

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது உலகின் முதல் நிலை ஜோடியான கொரியாவின் கிம் வோன் ஹோ, சியோ சியுங் ஜே-வை எதிர்த்து விளையாடியது.
52 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக் - ஷிராக் ஜோடி 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஷ்டோ ஜோடி 16-21, 21-17, 13-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யுய்சி ஷிமோகாமி, சயாகா ஹோபாரா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.