

புதுடெல்லி: நக்சலைட்கள் மிரட்டிப் பறித்த பணத்தில் பெண் ஒருவர் சென்னையின் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துள்ளார். இதில் கட்டணமாக ரூ.1.31 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக பிஹார் நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்துள்ளது.
பிஹாரின் மகத மண்டலப் பகுதியில் தடை செய்யப்பட்ட நக்சலைட் இயக்கமான சிபிஐ (மாவோயிஸ்ட்) செயல்பட்டு வந்தது. அப்போது அமைப்பின் விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதில் மிரட்டிப் பறித்த பணத்தைப் பயன்படுத்தி, மாவோயிஸ்ட் ஒருவர் தனது தங்கையை சென்னையில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படிக்க வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பினர் பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் சிறப்புப் பகுதிக் குழுவின் உறுப்பினர் பிரத்யுமன் சர்மா. இவர் தத்து எடுத்து வளர்த்த மகனாக தருண் குமாரும் ஒரு நக்சலைட் ஆவார். இந்த தருண் குமாரின் சகோதரி பூஜா குமாரி, தமிழ்நாட்டின் ஒரு சிறந்த மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கானக் கட்டணத் தொகை அவர்களிடம் இல்லை. இதை பிரத்யுமனிடம் தருண் குமார் கூறியுள்ளார். இதையடுத்து பிரத்யுமன், நக்சலைட் அமைப்பின் பெயரில் பலரிடம் மிரட்டிப் பறித்த பணத்தில் ரூ.1.31 கோடி அளித்துள்ளார். இந்தப் பணத்தில் பூஜா குமாரி, கடந்த 2017-2022 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் முடித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பிஹார் உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதில், சம்பவத்தை விளக்கிய என்ஐஏ, சென்னையின் மருத்துவக் கல்லூரிக்கு செலுத்தப்பட்ட தொகையில் ரூ.1,13,70,500 முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விசாரணையில் சிக்காமல் இருக்க, மருத்துவக் கல்லூரிக்கான தொகையை நேரடியாக செலுத்தாமல் இடைத்தரகர்கள் அல்லது உதவியாளர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் செலுத்தப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
தருண் குமார், மகத பிராந்தியத்தில் சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பை மீண்டும் நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய இணைப்பாகச் செயல்பட்டுள்ளார். பிஹார் மற்றும் ஜார்க்கண்டின் மகத மண்டலத்தில், மாவோயிஸ்ட்களுக்கும் பிற குழுக்களுக்கும் இடையே ஒரு முக்கிய பாலமாக பணியாற்றினார். கைதாகி உள்ள இவரைப் பற்றிய தகவல்கள், என்ஐஏ-வால் பாதுகாக்கப்பட்ட சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களில் தெரியவந்துள்ளது.