

ருமேஷ் பதிரகே
கிளாஸ்கோ: நடப்பு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் பதிரகே தங்கம் வென்றார். இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி, யஷ் வீர் வெண்கலம் வென்றனர்.
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் இந்தியா சார்பில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, யஷ் வீர் சிங் மற்றும் ரோஹித் யாதவ் பங்கேற்றனர். நீரஜ் சோப்ரா மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் அவருக்கு களத்தில் ஆதரவும் அதிகம் இருந்தது.
இந்திய நேரப்படி இன்று (ஆக.1) அதிகாலை 12.45 மணி அளவில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இலங்கையின் 23 வயது தடகள வீரர் ருமேஷ் பதிரகே, 89.75 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கம் வென்றார். ஸ்காட்லாந்தில் நிலவிய குளிர்ச்சியான சூழலுக்கு தன்னை தயார் செய்து கொண்டு இந்த வெற்றியை வசப்படுத்தினார்.
இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.83 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் யஷ் வீர் சிங், 85.41 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி வெண்கலம் வென்றார். இதில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம் கிடைத்தது.
இந்தியாவின் ரோஹித் ஏழாம் இடமும், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஒன்பதாம் இடமும் இதில் பிடித்தனர்.
நீரஜ் சாதனையை முறியடித்த ருமேஷ்
கடந்த ஜூன் மாதம் இத்தாலியின் ரோம் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் பதிரகே 92.62 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார். அவரது செயல் திறன் ஆசிய தடகள வரலாற்றில் 2-வது மிக நீண்ட தூரமாகப் பதிவானது.
இதன் மூலம், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவின் (90.23 மீ) சாதனையை ருமேஷ் பதிரகே முறியடித்தார். 90 மீட்டர் என்ற வரலாற்று இலக்கை எட்டிய நான்காவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்த தடகள வரலாற்றில் 28-வது வீரர் என்ற பெருமையை ருமேஷ் பதிரகே அப்போது பெற்றார்.
நீரஜ் பகிர்வு
“பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட 2023 ஆசிய போட்டி போல இது அமைந்தது. அதில் நான் தங்கமும், கோஷர் வெள்ளியும் வென்றிருந்தோம். யஷ் வீர் சிறப்பாக செயல்பட்டார். இந்தியா பதக்க மேடையை அலங்கரித்தது. நமது தேசிய கீதம் இசைக்கப்பட்டது மகிழ்ச்சி தருகிறது. வெள்ளி வென்றது ஆறுதல் தருகிறது. என்னுடைய கம்பேக்கில் முன்னேற்றம் உள்ளது” என்று நீரஜ் சோப்ரா தெரிவித்தார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி (2026) 9-ம் நாள் முடிவில் இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் பத்தாம் இடத்தில் உள்ளது.
இன்று (சனிக்கிழமை) தடகளம் மற்றும் குத்துச்சண்டையில் பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வெல்வதற்கான போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களம் காண்கின்றனர். இதில் குத்துச்சண்டையில் 10 பிரிவுகளில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் விளையாடுகின்றனர். அதில் அவர்கள் வென்றால் தங்கமும், இரண்டாம் இடம் பிடித்தால் வெள்ளியும் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.