Last Updated : 23 Oct, 2018 11:38 AM

 

Published : 23 Oct 2018 11:38 AM
Last Updated : 23 Oct 2018 11:38 AM

கரும்பலகைக்கு அப்பால்... 06 - ஆண்களுக்கான அவளதிகாரம்

ஒன்பதாம் வகுப்பில் பாரதிதாசனின் ‘குடும்பவிளக்கு’. சில செயல்பாடுகளுக்குப் பின் பாடத்தைத் தொடங்கலாம் என்று தோன்றியது.

“தம்பிகளா, தினசரி காலையில் எழுந்து பள்ளிக்குக் கிளம்புறதே பெரிய வேலைதானே!” என்றேன்.

“ஆமாங்கய்யா” என்றனர்.

“உங்கள் வீட்டில் யார் யாரெல்லாம் இருக்கீங்க, அவங்க ஒவ்வொருத்தரும் வீட்டில் என்னென்ன வேலைகள் பார்க்குறாங்க என்பதைக் குறிப்பேட்டில் எழுதுங்க” என்றேன்.

10 நிமிடங்களுக்குப் பின் மாணவர்கள் எழுதிய குறிப்பேடுகளை வாங்கி வைத்துக்கொண்டேன்.

“ஒரு முக்கியமான விஷயம் குறித்துப் பேசுவோம். ஒரு பெண் எப்படி இருக்கணும் சொல்லுங்க” என்றேன்.

அவர்கள் சொல்லிய செய்திகளைக் கரும்பலகையில் எழுதினேன்.

அடக்க ஒடுக்கமா இருக்கணும்.

வீட்டு வேலைகள், சமையல் வேலைகள் செய்யணும்.

தைரியமா இருக்கணும்.

அம்மா, அப்பா பேச்சைக் கேட்கணும்.

ஒழுக்கமா டிரஸ் பண்ணணும். அதிகம் சிரிக்கக்கூடாது.

தலை குனிஞ்சு நடக்கணும்.

ஆணுக்குச் சமமா இருக்கணும்.

வீட்டுக்கு யாராவது ஆம்பளைங்க வந்தால் அவங்க முன்னாடி வராமல் அரைக்குள்ளேயே இருக்கணும்.

பசங்க கிட்டே பேசக்கூடாது.

18 வயசு வரைக்கும் செல்போன் பயன்படுத்தக் கூடாது.

“ஏராளமான செய்திகளைச் சொல்லியிருக்கீங்க. ஆண் எப்படி இருக்கணும் என்று சொல்லுங்க?” என்றேன்.

தைரியமா இருக்கணும்.

வெட்கப்படக் கூடாது.

பயப்படக் கூடாது.

யாரையும் அடிக்கக் கூடாது. யாரிடமும் அடி வாங்கக் கூடாது.

குடிக்கக் கூடாது.

வேலைக்குப் போகணும்.

சிறிது நேரம் வகுப்பறை அமைதியானது. அவ்வளவுதான் போதும் என்று முடித்துக்கொண்டார்கள்.

காலந்தோறும் பெண்கள்

சரி. மகிழ்ச்சி என்று சொல்லிவிட்டுப் பாடக் குறிப்பேடுகளை எடுத்து வந்தேன். அவற்றிலிருந்து அறிந்தவை,

சமையலில் சில அப்பாக்கள் உதவுகிறார்கள். சில அப்பாக்கள் சமைக்கின்றனர். பெண் பிள்ளைகள் இல்லாத வீடுகளில் சில பையன்கள் அம்மாவுக்கு உதவியாக இருக்கின்றனர். மற்றபடி ஆணுக்கானவை, பெண்ணுக்கானவை என்று காலம் காலமாகச் சொல்லப்பட்ட வேலைகளையே பார்க்கின்றனர்.

பெண்ணைவிட உயர்ந்தவன் என்ற எண்ணம் பிறந்தது முதல் ஆணிடம் விதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒற்றைச் சொற்பொழிவில் இதை மாற்றிவிட முடியுமா? நேரம் கிடைக்கும் போதெல்லாம் இயல்பான உரையாடல்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

தெருவோரத்தில் மூன்று இளைஞர்கள். இருவர் கல்லூரி மாணவர்கள். மூன்றாமவன் வயதில் மூத்தவன், படிக்கவில்லை. பள்ளி செல்லும் பெண்ணுக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களைப் பார்த்ததும் ஆட்டோவில் ஏறிச் செல்கிறாள் அவள்.

அந்தப் பெண் பள்ளிக்குச் செல்லும், திரும்பும் வழிகளில் அவர்களின் தொல்லை அதிகரிக்கிறது. கல்லூரி மாணவனிடம் தானாகவே வந்து அவள் பேச வேண்டும் என்று பெரியவன் மிரட்டுகிறான். அவளை வீடியோ எடுக்கிறார்கள்.

இந்தத் தொந்தரவுகள் பொறுக்க முடியாமல் நடந்தவற்றைத் தன் அக்காவிடம் கூறுகிறாள். பசங்ககிட்டே பேசினால் சரியாகிவிடும் என்று தங்கைக்குத் தைரியம் சொல்கிறாள் அக்கா.  மறுநாள் காலையில் அவர்களிடம் சென்று பேசுகிறாள். அக்காவின் பேச்சைக் கொஞ்சமும் கேட்காமல் கோபம் கொண்டு பெரியவன் கத்தியால் அக்காவைத் தாக்குகிறான்.

‘அவளதிகாரம்’ படத்தை இங்கேயே நிறுத்தினேன்.

உரிமை மீறல் சகஜமா?

 “தம்பிகளா! இன்னும் 3 நிமிடம் படம் இருக்கு. இருந்தாலும் நாம் கொஞ்சம் பேசிட்டுப் பார்க்கலாம்” என்றேன்.

“உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்டேன்.

அந்தப் பசங்க டார்ச்சர் பண்றாங்க. பாவம் அந்தப் பொண்ணு!

படிக்கிற பொண்ணுக்கு ஃபேஸ்புக் எதுக்கு? அதில் சாட் பண்ணியிருப்பா!

பொம்பளைப் புள்ளைய அடிக்குறது தப்பு.

பொம்பளைப் பிள்ளைங்க எப்படி நடந்துக்கணும்னு சொல்றாங்க.

அவங்க அக்கா வந்து பசங்ககிட்டே பேசியிருக்கக் கூடாது. அதுவும் தொட்டுப் பேசினது தப்பு.

போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்திருக்கணும்.

பல்வேறு எண்ணங்களை மாணவர்கள் பகிர்ந்தனர். ம்....மகிழ்ச்சி.

“இப்போ மீதிப் படத்தையும் பார்க்கலாமா!”

மூன்று நிடங்கள் விரைவாக முடிந்தன. எல்லோரிடமும் அமைதி. ஆங்காங்கே கைதட்டல்கள்.

“அடடா, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கவே இல்லையே!” என்றேன்.

ஆமாங்கய்யா! படம் செமையா இருக்கு.

பொண்ணுக்குத் தைரியம் வேணும்.

யார் மேலயும் தேவையில்லாம கைவைக்கக் கூடாது.

உரையாடல் தொடராமல் நின்றுபோனது. சிறிது நேரம் கழித்து,

பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்கு என்ன சிரமங்கள் ஏற்பட்டிருக்கு? நீங்கள் பார்த்த நிகழ்வுகளை நாட்குறிப்பில் எழுதிட்டு வரமுடியுமா?” என்று கேட்டேன். சரி என்றனர் மகிழ்வோடு.

குழந்தைப் பருவத்திலிருந்தே பெண்ணின் மீதான மீறல்கள் தொடர்கின்றன. தவறு நடக்கும்போது முதல் பழி பெண்ணின் மீதே விழுகிறது. அவள் ஒழுங்கா இருந்திருக்கணும் என்ற வார்த்தைகளைப் பெண்களும் சொல்கிறார்கள்.

பெண்ணை அடிமைப்படுத்தும் கருத்துகளை ஆண், பெண் என யார் சொன்னாலும் அது ஆதிக்க மனப்பான்மைதானே!

மேலானவன் என்ற கற்பிதம்

பெண்களைக் கிண்டல் செய்வதும் சிறு மீறல்களும் தவறில்லை அல்லது  தங்கள் உரிமை என்பது பெரும்பாலான ஆண்களின் எண்ணம். இப்படியான உரிமை மீறல் காட்சிகள் பல திரைப்படங்களில் இடம்பெறுகின்றன. அவை  ஆணின் பெருமையைக் காட்டுவதாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன.

பலரும் பெண்ணுக்குப் பாடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆணுக்குப் பெண் கவர்ச்சிப் பொருளாகவே இருக்கிறாள். பெண் குறித்த கற்பிதங்கள் இல்லாமல் சக உயிராக ஆண் குழந்தைகளுக்கு உணரவைக்கும் செயல்பாடுகளே இன்றைய தேவை.

தான் பெண்ணைவிட மேலானவன் என்ற கற்பிதம் காலங்காலமாக ஆணின் மனத்தில் பதிந்திருக்கிறது. கெட்டிதட்டிப் போயிருக்கும் அந்த ஆதிக்க எண்ணங்களைச் சிறிது கிளறிவிட வேண்டும். பால் பாகுபாடு குறித்தும் சமத்துவம் குறித்தும் ஆண்கள் உணர்ந்து உரையாடும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொடர்ந்து செய்ய வேண்டிய இந்தப் பணிக்கு ‘அவளதிகாரம்’ சிறு தொடக்கப்புள்ளியாக அமையும்.

‘அவளதிகாரம்’

அவளதிகாரம் 

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x