Last Updated : 27 Jan, 2015 12:27 PM

 

Published : 27 Jan 2015 12:27 PM
Last Updated : 27 Jan 2015 12:27 PM

தேர்வுக்குத் தேவை நேர்மையான பதில்கள்

இளமாறன் நேர்முகத் தேர்வுக்கான அறையில் புன்னகையுடன் உட்கார்ந்திருக்கிறார். அவர் முகத்தில் சிறிதும் பதற்றம் தெரியவில்லை. அறிமுகம் முடிந்து கேள்விகள் தொடங்குகின்றன.

தேர்வாளர் 1 -உங்களைப் பார்த்தால் மிகவும் நம்பிக்கையோடு இந்த நேர்முகத் தேர்வை அணுகுவதாகப் படுகிறது. பாராட்டுகள்.

இளமாறன் – நன்றி. நீங்கள் என்னை வேலைக்குத் தேர்ந்தெடுத்தவுடன் மீண்டும் பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.

தேர்வாளர் 2 – உங்கள் நம்பிக்கைக்காக அட்வான்ஸாகவே பாராட்டி விடுகிறேன்.

தேர்வாளர் 1 – அதற்காகக் கேள்விகள் கேட்காமலே​யே உங்களைத் தேர்ந்தெடுத்துவிடுவோம் என்று நினைத்துவிட வேண்டாம். (சிரிக்கிறார்). உங்களை இதற்கு முன்னால் சமீபத்தில் யார் பாராட்டியிருக்கிறார்கள், எதற்காக?

இளமாறன் – நான் இப்போது பணிபுரியும் நிறுவனத்தின் மேலதிகாரி அடிக்கடி பாராட்டிக் கொண்டிருப்பார் சார். வேகமாகவும், தவறில்லாமலும் நான் பணி செய்கிறேன் என்று அடிக்கடி சொல்வார்.

தேர்வாளர் 1 – (விஷமப் புன்னகையுடன்) அதைக் கேட்டு உங்களுக்குப் போரடித்திருக்குமே.

இளமாறன் – இல்லை சார். உண்மையான காரணத்துக்காகத்தானே அவர் பாராட்டுகிறார். ஒவ்வொரு முறையும் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். கூட வேலை செய்பவர்களுக்குத்தான் இது கொஞ்சம் எரிச்சலாக இருக்கும்.

தேர்வாளர் 2 – உங்களைப் பற்றிய எதிர்மறை விமர்சனம் என்ன வந்திருக்கிறது.?

இளமாறன் – (சற்றே அதிர்ச்சியுடன், அவசரமாக) அப்படி எதுவும் வந்ததில்லை.

தேர்வாளர் 2 – கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள்.

இளமாறன் - சார் நான் ஒரு பர்ஃபெக் ஷனிஸ்ட். இது சிலருக்குப் பிடிக்காது.

தேர்வாளர் 1 - ஏன்?

இளமாறன் – என்னவோ ஒரு பொறாமைதான். (பிறகு முகத்தில் கர்வம் பொங்கத் தொடர்கிறான்). தவிர என்னைச் சுற்றியிருப்பவர்களும் என்னைப் போலவே பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

தேர்வாளர் 2 – வேறு எதற்காக உங்களை விமர்சித்திருக்கிறார்கள்?

இளமாறன் – நிறுவனம் கொடுத்த வேலையை அதற்குரிய நேரத்துக்குள் முடித்துவிட வேண்டுமென்று எனக்குக் கீழே உள்ளவர்களை அவசரப்படுத்துவேன். அது அவர்களுக்குப் பிடிக்காது. என்னைப் பற்றிப் என் முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பார்கள்.

தேர்வாளர் 1 – உங்கள் மேலதிகாரிகள் உங்களை விமர்சித்ததில்லையா?

இளமாறன் - எல்லோருமே பாராட்டியிருக்கிறார்கள். அதனால் எனக்குக் கீழே வேலை செய்பவர்கள் என்னைப் பற்றி விமர்சிப்பதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அநியாயமான விமர்சனங்களுக்குக் கவலைப்பட வேண்டாம் இல்லையா?

தேர்வாளர் 1 – (மையமாகத் தலையசைத்தபடி) உங்களைப் பற்றிய நியாயமான எதிர்மறை விமர்சனம் ஒன்றைப் பற்றிச் சொல்லுங்களேன்.

இளமாறன் - (சிறிது யோசித்துவிட்டு) நான் வேலையில் ரொம்ப ​மூழ்கிடுவேன் சார். வேலையைச் சரியாகச் செய்யணும் என்பதற்காக என்னை ரொம்ப வருத்திக்குவேன். வீட்டிலேகூட ஆபீஸ் வேலையைச் செய்வேன். இதற்காக என் அம்மாவும் என் மனைவியும் என்னைக் கிண்டலாக விமர்சிப்பாங்க.

தேர்வாளர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். நேர்முகம் தொடர்கிறது.

இளமாறனுக்கான நேர்முகம் இனிமையாகவே தொடங்குகிறது. பதற்றமில்லாமல் இருப்பது பாராட்டத்தக்க விஷயம்தான். தொடக்கத்தில், தன் மேலதிகாரி தன்னைத் தொடர்ந்து பாராட்டுவதாக அவர் கூறுவதும், அதற்கான காரணங்களாக அவர் சொல்வதும் அவர்மீது ஒரு நல்ல கருத்தைப் பதியவைக்க உதவுகின்றன.

பாராட்டுதலுக்கு மகிழ்வது என்பது இயல்புதான். ஆனால் கூடப் பணிபுரிபவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது ஒரு மிக லேசான சங்கடத்தைக்கூட இளமாறனுக்கு ஏற்படுத்தவில்லை என்பதைத் தேர்வாளர்கள் கவனிக்காமல் இருக்க மாட்டார்கள்.

தனக்கு எதிரான விமர்சனம் எதுவுமே வந்ததில்லை என்பதை அவசரமாக இளமாறன் வெளிப்படுத்துவது பக்குவமின்மையைக் காட்டுகிறது. மிக ஆழமான விமர்சன​ங்கள் இல்லாவிட்டாலும், ஓரளவு விமர்சனத்தையாவது யாருமே எதிர்கொண்டிருந்திருப்போம். பால பருவத்திலும், இளமைப் பருவத்திலும் நம்மைச் சரியாகச் செதுக்குவதற்காகத்தான் நமது நலம் விரும்பிகள் விமர்சித்திருப்பார்கள்.

இதன் காரணமாகத்தான் வேறொரு எதிர்மறை விமர்சனத்தைக் கூறச் சொல்கிறார்கள் தேர்வாளர்கள். அப்போதும் தன் பலவீனத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தன்னைப் பற்றிய புகழ்ச்சியான விஷயத்தையே வெளிப்படுத்துகிறார் இளமாறன்.

தேர்வாளர்கள் உங்களிடமிருந்து நேர்மையான பதில்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். தற்பெருமைகள் ஏற்கத்தக்கவை அல்ல - அதுவும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு இளமாறனின் பதில்கள் அவர் தன்னைப் பற்றிக் கூறும் அனைத்துப் பதில்களுமே மிகைப்படுத்தப்பட்டவையோ என்ற சந்தேகத்தை எழுப்பக்கூடியவை.

அதே சமயம் நீங்கள் வெளிப்படுத்தும் உங்கள் பலவீனம் நீங்கள் விண்ணப்பித்துள்ள வேலைத் தகுதிக்கே பலவீனமானதாக இருக்கக் கூடாது. ‘‘எனக்குப் புதியவர்களைக் கண்டால் பேச்சே வராது சார். இதைப் பற்றி நிறைய ​பேர் விமர்சித்திருக்கிறார்கள்” என்று நீங்கள் கூறினால், (பலரைச் சந்தித்து வாதத் திறமையால் திருப்திப்படுத்த வேண்டிய) சேல்ஸ்​ மேனேஜருக்கான​ வேலைக்கு உங்களைத் தேர்ந்தெடுப்பார்களா?

‘உண்மையைச் சொல்வதில் என்ன தப்பு?’ என்கிறீர்களா?

உங்கள் வேலைக்கு எந்தப் பாதகமும் விளைவிக்காத உங்களது வேறு ஏதாவது பலவீனத்தைச் சொல்லுங்கள். அதுவும் நேர்மைதான் அல்லது “தொடக்கத்தில் புதியவர்களிடம் பேசத் தயங்கினேன். விமர்சனங்கள் வந்தன. பலவிதமாக முயன்று அந்தக் குறையைச் சரி செய்து​ கொண்டுவிட்டேன்’’ என்பதுபோல் கூறுங்கள்.

நம் தவறுகள் என்ன என்பதை உணர்ந்து கொண்டால்தான் அவற்றைச் சரி செய்து கொள்ளக் கொஞ்சமாவது முயல்வோம். நம் தவறுகள் என்ன என்பதே தெரியவில்லை என்றால், நாம் செய்வதெல்லாம் சரியானவை என்ற எண்ணம் வந்து விடும். தேங்கி விடுவோம். இப்படியொரு மனப்போக்கு நமக்கு இருக்கக் கூடாது என்பதைத்தான் தேர்வாளர்கள் எதிர்பார்ப்பார்கள். எனவே அதற்குத் தகுந்தமாதிரிதான் உங்கள் பதில்கள் இருக்க வேண்டும்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x