Published : 10 Nov 2014 10:02 AM
Last Updated : 10 Nov 2014 10:02 AM

இந்தியப் பொருளாதாரம் - ஒரு பார்வை

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்தே கணக்கிடுவார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தியாகக் கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்புகள்தான். ஒரு நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற, வேளாண்மை, தொழில், கட்டுமானம், சேவைத் துறை ஆகியவற்றின் பங்கு மிகவும் முக்கியம்.

வானம் பார்த்த பூமி

இந்தியாவில் அதிகபட்சமாக 60 சதவீதம் பேர் வேளாண்மைத் துறையை முழுவதுமாகச் சார்ந்து வாழ்கின்றனர். இந்திய விவசாய நிலங்களில் 55 சதவிகித நிலம் வறட்சி மற்றும் நீர்வளம் இல்லாத, மழையையே விளைச்சலுக்கு நம்பி இருக்கக்கூடிய நிலங்கள்.

மொத்தம் உள்ள 141.23 மில்லியன் ஹெக்டேர் இந்திய வேளாண் நிலங்களில் 77.55 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் வறட்சியானவை. பருவநிலை மாற்றம், வீரிய விதைகள் பயன்படுத்தாமை, மண்வளம் மங்கிப்போதல் முக்கிய சவால்களாக இருக்கின்றன. மக்கள் தொகை உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் உணவு உற்பத்தி 11- வது ஐந்தாண்டு திட்டத்தில் 3.7 சதவீதம், 12- வது ஐந்தாண்டு திட்டத்தில் 4.0 சதவீதம், எனக் குறைந்த வளர்ச்சியையே வேளாண்துறை காட்டுகிறது.

வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தில் மக்கள் வேளாண்துறையைச் சார்ந்திருப்பது குறைந்து கொண்டே செல்கிறது. மேலும் உபரி தொழிலாளர்கள் மற்ற துறைகளை நாடிச் செல்கின்றனர்.

சேவையின் சேவை

இன்றைய இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகப் பங்களிப்பது சேவைத்துறையே . இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் அந்நிய நாட்டையே சார்ந்திருக்கின்றன.

கட்டுமானத் துறையில் வேகமாக வளர்ச்சி பெற்றாலும் நமது பொருளாதாரப் போட்டியாளரான சீனாவை விட மிகக் குறைவான வளர்ச்சியே ஆகும். மேலும் கட்டுமானத் துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குத் தக்க பாதுகாப்பும் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குதல் மிகவும் முக்கியமானது. மேலும் சேவைத்துறையின் பங்கு கிராமப்புற மக்களையும் சென்றடைவதாக இருத்தல் வேண்டும். இத்தகைய நேரங்களில் கிராமப்புறங்கள் நவீனமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

வளர்ந்து வரும் நமது நாட்டில் வேலைவாய்ப்பு, நல்ல வருமானம் கிடைப்பது மிகவும் சவாலாக உள்ளது. அரசின் செலவுகளும், மானியங்களும் அதிகரித்தாலும் மக்களின் சேமிப்பு, முதலீடு, மூலதனம் அதிகரிக்கவில்லை. மக்கள் ஆடம்பர மற்றும் சொகுசு வாழ்க்கையையே நாடிச் செல்கின்றனர். யாரும் உழைக்கவோ, முதலீடு செய்யவோ முன் வருவதில்லை. இதனால் நாட்டின் உற்பத்தி வெகுவாகக் குறைந்து அயல்நாட்டின் உற்பத்தி பொருட்களையே நம்பி வாழ்கின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது.

கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தி மேற்கத்திய நாடுகளுக்கு இணையாகக் கல்வி தரத்தை உயர்த்துதல், அத்தியாவசியமானது. கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல் வளரும் இந்தியாவிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

- மா. திருநீலகண்டன்
பொருளாதாரத் துறை ஆராய்ச்சி மாணவர், மதுரை
thiruneel11@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x