Published : 03 Feb 2015 03:40 PM
Last Updated : 03 Feb 2015 03:40 PM

முழு நிலா தோன்றாத மாதம்

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்துசெல்கிறது. ஆனால் அதை நாம் எந்த அளவுக்குக் கவனிக்கிறோமோ தெரியவில்லை. ரோமர்களின் மாதமான பெப்ருவரிஸ் என்பது லத்தீன் வார்த்தையான ஃபெப்ரும் என்பதிலிருந்து தோன்றியுள்ளது. ஃபெப்ரும் என்னும் சொல்லுக்குச் சுத்தப்படுத்துதல் என்பது பொருள்.

ஏனெனில் பழங்கால ரோமர்களின் காலண்டர் படி, இந்த மாதத்தின் 15-ம் தினமான பௌர்ணமி நாளன்றுதான் பாவம் நீக்கிச் சுத்தப்படுத்தும் சடங்கு அனுஷ்டிக்கப்படும். இதை அடிப்படையாகக் கொண்டே இந்த மாதத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ரோமர்களின் காலண்டரில் ஜனவரியும் பிப்ரவரியும்தாம் கடைசியாகச் சேர்க்கப்பட்ட மாதங்கள். ரோமர்களைப் பொறுத்தவரை குளிர்காலத்தைத் தொடக்கத்தில் மாதங்களற்ற காலமாகக் கடந்தார்கள். கி.மு. 450-ம் ஆண்டுவரை பிப்ரவரி ஆண்டின் கடைசி மாதமாகத் தான் இருந்துள்ளது.

அந்த ஆண்டுமுதல் தான் அது வருடத்தின் இரண்டாம் மாதம் ஆனது. பிப்ரவரி மாதத்துக்கு 23 அல்லது 24 நாள்கள் மட்டுமே இருந்துள்ளன. பருவ நிலைகளைச் சமாளிப்பதற்காக பிப்ரவரியைத் தொடர்ந்து 27 நாள்கள் கொண்ட மாதம் இடையில் செருகப்பட்டது.

லீப் ஆண்டு

ஜூலியன் காலண்டரில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டபோது இப்படி இடையில் மாதத்தைச் செருகும் பழக்கம் முடிவுக்கு வந்தது. நான்காண்டுகளுக்கு ஒரு முறை 29 நாள்களைக் கொண்ட லீப் வருடம் என்று முடிவானது. ஒவ்வோர் ஆண்டிலும் பிப்ரவரி மாதம் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதே கிழமையில்தான் மார்ச், நவம்பர் மாதங்கள் பிறக்கின்றன. லீப் ஆண்டில் மட்டும் ஆகஸ்ட் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதே கிழமையில்தான் பிப்ரவரி மாதம் பிறக்கிறது.

அதே போல் பிப்ரவரி எந்தக் கிழமையில் முடிவடைகிறதோ அதே கிழமையில் தான் ஜனவரி, அக்டோபர் ஆகிய மாதங்கள் முடிவடைகின்றன. லீப் ஆண்டில் மட்டும் பிப்ரவரி மாதம் தொடங்கும் கிழமையிலேயே முடிவடையும். மேலும் பௌர்ணமி நாள் வராமலேயே கடந்து போகும் சாத்தியம் கொண்ட மாதம் இது மட்டும் தான். ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் 11 ஆண்டுகளுக்கு இரு முறையும் பிப்ரவரி மாதத்தில் முழு வாரங்கள் நான்கு வந்து செல்லும்.

சிறப்பு தினங்கள்

அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், கனடாவிலும் கறுப்பர் வரலாறு மாதம் பிப்ரவரியில் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி ஒன்றாம் நாளன்று மொரிஸியஸில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. இலங்கையின் சுதந்திர தினம் பிப்ரவரி நான்கு அன்று கொண்டாடப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற மக்கள் தலைவர் ஆபிரஹாம் லிங்கன் பிறந்தது பிப்ரவரி 12 அன்று தான். காதலர் தினமும் இந்த மாதத்தில் தான் வருகிறது. கனடாவின் கொடி நாள் பிப்ரவரி 15 அன்றும் மெக்ஸிகோ நாட்டின் கொடி நாள் பிப்ரவரி 24 அன்றும் அனுஷ்டிக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x