Published : 25 Sep 2018 11:35 AM
Last Updated : 25 Sep 2018 11:35 AM

வரலாறு தந்த வார்த்தை 34: இதயம் பேசட்டும்!

இந்த வாரம் இரண்டு செய்திகள். இரண்டு சொற்றொடர்கள். இரண்டுமே ‘இதயம்’ தொடர்பானது.

ஒன்று, கடந்த வாரம் ‘முத்தலாக்’ தடை அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தச் செய்தி, இஸ்லாமியப் பெண்கள் பலரின் இதயத்தில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

இரண்டு, வரும் 29-ம் தேதி ‘உலக இதய நாள்’ கடைப்பிடிக்கப்பட இருக்கிறது.

திருக்குறளில் காமத்துப் பால் அதிகாரத்தில் ‘பாலொடு தேன்கலந் தற்றே’ எனத் தொடங்கும் குறள் ஒன்றை வள்ளுவர்  படைத்திருக்கிறார். அந்தக் குறளின் பொருள் இதுதான்: ‘மென்மையாகப் பேசுகிற மொழியை உடைய என் மனைவியின் வெண்மையான பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலுடன் தேனைக் கலந்ததைப் போன்ற சுவையை உடையது’.

அடடா..! காதலிக்காமலா, வள்ளுவர் தாடி வைத்திருப்பார்? மேற்கண்ட, குறளைப் போல, தம்பதிகள் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசி, கொஞ்சிக் குலாவி, வாழ்க்கையை நடத்தி வந்தால், அங்கே விவாகரத்து என்ற எண்ணமே அவர்களின் மனதிலிருந்து விடைபெற்றுவிடுமே.

கட்டியிருக்கும் துணிபோல

குறளை ஆராய்ந்ததுபோதும்… இப்போது ‘இதயம்’ திறப்போம். ஆங்கிலத்தில் ‘Wear your heart on your sleeve’ என்ற சொற்றொடர் இருக்கிறது. அதாவது, ஒருவர் மீது நாம் கொண்ட அன்பை அவரிடம் மறைக்காமல் வெளிக்காட்டுவது.

முன்பெல்லாம் ராஜாக்கள், குதிரைகளின் மீது அமர்ந்துகொண்டு ஈட்டியைக் கையில் வைத்துக்கொண்டு இளவரசிகளுக்காகப் போராடுவதுண்டு. அப்போது, உண்மையாகவே அந்த இளவரசியின் மீது அன்பு கொண்டிருந்தால், தங்கள் கைகளில் கைக்குட்டை அளவில் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு போரிடுவார்கள். அப்போது, அந்த இளவரசிக்குத் தன் மீது யார் உண்மையாகவே அன்பு கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடுமாம். கையில் கட்டியிருக்கும் துணியைப் போல, உங்கள் இதயத்தை வெளிப்படையாகக் காட்டுங்கள் என்பது இதன் பொருள்.

இந்தச் சொற்றொடரை, முதன்முதலில் பிரபல நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் 1604-ல் தனது ‘ஒத்தெல்லோ’ நாடகத்தில் பயன்படுத்தியிருந்தார்.

பொதுவாக, விவாகரத்தின்போது யார் விவாகரத்துச் செய்யப்படுகிறார்களோ அவர்களுக்கு ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வி இருக்கும். அது பெரிய அளவில் அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும். எந்த அளவுக்கு அச்சம் என்றால், இதயம் வாய் வழியாக வெளியே வந்துவிடும் அளவுக்கு! ஆம், அந்த அளவுக்கு வேகமாக அவர்களின் இதயம் துடிதுடிக்கும்.

இத்தகைய அச்சத்தை ஆங்கிலத்தில் ‘Have your heart in your mouth’ என்ற சொற்றொடரின் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறார்கள்.  ‘தி இலியட்’ எனும் தனது கவிதையில் முதன்முறையாக இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினார் கவிஞர் ஹோமர்.

ஆகவே, ஆண்களே, எப்போதும் ‘Wear your heart on your sleeve’. சண்டையே வராது. அதற்காக, மேற்கண்ட குறளைச் சொல்லிவிட்டு, ‘குறளுக்குப் பொய் அழகு’ என்று சொல்லிவிடாதீர்கள். அப்புறம், உங்கள் மனைவி குத்துக்கிற குத்தில் நிஜமாகவே ‘your heart in your mouth’ தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x