

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை சென்னையில் ரூ.200 என குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றப்படவில்லை.
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை உயர்ந்தது.
இந்நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. மாதந்தோறும் முதல் நாளில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றுவது வழக்கம். அதன்படி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.200 என்று குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று (ஆகஸ்ட் 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2,906 என தற்போது விற்பனை ஆகிறது. கடந்த ஜூலை மாதம் வணிக சிலிண்டர் விலை ரூ.177 என்று குறைந்தது. அதற்கு முன்பாக ஜூன் - ரூ.46, மே - ரூ.990, ஏப்ரல் - ரூ.203, மார்ச் - ரூ.144, ஜனவரி - ரூ.110 என வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களில் தேநீர், காபி மற்றும் உணவு விலைகள் உயர்த்தப்பட்டன. தற்போது ஜூலை மற்றும் ஆகஸ்ட் என இரண்டு மாதங்களில் சென்னையில் வணிக சிலிண்டர் விலை மொத்தமாக ரூ.377 என்று குறைந்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை
14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பொறுத்தவரையில் மாற்றமின்றி விற்பனை ஆகிறது. கடைசியாக கடந்த ஜூன் மாதம் ரூ.29 என வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்திருந்தது. அதன் பின்னர் விலை மாற்றப்படவில்லை. தற்போது ரூ.957.50-க்கு சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனை ஆகிறது.