Published : 16 Aug 2016 10:49 AM
Last Updated : 16 Aug 2016 10:49 AM

வெற்றிமுகம்: தொட்டதற்கெல்லாம் திட்டு அன்று; தங்க மகன் இன்று

வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார் ஆசிரியர். ஓரிடத்தில் உட்காராமல் சிட்டுப் போல அங்கும் இங்கும் ஓடுகிறான் அந்தச் சிறுவன். குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடல் பாட, அவனோ ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். அனைவரும் ஓவியத்துக்கு வண்ணம் தீட்ட, அந்தச் சிறுவன் மற்றவர்களை முழங்கையால் இடித்தபடியும், சிரித்துக்கொண்டும் இருக்கிறான். உடனே அந்தச் சிறுவனின் அம்மாவுக்கு, ‘உங்கள் மகன் வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை’ என்று குறிப்பெழுதி அனுப்புகிறார் வகுப்பு ஆசிரியர். அவனுடைய அம்மா நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். தன் மகனைப் போல ஆயிரம் குழந்தைகளைப் பார்த்தவர் என்பதால், குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்து அமைதியாகிவிட்டார்.

ஆனால் அந்தச் சிறுவனைக் குறித்த புகார்கள் மட்டும் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்தபடி இருந்தன. ஒரு கட்டத்தில் வயதுக்கு ஏற்ற மனவளர்ச்சி இல்லாததையும் உணர்ந்தார் அந்தத் தாய். உடனே தங்கள் குடும்ப மருத்துவரிடம் மகனை அழைத்துச் சென்றார். அவன் ADHD (Attention Deficit Hyperactivity Disorder) என்று சொல்லப்படும் கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.

ஒன்பது வயதில் கவனச் சிதறல் மற்றும் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவன், இன்று ஒலிம்பிக் போட்டிகளின் தங்க மகன்! நீச்சல் போட்டிகளில் 22 தங்கப் பதக்கங்களைக் குவித்து, ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டிகளில் அதிக தங்கம் வென்றவர். நீச்சல் போட்டிகளில் புதிய சாதனைகளை நிகழ்த்திவரும் மைக்கேல் ஃபெல்ப்ஸ்தான் அந்தச் சிறுவன்!

கவனம் குவிந்தது எப்படி?

குடும்ப அமைப்பும் மைக்கேலுக்கு உகந்ததாக இல்லை. இரண்டு அக்காக்களுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி மைக்கேல் ஃபெல்ப்ஸ். அவருக்கு ஒன்பது வயதாகும்போது அவருடைய பெற்றோர் பிரிந்துவிட்டனர். தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள, அம்மாவின் அரவணைப்பு மட்டும்தான் கிடைத்தது. இப்படியொரு சூழலில் கற்றல் குறைபாடும் சேர்ந்துகொண்டது. எதிலுமே கவனத்தைக் குவிக்க முடியாத அந்தச் சிறுவனால் எப்படி அடுக்கடுக்கான சாதனைகளைச் செய்ய முடிந்தது? அதற்கான பதில் மைக்கேல் ஃபெல்ப்ஸ்ஸின் அம்மா தெபோராவிடம் இருக்கிறது. தெபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் அவர், தன் மகனின் குறைபாட்டை அறிந்து அதிர்ச்சியடைந்தாலும் மனம் தளராமல் மருத்துவரை அணுகினார்.

புத்தியே மாமருந்து!

மைக்கேலின் அதீத ஆற்றலை ஒருமுகப்படுத்துவதுதான் தெபியின் முழுநேர சிந்தனையாக இருந்தது. அக்காக்களுடன் போட்டி போட்டுக்கொண்டு ஏழு வயதிலேயே நீச்சல் பயிற்சியில் சேர்ந்திருந்தார் மைக்கேல் ஃபெல்ப்ஸ். அதனால் நீச்சல் பயிற்சியில் தன் மகனை அதிக நேரம் செலவிடவைத்தார் தெபி. குறைபாட்டைச் சரிசெய்யும் மருந்துகளையும் கொடுத்தார்.

பள்ளியில் மருந்து சாப்பிடுவது பத்து வயது மைக்கேலுக்குப் பிடிக்கவில்லை. “என் நண்பர்கள் எல்லாம் மதிய உணவு சாப்பிடுவார்கள். நான் மட்டும் தினமும் எங்கள் ஸ்கூல் நர்ஸிடம் போய் மாத்திரை வாங்கிச் சாப்பிட வேண்டும். அதைப் பார்த்து என் நண்பர்கள் என்னைக் கேலி செய்ததும் எனக்கு அவமானமாக இருந்தது. எதற்கு இந்த மாத்திரை? ஒரு இடத்தில் உட்கார்ந்து ஒரு வேலையைச் செய்யத்தானே? மாத்திரை இல்லாமலேயே சிந்தனையை ஒருமுகப்படுத்தினால் என்ன என்று தோன்றியது” என்று தான் கடந்துவந்த பாதை குறித்து சுயசரிதை புத்தகமான ‘No Limits’-ல் எழுதியிருக்கிறார் ஃபெல்ப்ஸ்.

அதன் பிறகு படிக்கும்போதும், நீச்சல் பயிற்சியிலும் சிந்தனையை ஒருமுகப்படுத்தப் போராடினார். “உங்கள் புத்திதான் உங்களிடம் இருக்கும் மாமருந்து. அந்த மருந்து மூலம் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்” என்று பின்னாளில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ஃபெல்ப்ஸ்.

மைக்கேல் ஃபெல்ப்ஸின் தாய் தெபோரா

மூளைக்குள் ஓடும் கடிகாரம்

கற்றல் குறைபாடு என்பது வளர்ச்சி சார்ந்தது என்பதால் ஒவ்வொரு செயலிலும் அதன் தாக்கம் இருக்கும். “இவனால் எதிலுமே கவனத்தைச் செலுத்த முடியாது” என்று வகுப்பு ஆசிரியரால் சொல்லப்பட்ட ஃபெல்ப்ஸ், ஐந்து நிமிடம் பங்கேற்கப் போகும் நீச்சல் போட்டிகளுக்காக ஓரிடத்தில் தொடர்ந்து நான்கு மணி நேரம் உட்கார்ந்தார். அதிகாலையில் எழுந்து வீட்டுப் பாடங்களை எழுதினார். இவற்றைச் சாத்தியப்படுத்தியது அவரது மனஉறுதி.

கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளின் மற்றொரு சிக்கல் நேர மேலாண்மை. எதை எப்போது செய்துமுடிக்க வேண்டும் என்ற எந்தத் திட்டமிடலும் அவர்களிடம் இருக்காது. ஆனால் இதையும் தன் அக்காக்களின் உதவியோடு கடந்துவந்தார் ஃபெல்ப்ஸ். வீட்டில் அனைவரும் ஒவ்வொரு வேலையையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிப்பது என்று திட்டமிட்டார்கள். அதன்படி ஃபெல்ப்ஸ் தன் வேலைகளைச் செய்து முடித்தார்.

தன் மகனின் மூளைக்குள் எப்போதும் ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் என்று சொல்கிறார் தெபி. “நீச்சல் போட்டியில் குறிப்பிட்ட தூரத்தை இத்தனை விநாடிகளுக்குள் கடந்துவிட வேண்டும் என்று என் மகன் திட்டமிடுவான். அலாரம் எதுவும் தேவைப்படாமல் அவன் குறிப்பிட்ட நேரத்துக்குள் இலக்கை அடைந்துவிடுவான்” என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் அவர்.

மாற்றுக் கோணம்

காலை, மாலை என்று தொடர்ந்து நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார் ஃபெல்ப்ஸ். பதினோரு வயது சிறுவனின் அபார திறமையையும் ஈடுபாட்டையும் பார்த்து, ‘2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இவன் உலக சாதனை படைப்பான்’ என்று நம்பினார் அவருடைய பயிற்சியாளர். ஆனால் அவரது நம்பிக்கையை அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றினார் மைக்கேல் ஃபெல்ப்ஸ். 16-வது வயதில் முதல் உலக சாதனையை நிகழ்த்தியவர், 19-வது வயதில் 2004-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஆறு தங்கம் உட்பட எட்டுப் பதக்கங்களை வென்றார். அதற்குப் பிறகு மைக்கேல் ஃபெல்ப்ஸ்ஸுக்கு ஏறுமுகம்தான்!

எந்த மாணவனால் எதிலும் கவனம் குவிக்க முடியாது என்று முத்திரை குத்தப்பட்டதோ அதே மாணவன்தான், அந்த முத்திரையைத் தங்கப் பதக்கங்களால் மாற்றிக் காட்டினார். மூளைச் செயல்பாடுகளில் மந்தம் என்று குறிப்பு எழுதப்பட்ட சிறுவன்தான், தான் பங்கேற்ற நீச்சல் போட்டிகளின் வீடியோவைப் பார்த்து, தவறுகளைச் சரிசெய்யும் நுட்பத்தையும் அறிந்தார். பலரும் ADHD என்பதை குறைபாடு என்னும் கோணத்தில் பார்த்தார்கள். ஆனால் மைக்கேல் ஃபெல்ப்ஸின் பார்வையும் கோணமும் வேறாக இருந்தன. அந்தச் சிந்தனைதான் முப்பத்தியோரு வயதில் ஒலிம்பிக் வரலாற்றில் அவருக்குத் தனி இடத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x