

சென்னை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ‘சூப்பர் 8’ சுற்றை எட்டியுள்ளது. இதில் இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப்-1ல் தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த பிரிவில் உள்ள நான்கு அணிகளும் குரூப் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வி அடையவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த அணிகள் இத்தொடரில் விளையாடிய அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழலில் இதே பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணிக்கு ‘சூப்பர் 8’ சுற்று கடும் சவாலாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்ப செய்கிறது. ஏனெனில், இந்த பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிதான் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடியும்.
இந்தியா: குரூப் சுற்றில் ‘ஏ’ பிரிவில் விளையாடிய இந்திய அணி அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. இந்த அனைத்து ஆட்டத்திலும் இந்திய அணி முதலில் பேட் செய்திருந்தது. இதில் அமெரிக்க அணி உடனான முதல் ஆட்டத்தில் 77 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற சரிவிலிருந்து மீண்டு 161 ரன்களை சேர்த்தது. இஷான் கிஷன், திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்கா: குரூப்-டி பிரிவில் இடம்பெற்ற தென் ஆப்பிரிக்க அணி, கனடா, ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அந்த அணியின் கேப்டனை மார்க்ரம், 4 இன்னிங்ஸில் 178 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஆப்கானிஸ்தான் அணி உடனான ஆட்டம் சமனில் முடிந்தது. அதன் வெற்றியாளர் டபுள் சூப்பர் ஓவர் மூலம் உறுதியானது. அதில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பவுலிங் என சமமான பலத்தை கொண்டுள்ளது அந்த அணி.
மேற்கு இந்தியத் தீவுகள்: குரூப்-சி பிரிவில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, நேபாளம் மற்றும் இத்தாலியை சுலபமாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஹெட்மயர், ஹோல்டர், ஹோப் உள்ளிட்டவர்கள் அந்த அணிக்கு நம்பிக்கை தருகின்றனர். ரூதர்பாட், ஷமர் ஜோசப், மோட்டி, சேஸ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி அணிக்கு உதவுகின்றனர்.
ஜிம்பாப்வே: ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து புறப்பட்டு வந்துள்ள ஜிம்பாப்வே அணி, இந்த முறை டி20 உலகக் கோப்பை தொடரில் கணிக்க முடியாத அணியாக இருந்துள்ளது. குரூப்-பி பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவை அந்த அணி சாய்த்தது. இதில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஜிம்பாப்வே வீழ்த்தியது. ஓமன் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது. அயர்லாந்து உடனான ஆட்டம் மழையால் ரத்தானது. அந்த அணியின் வீரர்கள் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கேப்டன் சிக்கந்தர் ராசா, பென்னட், முஸர்பானி ஆகியோரின் ஆட்டம் அந்த அணிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
இருப்பினும் இந்த தொடர் சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்திய அணிக்கு அது சாதகமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணி வீரர்கள் தங்கள் ஐபிஎல் அனுபவத்தை தேசிய அணிக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.