத்தின் இரு சிறகுகள் என எனக்குக் காட்டியவர் ஜெயம் அருள்.

செய்திகள் யோசிப்பது அருள்

நான் முன்பு வேலைபார்த்த அரசு உதவிபெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவராக எனக்கு அறிமுகம் ஆனவர் அருள். அப்பள்ளியில் தினமும் காலை மாணவர் வழிபாட்டு கூட்டம் நடக்கும். திருக்குறள் வாசித்தல், சிந்தனைத் துளி மற்றும் அன்றைய செய்திகளை மாணவர்கள் வாசிப்பது வழக்கம். பிறகு தலைமை ஆசிரியர் அறிவுரை. தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி தேசியக் கீதத்தில் முடியும். இன்றும் எல்லாப் பள்ளிகளிலும் இருக்கும் வழக்கம்தான் இது.

இவற்றில் மாணவர்களது பலவகையான படைப்பூக்கம் வெளிவரவேண்டிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதற்குப்பதிலாக, பெரும்பாலும் ஆசிரியர்கள் எழுதிக்கொடுத்ததை அப்படியே வாசிப்பவர்களாகவே மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர். பேச்சுப்போட்டி, கட்டுரை என யாரோ ஒருவரது வரிகளைத் திரும்பச் சொல்பவர்களாகக் குழந்தைகள் தங்களது படைப்பாற்றலைத் தியாகம் செய்கின்றனர். தேர்வு நாட்களில் காலை வழிபாட்டுக் கூட்டம் பொதுவாக இருக்காது. ஆனால், அன்றைய தினம் ஒரு திடீர் வழிபாட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்கிற வேலை ‘மாவட்டக் கல்வி அதிகாரி வருகிறார்’ என்ற மிரட்டல் உத்திரவுடன் என் தலையில் விழுந்தது.

‘வெற்றுச்’ செய்திகள்

எனக்குத் தெரிந்த மாணவர்களைப் பிடித்து, ‘‘நீ திருக்குறள்’’ ‘‘நீ செய்தியைப் படி’’ எனப் பதற்றத்தோடு அவர்களைத் தயார் செய்த ஞாபகம் இருக்கிறது. குறளுக்குத் தமிழாசிரியரையும் சிந்தனைத் துளிக்குச் சமூகவியல் ஆசிரியரையும் தேடிச் சில மாணவர்கள் ஓடினார்கள். செய்தி வாசிக்கும் வேலையை அருள் ஏற்றுக்கொண்டார். “ நீங்க கவலைப்படாதீங்க சார்” என்று எனக்கு ஆறுதல் வேறு கூறினார். சற்று நேரத்தில் மாவட்டக் கல்வி அதிகாரி வந்துவிட்டார். வழிபாட்டுக் கூட்டமும் தொடங்கிவிட்டது. திருக்குறளும் அறிஞர் கூறிய சிந்தனைத் துளியும் எழுதுவது எளிது. ஆனால், செய்தி வாசிப்பது அப்படியல்ல.

ஆனால், ஜெயம் அருள் தனது கணீர் குரலில் செய்திகளை அற்புதமாக வரிசையாக வாசித்தார். அருகில் இவற்றை ஏற்பாடு செய்துகொண்டிருந்த நான் அவர் பார்த்து வாசித்துக் கொண்டிருந்த நோட்டின் பக்கத்தைத் தற்செயலாக எட்டிப்பார்த்தேன். எனக்குப் பெரிய அதிர்ச்சி. அது ஒரு வெற்றுப்பக்கம்! அங்கே எதுவுமே எழுதப்பட்டிருக்கவில்லை. வெறும் பேப்பரிலிருந்துதான் அவர் தத்ரூபமாய்ச் செய்திகளை ‘வாசித்து முடித்து’ பலத்த கைதட்டலைப் பெற்றார். எனக்கு வியர்வை அடங்க வெகுநேரமானது.

ஒரு ஆசிரியர் என்ற முறையில் ஆரம்பத்தில் எனது மனதில் அவரை நினைத்துக் கோபம்தான் கொப்பளித்தது. ஆனாலும் அவரது குறும்புத்தனத்தையும் சமயோசித அறிவையும் நினைத்தும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. என்ன ஒரு கற்பனைத் திறன் இருந்திருந்தால் ஓரளவு அறிந்த செய்திகளை வைத்து அவற்றை தானாகவே இட்டுக்கட்டி அந்த வழிபாட்டுக் கூட்டத்தைச் சமாளித்திருப்பார் அருள்? குழந்தைகளது படைப்பாற்றல் என்பது ஓவியம், கைவேலை மட்டுமே என்று நினைத்த எனக்குக் குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் குறும்பும் கற்பனை வளமும் படைப்பூக்கமும் கலந்துள்ளதை நிரூபித்தார் ஜெயம் அருள். இப்போது ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x