

முகுல் சவுத்ரி
கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் முகுல் சவுத்ரி, பேட் செய்ய களத்துக்கு வந்த போது 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் என அந்த அணி தடுமாறியது. தொடர்ந்து மேலும் 2 விக்கெட்டுகளை இழந்தபோதும் தனது அதிரடியால் தன் அணிக்கு அவர் வெற்றி தேடி தந்தார். அவர் குறித்து பார்ப்போம்.
இந்த ஆட்டத்தில் 27 பந்துகளில் 54 ரன்களை விளாசி இருந்தார் முகுல் சவுத்ரி. இந்த சீசனை முன்னிட்டு நடைபெற்ற மினி ஏலத்தில் ரூ.2.6 கோடிக்கு லக்னோ அணி அவரை ஒப்பந்தம் செய்தது. 21 வயதான அவர் தோனியின் ரசிகர் ஆவார். தோனியை போலவே இவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.
யார் இவர்? - ராஜஸ்தான் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் முகுல். மித வேகப்பந்து வீச்சாளராக தனது கிரிக்கெட் பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். ஆனால், தனது அதிரடி பாணி ஆட்டத்துக்காக அவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளார்.
கடந்த 2025-26 சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் 5 இன்னிங்ஸில் 173 ரன்களை விளாசி இருந்தார். அதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 198.55. காயம் காரணமாக வெளியேறிய கார்த்திக் சர்மாவுக்கு மாற்றாக ராஜஸ்தான் அணியில் அவர் அந்த தொடரில் விளையாடி இருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிதான் அவரது ரோல்மாடல். அவரது பாணியில் முகுல் சவுத்ரி சிக்ஸர் விளாசியது அதற்கு சான்று.
மேட்ச் வின்னர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடனான ஆட்டத்தில் லக்னோ அணி 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நான்கு ஓவரில் அந்த அணியின் 54 ரன்கள் தேவைப்பட்டது. அழுத்தம் மிக்க அந்த தருணத்தில் லக்னோ அணிக்கு சாதகமாக ஆட்டத்தை பினிஷ் செய்து கொடுத்தார் முகுல் சவுத்ரி. 8-வது விக்கெட்டுக்கு ஆவேஷ் கான் உடன் 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதில் முகுலின் பங்கு 52 ரன்கள். இந்த இன்னிங்ஸில் 7 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அதில் இரண்டு சிக்ஸர்களை விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
“என்னுடைய கிரிக்கெட் பயணம் நான் பிறப்பதற்கு முன்பாகவே தொடங்கி விட்டது. தன் மகன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என எனது அப்பா கனவு கொண்டிருந்தார். இருப்பினும் எங்கள் குடும்பத்தின் சூழல் காரணமாக என்னால் சிறுவயதில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்க முடியவில்லை. 12-13 வயதில் தான் தொழில்முறை கிரிக்கெட் பயணம் தொடங்கியது. ராஜஸ்தானில் உள்ள சிகரில் உள்ள அகாடமி ஒன்றில் என் பயணத்தை தொடங்கினேன். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஜெய்ப்பூரில் பயிற்சியை தொடங்கினேன். பின்னர் அங்கிருந்து குருகிராமுக்கு வந்தேன். அங்கு நவீன டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப எனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டேன்.
இந்த வாய்ப்பு எனக்கு கடவுள் கொடுத்தது. அதனால் இந்த வாய்ப்பில் எனது கவனத்தை வைத்தேன். கடைசி வரை களத்தில் இருக்க வேண்டுமென விரும்பினேன். அதுதான் எனது திட்டமும் கூட. சிறுவயது முதலே அதிரடியாக ஆடுவது எனது பாணி. எனக்கான சோனில் பந்து வீசினால் நிச்சயம் அதை நான் விளாசுவேன். இந்த இன்னிங்ஸ் மூலம் எனக்கு ஆட்டம் சார்ந்த சில புரிதல் கிடைத்துள்ளது” என ஆட்டத்துக்கு பிறகு முகுல் சவுத்ரி தெரிவித்தார். இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதையும் அவர்தான் வென்றார்.