Published : 12 May 2015 01:02 PM
Last Updated : 12 May 2015 01:02 PM

அறிவியல் அறிவோம்- 11: வரிக்குதிரைக்கு எப்படி வரிகள் வந்தன?

அசப்பில்குதிரை போல இருந்தாலும் வரிக்குதிரையின் வரிகள் பிரசித்தம். குதிரை, வரிக்குதிரை, கழுதை முதலியவை ஒரே குடும்பத்தைச் சார்ந்த விலங்குகள்தான்.

வரிக்குதிரை பலவிதம்

சமவெளி வரிக்குதிரை (Equus quagga) வரிக்குதிரைகளின் இனத்தில் ஒன்று. தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் புல்வெளிகளில் இது பரவலாகக் காணப்படுகிறது. தென்மேற்கு ஆப்பிரிக்காவில் மலை வரிக்குதிரை இனம் (Equus zebra) பரவலாகக் காணப்படுகிறது. பட்டுபோன்ற பளபளப்பில் வெள்ளைவெளேர் என்று இருக்கும். அடிவயிறு முதலாகக் குறுகலான வரிகள் இருக்கும்.

எத்தியோப்பியா, கென்யா முதலிய நாடுகளின் வறண்ட புல்வெளிகளில் கிரேவ்யி வரிக்குதிரை (Equus grevyi) அல்லது இம்பிரியல் வரிக்குதிரை காணப்படுகிறது. இந்த இனம் அழிகிற நிலையில் இருக்கிறது. இந்த வரிக்குதிரையின் அடிவயிறிலும் வாலின் நுனிப்பகுதியிலும் வரிகள் இருக்காது.

உடம்பின் முன்புறத்திலும் கழுத்துப் பகுதியிலும் மட்டும் வரிகளை உடைய சிறப்பு குவையாகா (quagga) இனம் இருந்தது. அது 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் முற்றிலும் அழிந்து போய்விட்டது.

கறுப்பா, வெள்ளையா?

பல வகை வரிக்குதிரைகளின் அடிவயிற்றுப்பகுதியில் வரிகள் இல்லாமல் கொஞ்சமாய் வெள்ளைப் பகுதி காணப்படுகிறது. அதனால், வெள்ளைத் தோலில் கறுப்பு வரிகள் உள்ளன என்றுதான் பல காலமாய் புரிந்து வைத்திருந்தனர். ஆனால், கருவளர்ச்சியியல் (embryology) ஆய்வுகளைச் செய்துபார்த்தபோது, உள்ளபடியே கறுப்புத் தோலில் ஏற்படும் வெள்ளை நிறங்கள் தாம் வரிகள் என்பது தெளிவாகியுள்ளது.

பொதுவாக, உடம்பு, தலை, கழுத்துப்பகுதி முதலிய இடங்களில் வரிகள் செங்குத்தாக இருக்கும். குதிரையின் பின்பகுதியிலும் கால்களிலும் வரிகள் கிடை மட்டமாகவும் இருக்கும்.

எதற்கு வரிகள்?

வரிகள் உருவானதற்குப் பரிணாம வளர்ச்சியில் ஏதாவது இயற்கை உந்துதல் இருக்கவேண்டும். எதனால் வரிகள் உருவாயின என்பது குறித்துச் சமீபகாலம் வரை பல கருதுகோள்கள் இருந்தன. முறையான அறிவியல் ஆய்வுகள் இருக்கவில்லை. சிங்கம் முதலிய வேட்டை விலங்கிடமிருந்து தன்னை உருமறைப்பு செய்துகொள்ள, புல்வெளிப் பகுதியில் வரிக்குதிரையின் வரிகள் புற்களோடு இணைந்து வரிக்குதிரைகளுக்கு உதவும் என்று சிலர் கருத்து கூறினார்கள். சிங்கம் முதலிய விலங்குகள் நிறக்குருடு. எனவே, வெள்ளையும் கருமையுமான வரிகள் வரிக்குதிரையைப் புல்வெளியில் மறைக்கும் என்றனர்.

சிலரோ, கூட்டம் கூட்டமாக வரிக்குதிரைகள் மேயும் போது தொலைவிலிருந்து பார்த்தால், தனித்தனியான வரிக்குதிரைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருப்பது போன்ற காட்சி மயக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்கள். இதுவும் வேட்டை விலங்கிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உருமறைப்பு தந்திரம் தான். சிலரோ தன் இணையை ‘கடலை’ போட்டு கவர்ச்சிக்க மயிலின் தோகை போல வரிகளும் உதவும் என ஊகம் செய்தனர்.

பூச்சிக்கடிக்குத் தப்ப

‘கொண்டதே கொள்கை’ என்பது அறிவியல் கிடையாது அல்லவா? ஒரு ஊகம் பொருந்துகிறது என்பது மட்டுமல்ல, அதற்கான சான்றுகளும் தேவை. அதனால், பரிசோதனை ஆய்வுகளின் வழியாக மட்டுமே இயற்கையின் புதிர்களை நவீன அறிவியல் விடுவிக்கிறது.

பூச்சிக்கடியிலிருந்து தப்பிக்க உதவி, அதன் தொடர்ச்சியாக ஏற்பட்டவைதான் வரிக்குதிரைகளின் வரிகள் என்று சமீபத்தில் ஸ்வீடன் லுண்ட் பல்கலைக்கழக விஞ்ஞானி சூசன் அக்கிசோன் நடத்திய ஆய்வு நிறுவுகிறது. இது அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டபநிட்ஸ் (Tabanids) எனும் ஒருவகை பூச்சி கடித்துத் தொல்லை தரும்.

இந்தப் பூச்சி வெறுமனே கடிப்பது மட்டுமல்ல, நோய் தாக்குதலையும் ஏற்படுத்தும். எனவே தான், பூச்சிக்கடியிலிருந்து தப்புவதற்காக ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியே வரிக்குதிரைகளின் வரிகள் என்ற கருத்து எழுந்தது.

சோதனை

இதனைச் சோதனை செய்து பார்க்கக் குதிரைப் பொம்மைகளைச் செய்தனர். அதன் மீது அங்கும் இங்கும் திட்டுதிட்டாகக் கரும் புள்ளிகள், வரிகள் எனப் பல பல வடிவங்களை வரைந்தனர். ஒரே ஒரு பொம்மையை மட்டும் கரும் நிறத்தில் வர்ணம் செய்தனர். பின்னர் இந்தப் பொம்மைகள் மீது பசை தடவினர். அந்தப் பொம்மையைக் குதிரை போன்ற விலங்கு எனக் கருதி டபநிட்ஸ் பூச்சிகள் வந்தால் அவை பசையில் ஒட்டிக்கொள்ளும். எந்தப் பொம்மையில் அதிக டபநிட்ஸ் பூச்சிகள் ஒட்டிக்கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்து எந்த மாதிரியான தோல் வடிவம் பூச்சிகளை விரட்டுகிறது எனக் கண்டு பிடிக்கத்தான் இந்த ஆய்வு.

பூச்சிகள் மிகுதியாகக் குடியிருந்த குதிரை லாயத்தின் அருகே இது நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் வரிகள் கொண்ட பொம்மையில் தான் மிகக் குறைவாகப் பூச்சிகள் ஒட்டிக்கொண்டன. எந்த வடிவமும் இல்லாத கறுப்புத் தோல் கொண்ட பொம்மையில் தான் மிகுதியாக டபநிட்ஸ் பூச்சிகள் ஒட்டிக் கிடந்தன.

ஒளியின் முனைவாக்கம்

வரிகள் கொண்ட உடல் அமைப்பு எப்படி பூச்சிகளை விரட்டுகிறது? வரிகள் கொண்ட தோல் அதில் பட்டுத் தெறிக்கும் ஒளியைக் கூடுதல் முனைவாக்கம் (polarised) செய்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒளி என்பது அலைகள் தாம் அல்லவா!. நீரின் மீது மேலும் கீழுமாக ஏற்படும் அதிர்வுகள் தான் நீரலைகள். இவை ஒரே திசை நோக்கி மட்டுமே அமையும். ஆனால், வெற்றிடத்திலும் செல்லும் மின்காந்த அலையான, ஒளி பொதுவாக, எல்லாத் திசைகளிலும் அதிர்வு செய்யும். எனவே, எல்லாத் திசைகளிலும் அலையின் தன்மையைக் கொண்டு இருக்கும்.

ஒரே ஒரு திசையில் மட்டுமே அலையின் தன்மையைக் கொண்டு பாயும் ஒளியைத் தான் ‘முனைவாக்கம் பெற்ற ஒளி’ என்பார்கள். விலங்குகள், நீர் நிலைகள் முதலியன மீது பட்டுத்தெறிக்கும் ஒளியானது இயல்பில் முனைவாக்கம் பெறும். எனவே, ஒவ்வொரு பொருளையும் பகுத்தறிய உதவுகிற நிறம் போலவே, அந்தப் பொருளிலிருந்து பிரதிபலிக்கும் ஒளியின் முனைவாக்க தன்மையும் அந்தப் பொருளைப் பகுத்தறிய உதவுகிறது.

வெப்பத்திலிருந்து தப்பவும்

மனிதனால் சிறிதளவு மட்டுமே முனைவாக்க ஒளியைப் பிரித்து அறிய முடியும். ஆனால், பொதுவாக, கூட்டு விழி லென்ஸ் (compound lense) அமைத்துள்ள பூச்சிகள் முனைவாக்கம் (polarised) பெற்ற ஒளியை நன்றாகப் பிரித்து அறியும். பூச்சிகள் தமது இரையைத் தேடிச் செல்வது அந்த இரை பிரதிபலிக்கும் முனைவாக்க ஒளியின் தன்மையை வைத்துத் தான்.

வரிகள் கொண்ட குதிரையின் தோல் பூச்சிகளின் பார்வையில் நீர் நிலையைப் போல தென்படும். எனவே, அந்த வரிக்குதிரையை ‘நீர் நிலை’ என நினைத்து பூச்சி வேறு திசையில் சென்று விடும். இவ்வாறு, வரிகள் கொண்ட வரிக்குதிரை பூச்சிக் கடியிலிருந்து தப்புகிறது.

மேலும் ஒரு ஆய்வில், வெப்பம் அதிகமாக உள்ள பகுதியில் கூடுதல் வரிகள் கொண்ட வரிக்குதிரைகள் வாழ்கின்றன என்றும் கண்டனர். ஆப்பிரிக்க புல்வெளியில் மதிய வெயிலில் தோலின் கருமைப் பகுதி வெப்பத்தை உள்ளிழுக்கும்; வெள்ளைப் பகுதி வெப்பத்தைப் பிரதிபலிக்கும்.

எனவே, மாறி மாறி கறுப்பையும் வெள்ளையையும் வரி வரியாகக் கொண்ட நிலை, வெப்பத்தை தணித்துக் குளிர்ச்சி தரும் படியான காற்றுச் சுழற்சியைத் தோலின் மேலே ஏற்படுத்துகிறது எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுவரை இருந்த ‘உருவ மறைப்பு’ எனும் கருதுகோள் கைவிடப்படுகிறது. பூச்சிக்கடியிலிருந்து தப்பவும் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ளவும் தான் வரிக்குதிரையின் உடலில் வரிகள் உருவாகின என்று விஞ்ஞானம் நாலுகால் பாய்ச்சலில் பாய்கிறது.

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x