Last Updated : 08 Jan, 2019 10:43 AM

 

Published : 08 Jan 2019 10:43 AM
Last Updated : 08 Jan 2019 10:43 AM

இயர்புக் 2019: போட்டித் தேர்வுக்கான முழுமையான கையேடு

140 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பில் முதல்முறையாக ‘இயர்புக் 2019’ வெளியிடப்பட்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட தேசியப் போட்டித் தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட மாநிலப் போட்டித் தேர்வுகள், உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள், விநாடி வினாப் போட்டிகளில் பங்கேற்பவர்கள், நடப்பு விவகாரங்களை விரல் நுனியில் வைத்திருக்க விரும்புவோருக்கு உதவுவதற்கான முழுமையான கையேடாக இந்த இயர்புக் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

எட்டுப் பிரிவுகள்: இதில் சிறப்புக் கட்டுரைகள், நிகழ்வுகள் (Current Affairs), போட்டித் தேர்வு, அறிவியல், தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு/பொது அறிவு ஆகிய எட்டுப் பிரிவுகளில் கட்டுரைகள் உள்ளன.

25 சிறப்புக் கட்டுரைகள்

பல்வேறு துறைகள் சார்ந்து 2018-ல் நடந்த, 2019-ல் நடக்கவிருக்கும் முக்கியமான நிகழ்வுகளை ஒட்டி 25 சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. காவிரி நீர்ப் பங்கீட்டு பிரச்சினையின் ஒட்டுமொத்த வரலாற்றை அலசும் கட்டுரையைப் பொறியாளர் அ.வீரப்பன் எழுதியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலையொட்டி மக்களவை தேர்தல் வரலாற்றை விரிவாக அலசும் கட்டுரையை மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணி எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு உலகை உலுக்கிய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா-ஃபேஸ்புக் சர்ச்சையின் பின்னணியையும் வருங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அந்தரங்கத் தகவல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விளக்கும் கட்டுரையைக் கணினி, தொழில்நுட்ப எழுத்தாளர் சைபர் சிம்மன் எழுதியுள்ளார்.

போட்டித் தேர்வு எழுதுவோருக்குக் கைகொடுக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த விரிவான பகுதியை முனைவர் சு.செல்வகுமார் எழுதியுள்ளார். முக்கியமான தமிழ் நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள் குறித்த தகவல் தொகுப்பும் போட்டித் தேர்வுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளுக்குச் சிறப்பு கவனம்

போட்டித் தேர்வு சிறப்புப் பிரிவில் மத்திய அரசுப் பணித் தேர்வுகள், மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு வழிகாட்டும் கட்டுரைகளும் ஐ.எஃப்.எஸ். ஆவதற்கான படிப்புகள் குறித்த சிறப்புக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. ‘ஆங்கிலம் அறிவோமே’ புகழ் ஜி.எஸ்.எஸ். எழுதி இருக்கும் கட்டுரை, போட்டித் தேர்வுகளில் ஆங்கிலம் தொடர்பான கேள்விகளை எதிர்கொள்ளப் பெரிதும் உதவும்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்குத் தேசிய அளவில் இருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள், அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகள் எவை என்பது குறித்த விரிவான தொகுப்பை மூத்த பத்திரிகையாளர் பொன்.தனசேகரன் எழுதியுள்ளார்.

காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு குறித்த சிறப்புக் கட்டுரை, டாக்டர் கு. கணேசன் எழுதியுள்ள மருத்துவ அறிவியலுக்கான சிறப்புப் பகுதி, பல்வேறு அறிவியல் - தொழில்நுட்பக் கட்டுரைகள் ஆகியவை புத்தகத்துக்குச் சிறப்பு சேர்க்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x