

புதுடெல்லி: பாஜகவின் 12 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘Belonging: A Journey of Love’ வரும் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், சோனியா காந்தி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நமது நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் தற்போது மத்திய பாஜக அரசு மீது அதிருப்தி அடையத் தொடங்கியுள்ளனர். பாஜக அரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் அவர்கள் உணர்ந்து வருகின்றனர். நல்ல நிர்வாகம் மீண்டும் திரும்புவதை இந்திய மக்கள் வரவேற்பார்கள்.
நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பார்வையில் இருந்து பார்க்கும்போது, வேகமாக மோசமடைந்து வந்த சூழ்நிலைகளைக் கையாள அவர் போராடியதை உணர முடிகிறது.
அவசரநிலையின் போது நடைபெற்ற அத்துமீறல்களுக்காக அவர் பின்னர் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்ததுடன், மன்னிப்பும் கேட்டார்.
காங்கிரஸ் கட்சி ஒத்த கருத்துடைய பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. எங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாஜக எதிர்ப்பு
இதுகுறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறும்போது, “சோனியாவிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.
1975-ம் ஆண்டு ஜனநாயகம் நசுக்கப்பட்டதையும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டதையும் அவர் மறந்துவிட்டாரா? ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகத்தைப் பாதுகாத்து, வளர்த்து, வலுப்படுத்தியுள்ளார்” என்றார்.