

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹராரேவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான அசோக் சர்மா அறிமுக வீரராக களமிறங்கினார். முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
2024-ம் ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பிரையன் பென்னட் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் பிடிகொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான பென் கரண் 10 ரன்களில் பிரின்ஸ் யாதவ் பந்தில் நடையை கட்டினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய தியோன் மையர்ஸ் 6 ரன்களில் மயங்க் யாதவ் பந்திலும், கேப்டன் சிகந்தர் ராசா 4 ரன்களில் ஷிவம் துபே பந்திலும் வெளியேறினர்.
32 ரன்களுக்கு 4 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் ரியான் பரூல் 35 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்களும், வெஸ்ஸி மாதவரே 34 பந்துகளில், 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 39 ரன்களும், மருமானி 20 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்களும் சேர்த்ததால் ஜிம்பாப்வே அணியால் சற்று கவுரவமான இலக்கை கொடுக்க முடிந்தது.
இந்திய அணி தரப்பில் மயங்க் யாதவ் 4 ஓவர்களை வீசி 18 ரன்களை வழங்கி 2 விக்கெட்களையும், பிரின்ஸ் யாதவ் 4 ஓவர்களை வீசி 19 ரன்களை வழங்கி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஷிவம் துபே, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 126 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 13.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச அரை சதத்தை விளாசிய நிலையில் 19 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ரிச்சர்டு நகரவா பந்தில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் வெளியேறினார். இஷான் கிஷன் 24 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் முசரபானி பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 24 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களும், திலக் வர்மா 6 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக மயங்க் யாதவ் தேர்வானார்.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி டி 20 போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சமீபத்தில் அவரது தலைமையில் இந்திய அணி 7 ஆட்டங்களில் விளையாடி 6-ல் தோல்வி கண்டிருந்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை (25-ம் தேதி) நடைபெறுகிறது.
இளம் வயதில் அரை சதம்
இந்திய அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்வன்ஷி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் இளம் வயதில் (15 வயது, 118 நாட்கள்) அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் இளம் வயதில் அரை சதம் அடித்த சாதனையை நேபாளத்தின் குஷால் மல்லா (15 வயது 340 நாட்களில்) நிகழ்த்தியிருந்தார். இதை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் சூர்யவன்ஷி.