Published : 21 Nov 2017 10:48 AM
Last Updated : 21 Nov 2017 10:48 AM

சமமற்ற கல்விப் பாதையைச் செப்பனிடுவோம்!

சமத்துவச் சமூகம் உருவாகக் கல்வி அனைவருக்கும் அடிப்படை தேவை. இதை உணர்ந்தே பல உலக நாடுகளில் குறைந்தபட்சம் மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரையிலாவது கட்டணமில்லாக் கல்வியை அரசு வழங்கிவருகிறது. சில நாடுகளில் பல்கலைக்கழக அளவிலான உயர்கல்விகூடக் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சமத்துவத்தைச் சாத்தியப்படுத்தும் கல்வியைப் பொருளாதாரச் சிக்கல்களை மட்டுமே கருத்தில்கொண்டு முன்நகர்த்தினால் போதாது. இங்கு நெடுங்காலமாகப் புரையோடிப்போன சமூகப் படிநிலைகளைக் களைய வேண்டியதும் அவசியம்.

ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்

இந்தியாவில் கல்வியை அடிப்படை உரிமையாக அறிவித்து அனைவரும் கல்வி பெறும் வாய்ப்பை அரசு உருவாக்க வேண்டும் என்று ஜோதிபா பூலே, சாவித்திரிபாய் பூலே, அம்பேத்கர் உள்ளிட்டவர்கள் வாதிட்டு அதற்காகப் போராடினர். அனைவருக்கும் கல்வி என்பதுடன் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி வழங்கப்படும்பட்சத்தில்தான் சமூக நீதி சாத்தியப்படும் என்பதை அவர்கள் வலியுறுத்தினர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் அதற்கான வழிவகை செய்யப்பட்டது. 1966-ல் கோத்தாரி கல்விக் குழு, பொதுப்பள்ளி முறைமையை உருவாக்கி அனைவருக்கும் அரசுக் கல்வி வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இப்பரிந்துரை 1968-ல் இந்தியக் கல்விக் கொள்கையிலும் இடம்பெற்றது. ஆனால், இன்றுவரை அனைவருக்கும் சமமான கல்வி தரும் பொதுப்பள்ளி முறை (Common School System) உருவாக்கப்படவில்லை.

அதிலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மட்டுமே இடஒதுக்கீட்டின் மூலமாகவும் இலவசக் கல்வி மூலமாகவும் பலனடைந்துவருவதாகத் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இடஒதுக்கீடு, கட்டணமில்லாக் கல்வி ஆகியவை எல்லோருக்குமானவை. அதுமட்டுமல்லாமல் தலித் சமூகத்தினரில் மிகச் சிலர் மட்டுமே இடஒதுக்கீட்டின் மூலமாக முன்னுக்கு வந்திருக்கிறார்கள். ஆக, இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பது சாதியத்தைத் தூக்கிப்பிடிப்பதாகும், சமத்துவச் சமூகத்தை மறுப்பதாகும்.

இவற்றை ஊடகவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் மட்டுமே விவாதித்தால் போதாது. கல்வியாளர்களும் குறிப்பாக மாணவச் சமூகத்தினரும் இதுகுறித்த தீவிரமான உரையாடலில் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கடந்த வாரம் சென்னையில், ‘கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்’ என்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கத்தை நடத்தியது.

சமூக நீதிக்கான கல்வி

“இந்தியாவின் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் வேலைசெய்யும் இயந்திரங்களை மட்டுமே உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன. அரசியல்படுத்தும் பாடத்திட்டங்கள் இங்கு இல்லை. அப்படியே இருந்தாலும் அவை திட்டமிடப்பட்டுக் கற்றுத்தர மறுக்கப்படுகின்றன. ஆக, சமூக நீதியைப் போதிக்கும் கல்விதான் இன்றைய உடனடி தேவை” என்ற குரல் கருத்தரங்கத்தில் வலுவாக எதிரொலித்தது.

இடஒதுக்கீடு, கட்டணமில்லாக் கல்வி, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட இன்றைய மாணவர்கள் எதிர்கொண்டுவரும் பல சிக்கல்களைக் குறித்து முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி, தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், மூத்த கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் இக்கருத்தரங்கில் விவாதித்தனர்.

“சமமற்ற கல்விப் பாதையில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துச்சொல்லக்கூடிய கல்வியாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் நமக்குத் தேவைப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் நடத்தப்பட்டதுதான் இந்தக் கருத்தரங்கம். பணம் இருந்தால் வசதியான பள்ளி; பணம் இல்லை என்றால் சாதாரணப் பள்ளி என்ற பாகுபாடு நிலவுகிறது.

கல்வி என்பதே சமமாக இல்லாதபோது நீட் போன்ற பொதுத்தேர்வை நடத்துவது நியாயமா? தகுதி இல்லை, திறமை இல்லை என்பதால் போட்டியிட வேண்டாம் என்று சொல்லவில்லை. வாய்ப்பு சமமாக இல்லை என்பதாலேயே இத்தகைய போட்டி ரத்து செய்ய வேண்டும் என்கிறோம்; மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில், அரசுப் பள்ளியில் தாய்மொழிவழியில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட உரிய சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்; கல்வியை உலக வர்த்தக நிறுவனத்தின் வரம்புக்குள் கொண்டு செல்லக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்களை இக்கருத்தரங்கில் எடுத்துள்ளோம். இத்தீர்மானங்கள் உள்ளடக்கிய மனுவில் இக்கருத்தரங்கில் பங்கேற்ற கல்வியாளர்கள், மாணவர்கள், பல்துறை சான்றோர் அனைவரிடமும் கையொப்பம் பெற்று இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பிக்க உள்ளோம்” என்கிறார் பா.இரஞ்சித்.

விவாதப் புள்ளிகளும் கோரிக்கைகளும்

இந்தியாவின் மாநிலச் சமமின்மை (Regional Imbalance), பல்வகைப் பண்பாடு (Cultural Diversity), பலமொழிகளில் பயிலும் மாணவர்கள் (Linguistic Diversity) இவற்றைக் கருத்தில்கொண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைத் தேர்வு முறையான ‘நீட்’ விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.

இந்திய மருத்துவ கவுன்சில் திருத்தச் சட்டம் பிரிவு 10D இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் எனக் கூறியிருந்தாலும், JIPMER, AIIMS உள்ளிட்ட மத்திய அரசால் நிறுவப்பட்ட மருத்துவ நிறுவனங்களுக்கு நீட் தேர்விலிருந்து எவ்வாறு இந்திய அரசு விலக்களித்துள்ளதோ அதேபோல், தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் விலக்களிக்க வேண்டும்.

அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையின் அடிப்படையிலும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக 2017, பிப்ரவரி 18 அன்று இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து இரண்டு சட்ட மசோதாக்களை அனுப்பிவைத்தது. அவற்றுக்கு உடனடியாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை இந்திய அரசு பெற்றுத் தர வேண்டும்.

தொடக்கக் கல்வி முதல் உயர் கல்விவரை சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்கிட அரசு கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன் தேவைக்கு ஏற்ப உயர் கல்வி நிறுவனங்களை அரசே தொடங்கி நடத்திட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x