

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய வங்கதேச அணியின் பேட்ஸ்மேன் தவூஹித் ஹிர்தோய்.
சில்ஹெட்: மேற்கு இந்தியத் தீவுகள் - வங்கதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சில்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 106.4 ஓவர்களில் 356 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அமிர் ஜாங்கூ 133, கெவின் விக்ஹாம் 61, ஜஸ்டின் கிரீவ்ஸ் 51 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது. தவூஹித் ஹிர்தோய் 29, முஸ்பிகுர் ரகிம் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. சிறப்பாக விளையாடிய தவூஹித் ஹிர்தோய் 304 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார்.
ஒருபுறம் அவர், மட்டையை சுழற்றிய நிலையில் மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது. முஸ்பிகுர் ரகிம் 34, லிட்டன் தாஸ் 8, மெஹிதி ஹசன் மிராஸ் 16, ஹசன் மஹ்மூத் 1, தைஜூல் இஸ்லாம் 22, தஸ்கின் அகமது 12 ரன்களில் நடையை கட்ட வங்கதேச அணி 111.5 ஓவர்களில் 386 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
தவூஹித் ஹிர்தோய் 242 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.