Last Updated : 16 Dec, 2014 04:20 PM

 

Published : 16 Dec 2014 04:20 PM
Last Updated : 16 Dec 2014 04:20 PM

காமெடியில் கலக்கும் மேசூன்

அரங்கம் நிறைய மனிதர்கள். மேடையில் உயரமான ஒற்றை நாற்காலியில் அமர்ந்து, முகபாவனைகளுடன் பேசிக்கொண்டே இருக்கிறார் மேசூன் ஸயித். பார்வையாளர்களிடமிருந்து வெடித்துக் கிளம்புகிறது சிரிப்புச் சத்தம்.

அமெரிக்காவில் ஸ்டாண்ட் அப் காமெடி வழங்கும் முதல் முஸ்லிம் பெண். நடிகை. எழுத்தாளர். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருப்பவர். பாலஸ்தீனத்தில் அகதிகளாக வசிக்கும் குழந்தைகளுக்குத் தன்னுடைய வருமானத்தின் பெரும் பகுதியைச் செலவிட்டுக் கொண்டிருப்பவர் என்று பல சிறப்புகளையும் சமூகப் பொறுப்புகளையும் கொண்டவர். நியுஜெர்ஸியில் வசித்து வரும் 40 வயதான மேசூன், பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்.

99-ல் ஒன்று

‘பெண், முஸ்லிம், பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவள் என்று எனக்கு 99 பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, மூளை வாதம்’ என்ற அவருடைய பேட்டி உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றது. இதுவரை 50 லட்சம் தடவை அந்தப் பேட்டி பார்வையிடப்பட்டிருக்கிறது. 37 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சினையால் வெளியேறிய குடும்பங்களில் மேசூனின் குடும்பமும் ஒன்று. மூளை வாதத்துடன் பிறந்ததால், அவரது தலையும் உடலும் எப்பொழுதும் ஆடிக்கொண்டே இருக்கும். எளிதாகப் பேசவும் முடியாது. ஆனால் மேசூனின் குடும்பம் அவரை அக்கறையாகப் பார்த்துக்கொண்டது. மற்றக் குழந்தைகளைப் போலவே மேசூனையும் நடத்தினார் அவரது அப்பா. ஒவ்வொரு விஷயத்தையும் மகள் முயற்சி செய்யும்போது, ‘உன்னால் முடியும்… உன்னால் முடியும்…’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதேபோல, ‘என்னால் முடியும்… நான் செய்துவிடுவேன்…’ என்று மேசூனும் சொல்லிக்கொள்வார்.

படிப்பு, நடிப்பு, நடனம் போன்றவற்றில் மேசூன் கவனம் செலுத்தினார். சிறந்த மருத்துவமும் யோகாவும் அவரது உடலை ஓரளவு முன்னேற்றியிருந்தன. பட்டப் படிப்புக்குப் பிறகு, அவரது ஆர்வம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திரும்பியது.

சில காலத்துக்குப் பிறகு ஸ்டாண்ட் அப் காமெடிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சீரியஸான அரசியல் பிரச்சினைகளில் இருந்து கலகலப்பான குடும்பப் பிரச்சினைகள் வரை காமெடியில் கொண்டு வந்தார். மேசூனின் நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு அதிகரித்தது. அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப காமெடிகளை மாற்றிக்கொண்டே இருப்பதால், எப்போதும் புதுமையான நிகழ்ச்சியாகவே இருக்கும்.

குழந்தைகளுக்காக

இன்று உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஒரு மாற்றுத்திறனாளியாக மாறிவிடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. போர்கள், சண்டைகள், விபத்துகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றனர்.

மேசூன் ஒருமுறை பாலஸ்தீனத்துக்குச் சென்றபோதுதான் அகதிகள் முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பரிதாப நிலையைச் சந்திக்க நேர்ந்தது. போரால் கை, கால்களை இழந்து தவித்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கு மருத்துவம், கல்வி அளிக்க முடிவு செய்தார். ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தினார். வருடத்தில் மூன்று மாதங்கள் பாலஸ்தீனத்தில் தங்கி, குழந்தைகளைக் கவனித்துக்கொள்கிறார். இதற்காகத் தன்னுடைய வருமானத்தின் பெரும்பகுதியைச் செலவிடுகிறார்.

வேண்டாம் இரக்கம்

மாற்றுத்திறனாளிகள் குறித்த அடிப்படை புரிதல்கள்கூட பெரும்பாலானவர்களிடம் இல்லை என்று வருத்தப்படும் மேசூன், சாதாரண மனிதரைப் போல மாற்றுத்திறனாளியையும் மதிக்க வேண்டும், அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிக்கு வேண்டிய தேவைகளையும் செய்து தரவேண்டும் என்கிறார்.

மாற்றுத்திறனாளிகளிடம் அனுதாபமோ, இரக்கமோ காட்ட வேண்டாம், அவர்களைச் சமமாக நடத்தினால் போதும். மாற்றுத்திறனாளி ஒருவர் சாதனை செய்தால், அவர் பெயருடன் ‘மாற்றுத்திறனாளி’ என்ற முத்திரை குத்தக் கூடாது. அது சாதனையைச் சாதனையாகப் பார்க்க விடாமல் தேவை இல்லாத இரக்கத்தைக் கொடுத்துவிடும் என்கிறார் மேசூன்.

ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு மேசூனுக்குக் கிடைத்தது. அந்தத் திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். திரைக்கதையும் எழுதி வருகிறார். நியுயார்க் அரபு-அமெரிக்க நகைச்சுவை விழாவைக் கடந்த 11 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் மனித உரிமை மீறல்களைப் பற்றித் தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.

வேண்டாம் சலுகை

தன்னுடைய திறமையும் உழைப்பும் மட்டுமே காமெடி, திரைப்படம், எழுத்து என்று வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள வைத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்கிறார் மேசூன். ஒருவேளை ஆஸ்கர் விருது அவருக்குக் கிடைத்தால், அந்த விருதுக்கு தனது உடல் குறைபாடு ஒரு காரணமாக இருக்குமேயானால் அவர் ஆஸ்கரை ஏற்றுக்கொள்ள மாட்டார். சாதாரணமானவர்களைப் போல தன்னால் எளிதாக எந்தச் செயலும் செய்ய இயலாவிட்டாலும் கூட, சலுகை பெறுவதில் உடன்பாடு இல்லை என்கிறார் மேசூன்.

திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று சொல்லிவந்த மேசூன், அமெரிக்காவில் வசிக்கும் காஸா அகதியைக் கைப்பிடித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x