Last Updated : 07 Apr, 2015 12:31 PM

 

Published : 07 Apr 2015 12:31 PM
Last Updated : 07 Apr 2015 12:31 PM

நூலகம்- ஆய்வு மாணவர்களின் அற்புத உலகம்

நூலகம்

நூலகத்துடன் நிரந்தர தொடர்புகொண்டிருந்த மாணவர்கள் பிற்காலத்தில் பெரும் அறிஞர்களாக மாறியுள்ளார்கள். பாடப் புத்தகங்கள் தவிர்த்த பிற விஷயங்களில் மாணவர்களுக்குத் தேவையான அறிவை அவர்களுக்கு அளிக்கும் நோக்கத்திலேயே ஒவ்வொரு பள்ளியிலும்,ஊரிலும் நூலகங்கள் அமைக்கப்படுகின்றன.

அப்படியான ஒன்றுதான் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் நூலகம். மதுரை- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், சின்னாளபட்டிக்கு அடுத்த பஸ்நிறுத்தம் காந்தி கிராமம். இந்தப் பல்கலைக்கழகம் காந்தியவாதிகளால் தொடங்கப்பட்டு, பின்னர் மத்திய அரசால் ஏற்று நடத்தப்படும் கல்வி நிலையமாகும்.

தோற்றமும் வளர்ச்சியும்

பல்கலைக்கழக வளாகத்தில் பெரிய ஆலமரம் அருகில் டாக்டர். ஜி.ராமச்சந்திரன் லைப்ரரி என்ற பெயருடன் அறிவு மரமாக வீற்றிருக்கிறது நூலகக் கட்டிடம். ஜி.ராமச்சந்திரன் என்பது முதல் துணைவேந்தரின் பெயர். நூலகம் 1956-லேயே தொடங்கப்பட்டுவிட்டாலும், இந்தக் கட்டிடத்துக்கு இடம்பெயர்ந்தது 1987-ல்தான்.

இந்தப் புதிய கட்டிடத்துக்கு 1984-ல் அன்றைய மத்தியக் கல்வித்துறை அமைச்சர் சீலா கௌல் அடிக்கல் நாட்ட, 1987-ல் தமிழகக் கல்வி அமைச்சர் பொன்னையன் திறந்துவைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் புத்தகங்களுக்கு இடமில்லாமல் போகவே 1997-ல் மாடி கட்டப்பட்டிருக்கிறது. இப்போது நூலகத்தின் பரப்பு 16 ஆயிரம் சதுர அடிகளாக உள்ளது.

புத்தகங்களின் வீச்சு

இங்கே ஒரு லட்சத்து 60 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. கிராமியத் தொழில்களில் ஆரம்பித்துப் பொறியியல் மற்றும் கணினி சார்ந்த புத்தகங்கள் வரையில் அனைத்து வகையான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் கட்டுரைகளும், இலக்கியங்களும் இருக்கின்றன.

விவசாயம் தொடர்பாக 5 ஆயிரம் புத்தகங்கள், சமூகவியல் தொடர்பாக 7 ஆயிரம் புத்தகங்கள், கால்நடை வளர்ப்பு, கிராமியத் தொழில்கள், மேலாண்மை, மற்றும் கூட்டுறவு தொடர்பான புத்தகங்கள் மிக அதிகளவில் இருக்கின்றன.

காந்தியின் யங் இந்தியா

இங்குள்ள நூல்களில் காந்திஜி நடத்திய ‘யங் இந்தியா’ மற்றும் ‘ஹரிஜன்’ இதழ்களின் தொகுப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. காந்தியடிகள் எழுதிய எல்லாவற்றையும் தொகுத்து வெளியான 100 தொகுதி நூல்களும் இங்கே உள்ளன. ‘ஏசியா பப்ளிகேஷன்ஸ்’ உள்ளிட்ட பழமையான அச்சகங்களிலிருந்து வெளியான முக்கியமான புத்தகங்களின் தொகுப்பும் இங்குள்ளது.

ரெபரன்ஸ் மற்றும் பாடப் புத்தகங்கள் பிரிவு, விநியோகப் பிரிவு, வார, மாத இதழ்கள் பிரிவு, ஆய்வேடுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பிரிவு போன்றவை மிகப்பெரியதான காமராசர் பல்கலைக்கழகத்தின் தரத்துக்கு இங்கேயும் இருக்கின்றன.

தொழில்நுட்பம்

கிராமத்தில் உள்ள பல்கலைக்கழகத்திலா இத்தனை வசதிகள் என்று பிரமிக்க வைக்கும் அளவுக்குத் தொழில்நுட்பத்தில் முன்னேறியிருக்கிறது இந்த நூலகம். இங்குள்ள டிஜிட்டல் நூலகத்தில் 30 கணினிகள் இருக்கின்றன.

பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒவ்வொரு துறைக்கும் சிறப்பு நூலகங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் இந்த மையத்துடன் கணினி வழியாக இணைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான நூல்களை ஸ்கேன் செய்து நூலக இணையதளத்தில் பதிவேற்றியிருக்கிறார்கள். ஆக, பல்கலைக்கழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் அவற்றைப் படிக்கவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடிகிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்பட தென்மாவட்டத்தில் எங்கும் காண முடியாத வசதிகள் இவை. புத்தகங்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. புத்தகத்தின் பிரதிகளை ஜெராக்ஸ் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

பயன்பாடு

மாணவர்களையும், ஆய்வாளர்களையும் அதிகம் காண முடிகிறது. “கிராமம் சார்ந்த தலைப்புகளில் ஆய்வு செய்கிற எந்த மாணவராக இருந்தாலும், காந்தி கிராமம் வராமல் அவர்களது ஆய்வு நிறைவு பெறாது. ஏனென்றால் இங்கே அது தொடர்பான புத்தகங்கள்தான் மிக அதிகமாக இருக்கின்றன. அதேபோல இந்தத் துறையில் விரிவான பல ஆய்வுகளை மேற்கொண்ட அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் எழுதிய, பரிந்துரைக்கும் பல புத்தகங்கள் வெளியே கிடைப்பது அரிது” என்கிறார் நூலகர் ஆப்ரகாம்.

ஆராய்ச்சி மாணவர்கள், கல்வித்துறையினர் தவிரப் பொதுவான வாசகர்களுக்கான புத்தகங்கள் இங்கே அதிகம் இல்லை. ஆனால், பொதுவான வாசகர்கள் அறிய வேண்டிய ஒரு அவசிய அதிசயமாக, இந்த நூலகம் இருக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

படங்கள்: தங்கரத்தினம்

நூலகர் ஆப்ரகாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x