காதலி சோபியை கரம்பிடித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

காதலி சோபியை கரம்பிடித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்
Updated on
1 min read

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான், தனது காதலி சோபி ஷைனை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இன்று (பிப்.21) நடைபெற்றது. இதன் படங்களை இந்திய கிரிக்கெட் வீரர் சஹால், சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

40 வயதான தவான், கடந்த 2010 முதல் 2022 வரையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். தொடக்க ஆட்டக்காரரான அவர், 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தமாக 10867 ரன்கள் எடுத்துள்ளார். ஐசிசி தொடர்களில் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்.

இந்த நிலையில் தனது காதலி சோபி ஷைனை சனிக்கிழமை அன்று நடைபெற்ற பிரத்யேக திருமண நிகழ்வில் திருமணம் செய்து கொண்டார். இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றதாக தகவல். தவான் ஷெர்வானியும், சோபி லெஹங்கா உடையும் அணிந்திருந்தனர். இந்த படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடந்த ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து நாட்டை சேர்ந்த சோபி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். அங்குதான் அவரை தவான் முதன்முதலில் சந்தித்தாக தகவல். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருவரும் ஒன்றாக போட்டியை பார்த்தது கவனம் பெற்றது. அதன் பின்னர் மீண்டும் காதலை கண்டடைந்ததாக தவான் அறிவித்தார். இந்த சூழலில் தற்போது இருவரும் இல்வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2023-ல் தனது முதல் மனைவி ஆஷா முகர்ஜியிடம் இருந்து பரஸ்பர விவாகரத்து பெற்றார். இருப்பினும் தனது மகன் ஸோராவரை தன்னால் சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ முடியவில்லை என பொதுவெளியில் தெரிவித்தார். இதையடுத்து தவான், தனது மகனை சந்திக்கவும், வீடியோ அழைப்பில் பேசவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

காதலி சோபியை கரம்பிடித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்
T20 WC 2026: சூப்பர் 8 குரூப் 1-ல் தோல்வியடையாத அணிகள்: இந்தியாவுக்கு சவாலா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in