தினமும் 100 - 150 சிக்சர்களை அடித்துப் பழகுகிறேன்: முகுல் சவுத்ரி

தினமும் 100 - 150 சிக்சர்களை அடித்துப் பழகுகிறேன்: முகுல் சவுத்ரி
Updated on
1 min read

தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை தான் சிறுவயதிலிருந்தே ஆடப் பழகி வருவதாகத் தெரிவித்த நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நாயகன் முகுல் சவுத்ரி, தினமுமே தான் 100 முதல் 150 சிக்சர்கள் வரை அடித்துப் பயிற்சி எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

நேற்று முகுல் சவுத்ரி 27 பந்துகளில் 54 ரன்களை விளாசினார், இதில் 7 அதிரடி சிக்சர்கள் அடங்கும்.

“நான் அந்த ஹெலிகாப்டர் ஷாட்டை என் சிறுவயது முதலே அடித்துப் பழகி வந்தேன். எனக்கு அந்த ஷாட் மிகவும் பிடிக்கும். அதுவும் தோனி அதனை ஃபினிஷ் செய்யும் விதமே அலாதி. தோனி ஹெலிகாப்டர் ஷாட்டில் யார்க்கரையே சிக்சருக்கு அனுப்புவார்.

யார்க்கரையே சிக்சர் அடிக்கும்போது பவுலர் நிச்சயம் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். எனக்கு ஷாட்டில் பவர் அதிகம். மேலும் நான் தினமுமே 100 முதல் 150 சிக்சர்கள் வரை அடித்துப் பழகுகிறேன். அது எனக்கு இயல்பாகவே வருகிறது. தொடர்ந்து சிக்சர்கள் அடிக்க பயிற்சி எடுக்கும் போது பேட் ஸ்பீட் அதிகரிக்கும்.

குறிப்பாக நான் கடந்த 5 - 6 மாதங்களாக அதிகம் சிக்சர்களை அடித்துப் பழகுகிறேன். அதனால் தான் அது என் ஆட்டத்தின் முக்கிய அங்கமாக உள்ளது.” என்றார்.

பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் முகுல் சவுத்ரி பற்றிக் கூறும்போது, ‘இந்தியாவில் அச்சமூட்டக்கூடிய நம்பர் 6 அல்லது 7 வீரர் முகுல் சவுத்ரியே. அவர் கண்களில் அவரது ஆற்றல் தெரிகிறது’ என்றார்.

அதுபற்றி கேட்டபோது முகுல், “அவரைப் போன்ற பெரிய பயிற்சியாளர் இப்படிக் கூறுகிறார் என்றால் அவர் என்னிடம் எதையோ வித்தியாசமாக கண்டுணர்ந்துள்ளார் என்றே அர்த்தம்” என்றார்.

நேற்று முகுல் இறங்கும்போது 24 பந்துகளில் லக்னோ வெற்றிக்கு 54 ரன்கள் தேவை. 7 விக்கெட்டுகள் போய் விட்டது டெய்ல் எண்டர்களே உள்ளனர். முதல் 5 பந்துகளில் 4 ரன்கள் என்று நிதானமாகத் தொடங்கினார் ஆனால் அடுத்த 22 பந்துகளில் 53 ரன்களை விளாசி கொல்கத்தாவை நிலைகுலையச் செய்தார்.

தினமும் 100 - 150 சிக்சர்களை அடித்துப் பழகுகிறேன்: முகுல் சவுத்ரி
யார் இந்த முகுல் சவுத்ரி? - கொல்கத்தாவுக்கு எதிராக 7 சிக்ஸர்களை விளாசிய தோனி ரசிகர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in