Published : 10 Apr 2018 11:44 AM
Last Updated : 10 Apr 2018 11:44 AM

2020-ல் கோலோச்ச இருக்கும் 20 துறைகள்!

 

ன்று முன்னணியில் இருக்கும் ஒரு தொழில் துறை மூன்று அல்லது நான்காண்டுகளுப் பிறகும் அதே இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே. அந்த அளவுக்கு ஆண்டுதோறும் புதிய துறைகளும் புதிய பணிகளும் உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. அதற்கேற்ற மாதிரிப் புதிய படிப்புகளும் வடிவமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இத்தகையச் சூழலில் தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் டூ முடித்திருக்கும் மாணவர்களுக்கு எத்தகைய உயர் கல்வி அவசியம் என்கிற தொலைநோக்கு பார்வையில் ‘தி இந்து’வின் ‘எட்ஜ்’, ‘தி இந்து’ தமிழ் ‘வெற்றிக்கொடி’ ஆகிய இணைப்பிதழ்கள் இணைந்து ஏப்ரல் 7, 8-ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் ‘கல்வி மற்றும் பணிவாழ்க்கை கண்காட்சி 2018’ நிகழ்ச்சியை நடத்தின. பல்வேறு கல்வி நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று 2020-ம் ஆண்டில் கோலோச்சவிருக்கும் 20 துறைகளை மாணவர்களுக்கு அடையாளம் காட்டின.

சார்புநிலைப் படிப்புகள் அவசியம்

“தற்போது ஏகப்பட்ட கல்விப் புலங்களும் நிறுவனங்களும் உள்ளன. அவற்றில் எவை தரமானவை என்பதைப் பிரித்தறியும் ஆற்றலைதான் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியக் கல்லூரி கல்வித் திட்டத்தின்படி மேற்படிப்பில் அறிவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கலைப் படிப்புகளைப் படிக்கும் சாத்தியம் கிடையாது.

ஆனால், அயல் நாடுகளில் வெவ்வேறு துறைகளுக்கு இடையில் உள்ள சார்புகளையும் பிணைப்புகளையும் கொண்டாடும் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதேபோன்று இங்கும் உயிரியல், புள்ளியியலுடன் ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் உலக வரலாற்றையும் பொருளியலையும் கற்றறிந்த மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வேலைக்கானது மேற்படிப்பு என்கிற நிலை மாறி நுண்ணுணர்வு படைத்த இளைஞர்களை இந்திய உயர்கல்வி உருவாக்கும்” என்றார் நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய ‘தி இந்து’ குழும பதிப்பாளர் என். ரவி.

பெருமகிழ்ச்சியான அனுபவம்

உயர் கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் அகில இந்திய அளவில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டுவருவதைத் தன் சிறப்புரையில் சுட்டிக்காட்டினார் தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பலிவால். “ உயர் மதிப்பீடுகளை மனித மனங்களில் உயர் கல்வி விதைக்க வேண்டும். படிப்பது என்பதே பெருமகிழ்ச்சியான அனுபவம் எனக் கருதும் மனப்பான்மையைக் கல்வி வளர்க்க வேண்டும். இந்தப் புரிதலோடு உங்களுடைய எதிர்காலத்துக்கான கல்வியை எதிர்நோக்குங்கள்” என்றார்.

இரண்டு நாட்களிலும், 2020-ல் உலகை ஆளவிருக்கும் 20 துறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய பொறியியல் படிப்புகள், பலதரப்பட்ட மருத்துவப் படிப்புகள், மேலாண்மை, டேட்டா அனலடிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் உள்ள புதிய வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன. தொழில்நுட்ப அறிவியல் சார் துறைகள் மட்டுமின்றி வங்கி- நிதித் துறை, ஹோட்டல் மேலாண்மை, சமூக ஊடகங்கள் சந்தைப்படுத்துதல், வேளாண்மை, உள் அலங்காரம், சட்டப் படிப்பு, ஆராய்ச்சித் துறைகள், குடிமை பணித் தேர்வுகளுக்குத் தயாராகுதல் போன்றவை குறித்துப் புதிய கண்ணோட்டத்தில் கலந்துரையாடல்களும் விவாதங்களும் நடைபெற்றன.

குறிப்பாக, நீட் தேர்வு, சட்டத் துறைக்கான பொது நுழைவு தேர்வான கிளாட் (CLAT), இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் படிப்பதற்காக நடத்தப்படும் ஜெ.ஈ.ஈ நுழைவுத் தேர்வு, மாணவர்களின் அறிதிறனையும் ஆளுமையையும் சோதிக்கும் ‘Pyschometric test’ உள்ளிட்டவை இலவசமாக மாதிரித் தேர்வுகளாக நடத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x