

லிங்கன்: இந்தியா ‘ஏ’ – நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லிங்கன் நகரில் உள்ள பெர்ட் சட்கிளிஃப் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.
மட்டையை சுழற்றிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 138 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசிய நிலையில் டான்ரு ஃபெர்ன்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 46.3 ஓவர்களில் 175 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 15 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கே பந்தில் வெளியேறினார். இந்தியா ‘ஏ’ அணி 69.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. சாய் சுதர்சன் 205 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 77 ரன்களும், கேப்டன் துருவ் ஜூரல் 12 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.