Last Updated : 28 Feb, 2017 10:27 AM

 

Published : 28 Feb 2017 10:27 AM
Last Updated : 28 Feb 2017 10:27 AM

தேர்வுக்குத் தயாரா? - பாட அறிவைத் தாண்டி!

பத்தாம் வகுப்பு - ஆங்கிலம் தாள் 2

அனைத்துப் பாடங்களையும் முழுவதுமாகப் படித்திருக்கும் நிலையில், ஆங்கிலம் இரண்டாம் தாளையும் சிறப்பாக படித்துவிடுவோம். ஆங்கிலம் இரண்டாம் தாள், Non-Detailed (35 மதிப்பெண்கள்) மற்றும் Composition (65 மதிப்பெண்கள்) என இரு பகுதிகளை உள்ளடக்கியது.

கதையும், கதாபாத்திரங்களும்

Non-Detailed பகுதியில் Fill in the blanks, Match the following, Choose the best Answers, Comprehension, Mind Mapping என முதல் 6 வினாக்கள் தலா 5 ஒரு மதிப்பெண் வினாக்களுடன் இடம்பெற்றிருக்கும். இவற்றுக்கு விடையளிக்க 7 கதைகளை வாசித்திருப்பதும், கதாபாத்திரங்களை அறிந்திருப்பதும் போதுமானது. தமிழ் வழி மாணவர்கள் ‘கெய்டு’களின் உதவியுடன் கதைகளைத் தமிழில் வாசித்திருப்பார்கள். ஆனால் முழு மதிப்பெண்ணுக்கு அவை போதாது. எனவே கதைகளை அவ்வப்போது ஆங்கிலத்திலும் வாசிக்க வேண்டும்.

மேலும் கதாபாத்திரங்களின் பெயர்களைத் தனியாகக் குறித்து வைத்துத் திருப்புதல் மேற்கொள்வதும் உதவும். 6-வது வினாவான Mind Mapping பகுதிக்கு விடையளிக்க, கதையையும் கதாபாத்திரங்களையும் அறிந்து வைத்திருப்பதோடு, அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களில் திருப்புதல் மேற்கொள்வது அவசியம். 7 கதைகளில் 1, 4-வது பாடங்களில் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவற்றில் கூடுதல் கவனம் தேவை.

பத்தியும் பாயிண்டுகளும்

Non-Detailed பகுதியின் 7-வது வினா Paragraph. கொடுக்கப்பட்டிருக்கும் 3-லிருந்து ஒன்றை எழுத வேண்டிய இப்பகுதிக்கு, ஏதேனும் 5 கதைகளைப் படித்திருந்தால் போதுமானது. அவற்றிலும் 1, 3, 6 ஆகிய பாடங்களின் வினாக்கள் சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கும் படிப்பதற்கு எளிமையானவை. செறிவாக Paragraph எழுதி அதிக மதிப்பெண் வாங்க விரும்பும் மாணவர்கள், அதிகப்படியான பாயிண்டுகள், கதாபாத்திரங்களை உள்ளடக்கிய 4-வது பாடத்திலிருந்து தங்களது வினாவினைத் தேர்வு செய்யலாம்.

பாயிண்டுகளாகப் படித்திருந்தாலும் அவற்றைப் பத்தி வடிவிலேயே எழுதுங்கள். பத்தியில் 7 முதல் 10 பாயிண்டுகள் இருப்பதோடு உரிய தலைப்பையும் இட வேண்டும். நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணை இலக்காகக் கொண்டவர்களுக்கு ஒரு மதிப்பெண்ணைப் பறிக்கும் வாய்ப்புள்ள பகுதி என்பதால், எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையும் இன்றி எழுதிப் பழகுவது அவசியம்.

தனி மதிப்பெண் கவனம்

வினாத்தாளின் இரண்டாம் பிரிவான Composition பகுதி Language functions, Communicative Skills, Expansion of Ideas ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது. 15 மதிப்பெண்களை உள்ளடக்கிய Language functions பிரிவு, Note making and summarising (10 mark), Complete the Dialogue (5 mark) ஆகியவற்றைக் கொண்டது. Note making and summarising விடையில், Note making / Hints, Rough Copy, Fair Copy, Title ஆகியவை தனி மதிப்பெண்களுக்கு உரியவை என்பதால் அவற்றை அவசியம் எழுத வேண்டும். இவற்றிலும் Fair copy அதிக முக்கியத்துவம் உடையது என்பதால், அனைத்து மாணவர்களும் இப்பகுதிக்கு விடையளித்து அவசியம். Complete the Dialogue பகுதியைப் பொறுத்தவரை உடனடியாக விடை எழுதாது, நன்றாகப் படித்துப் பார்த்து உரிய வாக்கிய அமைப்பினை அறிந்து எழுத வேண்டும்.

கைகொடுக்கும் கடிதங்கள்

அடுத்து வரும் Communicative Skills பிரிவில், Write a Dialogue வினாவிற்கு எனத் தேர்ந்தெடுத்த முக்கிய வினாக்களில் பயிற்சி பெற்றிருந்தாலே போதும். அவற்றிலிருந்து ஒரு வினாவையே திரும்பத் திரும்பக் கேட்டுவருகிறார்கள். Complete the letter மதிப்பெண் இழப்புக்குரிய ஓரிரு வினாக்களில் ஒன்று. Body of the Letter மட்டுமே எழுத வேண்டும் என்பதால், அதனை எப்படி ஆரம்பிப்பது என்பதையும் எப்படி முடிப்பது என்பதையும் தெரிந்துவைத்திருந்தாலே மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம்.

Formal வகையில் 4, Personal வகையில் 2 எனத் தேர்வு செய்த 6 கடிதங்களை நன்றாகப் படித்திருப்பதும், பிழையின்றி எழுதுவதும் இப்பகுதியில் முழு மதிப்பெண் பெற உதவும். அடுத்து வரும் Prepare an Advertisement பகுதி மிகவும் எளிமையானது. ஒரு பக்கத்தை முழுமையாக ஒதுக்கி, பென்சில் மற்றும் பேனா மட்டுமே உபயோகித்து நேர விரயமின்றி இப்பகுதிக்கு விடையளிப்பது அவசியம். Preparation, Title, Address, Offer / Slogan, Picture ஆகிய தலா 1 மதிப்பெண்ணுக்குரிய 5 கூறுகள் இந்த வினாவில் இடம் பெற வேண்டும்.

பொது அறிவு உதவும்

Expansion of Ideas பிரிவில் Expanding Guide Lines, Non-verbal comprehension, paragraph writing, Matching product and slogans, Road Map, Poem and paraphrase, Translation / Picture Comprehension ஆகியவை தலா 5 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். இவை யனைத்துமே சற்றே ஆர்வமும் பயிற்சியும் இருந்தால் எழுதிவிடலாம். Paragraph writing வினாவில், Title, Paragraph, Moral / Theme தனியாகக் குறிப்பிட்டு எழுதுவது அவசியம். Road Map வினாவில் தனி மதிப்பெண் இல்லை என்றாலும் Title எழுதுவது நல்லது. சுமார் 50 வார்த்தைகளில் பாயிண்டுகளாகவோ, பத்தி வடிவிலோ எழுதலாம்.

Translation வினாவில் Tense சரியாக உபயோகிப்பது அவசியம். கொடுக்கப்பட்ட சாய்ஸில், Translation-ஐ விட Picture Comprehension எழுதுவது ஒப்பீட்டளவில் எளிது. இப்பகுதிக்கு விடையளிக்க வெறும் பாட அறிவை மட்டுமே நம்பியிருக்காமல், பொது அறிவை வளர்த்துக்கொள்வதும் அன்றாடச் செய்திகளை வாசிப்பதும் முழு மதிப்பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கும்.

(பாடக் குறிப்புகளை வழங்கியவர் ஆர்.தாமோதரன்,
ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்,
தேவாங்க ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவை)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x