QALA: ஆணாதிக்கம் தரித்த தாயும், ‘கண்ணீர் சாட்சி’ கலாவும் | திரை தேவதைகள் 27

QALA: ஆணாதிக்கம் தரித்த தாயும், ‘கண்ணீர் சாட்சி’ கலாவும் | திரை தேவதைகள் 27
Updated on
6 min read

துருக்கிய எழுத்தாளரும், பாலின அடையாளங்கள், பிரதிநிதித்துவம் சார்ந்த ஆராய்ச்சியாளருமான டெனிஸ் கண்டியோட்டி 1988-ல் ஒரு கட்டுரையை பிரசுரித்தார். அதன் தலைப்பு ‘Bargaining with Patriarchy’. அந்தக் கட்டுரையில்தான் ‘Patriarchal bargain’ என்றொரு வார்த்தையை அவர் இந்த உலகுக்கு அறிமுகம் செய்திருப்பார். தமிழில் ‘ஆணாதிக்க பேரம்’ என்று தட்டையாகச் சொல்லாமல், பெண்கள் வழிநடத்தும் ஆணாதிக்கம் என்று கொள்ளலாம்.

பாலின ரீதியாக அடக்குமுறைகளை சந்திக்கும் பெண்கள், சில அதிகாரங்களை தங்கள் வசமாக்கிக் கொள்வதைத்தான் ‘ஆணாதிக்க பேரம்’ என்கிறார் டெனிஸ். அப்படியான ஒரு பேரம் மூலம் பெறும் அதிகாரங்களைக் கொண்டு அப்பெண்கள், ஆண்களுக்கு ஒரு ‘ப்ராக்ஸி’ போல் இயங்குவார்கள்.

அவர்கள் ஆண்களைப் போலவே ஆணாதிக்க சிந்தனைகளை வழிநடத்துவார்கள். ஏன் இன்னும் ஒருபடி மேலே போய் ‘இதுவே என் கட்டளை; என் கட்டளையே சாசனம்’ எனும் தொனியில் பெண்களை இன்னும் அதீத வன்மத்துடன் அடிமைப்படுத்தும் வேலைகளைச் செய்வார்கள். இந்தியச் சமூகத்தில் வரதட்சணைக்காக மருமகளை வதைக்கும் மாமியார்களை ஆணாதிக்க பேரத்தால் விளையும் அதீத வன்மத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

குடும்ப கவுரவம், சாதியப் பெருமையை காப்பாற்றும் பொறுப்பு மிகுந்த ‘குல குத்துவிளக்கு’ என்றும், ஆண் வாரிசு பெற்றுத் தரும் ‘குல சாமி’ என்றும் தங்களைப் பற்றிய போலி அடையாளங்களை நம்பவைத்து ஆணாதிக்க சிந்தனைகளை, பெண்களே தங்கள் மீதும் மற்றும் தங்களது குடும்பம், சமூகத்தில் முன்னின்று செயல்படுத்த வைப்பதே ஆணாதிக்க வன்முறையின் உச்சம்.

இப்படியான ‘Patriarchal bargain’ தன்மையால் ஆணாதிக்கம் தரித்த தாய் ஊர்மிள மஞ்சுஸ்ரீயும், அதனால் மீளாத் துயருக்குள் சிக்கும் மகள் கலாவும், இந்த வலையில் சிக்கவைக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் ஜெகனும்தான் ‘Qala திரைப்படத்தின் மையப்புள்ளி.

2022-ல் அன்விதா தத் குப்தன் இயக்கிய இந்தி திரைப்படமான ‘Qala’. ஃபெமினிஸ்ட் சைக்காலிஜிக்கல் டிராமா ஜானரில் அடங்கும். இது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் ஒரிஜினல் படமாகும். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் காணக் கிடைக்கிறது.

இது. சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் பீரியட் டிராமா மற்றும் மியூசிக்கல் த்ரில்லரும் கூட. பின்னணி இசையில் கிலி ஏற்படுத்தும் சாகர் தேசாய், பாடல்களுக்காக அமித் த்ரிவேதியுடன் கைகோத்து கசல், நாட்டுப்புறப் பாடல்கள் என நம்மை விதவிதமான இசையில் லயிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவு, இசை, பாடல்வரிகள் என ஒவ்வொன்றும் கூடுதல் பலம் சேர்க்க கலாவாக த்ரிப்தி திம்ரி, அவரின் தாய் ஊர்மிளா மஞ்சுஸ்ரீயாக ஸ்வஸ்திகா முகர்ஜி, ஜெகனாக பாப்லி கான் (இர்ஃபான் கானின் மகன்) நம்மை படத்துக்குள் கட்டிவைக்கின்றனர். இனி நாம் கதைக்குள் செல்வோம்.

பெரும் புகழின் உச்சி முகர்ந்த ஒரு சினிமாப் பாடகியாக ரசிகர்களை நோக்கி நளினமாக கையசைக்கும் கலா, ஓப்பனிங் காட்சியில் அழகில் மிளிர்கிறாள். ‘Golden Vinyl award’-ஐ வாங்கிக் கொடுத்து, தனது தாயின் அன்பை, அரவணைப்பை, கவனத்தைப் பெற வேண்டும் என்பதே அவளது வாழ்நாள் இலக்கு. ஆனால், அந்த இலக்கு நிறைவேறிய நாள் அவளுக்கு அத்தனை இனிமையானதாக இல்லை.

தொட்டிலில் குழந்தையாகக் கிடந்த நாளில் இருந்து தாய் ஊர்மிளா ஒருநாளும் கலாவுக்கு அவள் தேடிய பந்த பாசங்களை, அடையாள அங்கீகாரங்களைத் தந்ததில்லை என்பது நமக்குத் தெரிந்திருக்கும். கலாவை அழுத்தும் துயரத்தால் விருதின் மகிழ்ச்சி என்பது நீராவி போல் காற்றில் கலந்து கொண்டிருப்பதை நம்மால் உணர முடியும்.

கடந்த கால இருளில் அவளும், அவளுக்காக வேதனைப்பட்டு நாமும் மூழ்குவதற்குள் செய்தியாளர்களின் கேள்விகள் பாயும்.

‘உங்களுக்கு திருமணம் எப்போது?’, ‘ஓர் இசையமைப்பாளருடன் தொடர்பில் இருக்கிறீர்களாமே!’, ‘உங்கள் தந்தை இசையில் பண்டிதர் பட்டம் பெற்றவர் தானே?’, உங்கள் அண்ணனை திரைத்துறையில் அறிமுகம் செய்ய உங்கள் தாய் முயன்றாரே!’ என அவளைச் சுற்றிய ஆண்களை மையப்படுத்திய கேள்விகள் வந்துவிழும்.

கலாவை நோக்கியப் பாய்ந்த கேள்விக்கணைகள், 2016-ல் சானியா மிர்சாவிடம் பிரபல பத்திரிகையாளர் ஒருவர், ‘நீங்கள் எப்போது செட்டில் ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டதையும், ”நான் தாயாகாமல், டென்னிஸில் (டபுள்ஸ் பிரிவில்) நம்பர் 1 ஆனது, செட்டில் ஆனதாக தெரியவில்லையா?” என்ற சானியா அளித்த பதிலையும் நினைவுபடுத்தியது. அந்தக் கேள்விக்காக அந்த நிருபர் மன்னிப்பும் கேட்டார் என்பதும் சுட்டிக்காட்ட வேண்டியதே.

கலா பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் புகைப்பட நிருபருக்கு முன்னுரிமை தருவது, தனக்கான தனிப்பட்ட காரியதரிசியாக ஒரு பெண்ணை நியமித்துக் கொண்டதும், சானியா மிர்ஸா சொன்ன பதிலும் என் பார்வையில் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றன.

ஆனால், கலா தன் தாய் அருள மறுத்த பாலின சமத்துவத்தை தன் தொழிலில் கடைப்பிடித்ததாக வடிவமைத்தது பாராட்டுக்குரியது.

பெண்கள் மீது சக பெண்கள் காட்டும் பரிவு என்பது புரிதலின் வெளிப்பாடே.

பெண் விடுதலைக்கு ‘சிஸ்டர்ஹுட்’ பெரும் தேவை என்றால், அது மிகையாகாது. அதுபோலவே, சம வேலைக்கு சம ஊதியம் பற்றியும் கலா பேசுவாள். ‘பத்மாவத்’ திரைப்படம் வந்தபோது பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் “சம ஊதியம் இல்லாவிட்டால் படத்தை புறக்கணிப்பேன்” என்றார்.

‘கலா’ தயாரிப்பாளர்களில் ஒருவரான அனுஷ்கா சர்மா, “நடிகர்கள் ஆண்கள் என்பதாலேயே அவர்களுக்கு அதிக ஊதியம் தரும் சினிமாத் துறை, நடிகைகளை இளமையும், அவர்கள் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பும் இருக்கும் வரை மட்டுமே மதிக்கவே செய்கிறது” என்று சொல்லியிருந்தார்.

ஆம், பெண்ணுக்கான பிரச்சினைகளில் 1940-களுக்கும் 2020-களுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.

படத்தை நான்-லீனியராகச் சொல்லியிருந்தாலும் கூட ஃப்ளாஷ் பேக்குகள் கனெக்ட் செய்யப்படும் இடங்கள் அத்தனை நேர்த்தியாக இருப்பதை நீங்கள் படம் பார்க்கும்போது வியந்து பாராட்டுவீர்கள்.

தாயின் ஆணாதிக்கத்தால் கலா எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டாள் என்பதை அலசுவது, பெண்கள் வழிநடத்தும் ஆணாதிக்கத்தின் கோரமுகத்தை தோலுரிக்கும்.

தான் சுமந்த இரட்டைக் கருவில் வலிமையான கலா, ஆண் குழந்தைக்கான ஊட்டச்சத்தையும் உறிஞ்செடுத்து உருவானது என்பது ஊர்மிளாவுக்கு ஆத்திரத்தைத் தருகிறது. குழந்தையைக் கொல்லக் கூட முயற்சித்து கடைசி நொடியில் கைவிடுகிறாள்.

கலா வளர்ந்த பின்னர், “நீ தான் இனி இந்தக் குடும்பத்தின் கலை பாரம்பரியத்தை முன்னெடுக்க வேண்டும்” என்று திலகமிடுகிறாள். ஆனாலும், நீ பண்டிதராக மட்டுமே ஆக வேண்டும் என்றும், ஒரு பெண்ணாக அதற்கு நீ நிறைய போராட வேண்டியிருக்கும் என்ற அச்சத்தையும் சேர்த்தே கடத்துகிறாள். ஆண் வாரிசு இல்லாததால் கலா ஓர் ஆப்ஷன்தான் என்பதை அவளுக்கு தெளிவாகக் கடத்துகிறாள்.

கலாவின் பாட்டுப் பயிற்சியில் அவள் மீது அதீத எதிர்பார்ப்புகளை வைத்து தண்டிக்கிறாள். அவளுடைய அரங்கேற்றம் நடக்கும்போதும் கூட, அவளைக் காட்டிலும் ஜெகன் என்ற சிறுவனின் பாட்டை மெய்மார்ந்து கேட்கிறாள்.

பெண்கள் கொண்ட ஆண் வாரிசு மீதான மோகமும் கூட ஆணாதிக்கத்தால் திணிக்கப்பட்டதே.

அதனால்தான் ஆணாதிக்கம் தரித்த ஊர்மிளாவுக்கு கலாவைவிட ஜெகனின் பாடல் ஆன்மாவை உருக்குவதாக இருக்கிறது. ஜெகனின் ஒரே பாடலில், “ஜெகனைப் போல் கலா ஒரு பண்டிட் இல்லை” என்று அறிவிக்கிறாள்.

ஜெகனை மகனாக ஸ்வீகரித்து அவள் வீட்டுக்கு அழைத்துவரும் காட்சியில், ஜெகன் உள்ளே நுழைய, வீட்டில் ஒவ்வொரு விளக்காக ஒளிரும். ஊர்மிளாவிடம் இருந்து பார்த்தால் அது அவள் விரும்பிய ஆண் வாரிசு கிடைத்ததால் அவள் உள்ளத்தில் ஒளிர்ந்த அன்பின் ஒளி. கலாவிடம் இருந்து பார்த்தால், அது தாய் தனக்குத் தராத அன்பு, பாசும், தன் திறமைக்குத் தராத அங்கீகாரம் இன்னொருவனுக்கு கொடுக்கப்பட்டதால் உள்ளத்தில் எரியும் பொறாமைத் தீ. அங்கிருந்துதான் கதையின் அடுத்தடுத்த திருப்பங்கள் உருவாகும்.

ஜெகனுக்காக அத்தனை மெனக்கிடல்களை மேற்கொள்ளும் ஊர்மிளா, அவனுக்கு பக்கவாத்தியமாக தம்புரா மீட்டினால் போதும் என்று கலாவை ஒடுக்குவாள்.

ஜெகனை திரையிசைக் கலைஞனாக்க, இசையுலகில் கோலோச்சிய பிரபல பின்னணிப் பாடகர் சந்தன் லால் சன்யாலுடன் சமரசமான உறவில் இருக்கிறாள். அந்தப் பாலுறவு கலாவுக்கு பல கேள்விகளை எழுப்புகிறது.

‘அம்மா ஏன் அப்படி நடந்து கொள்கிறாள்?’ என்று கேட்கிறாள். அவளுக்கு பதிலளிக்கும்போது, ஒரு விஷயத்தில் ஆதாயம் தேடுவதற்காக தன்மானத்தை இழந்து பாலுறவில் ஈடுபடுவது தவறு என்றுகூட ஜெகன் சொல்லமாட்டான். ‘எனக்காக செய்கிறாள்’ என்று பெருமையாகச் சொல்வான். ஆணாதிக்கவாதிகள் அப்படித்தான்.

ஆணாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்ட சாதி, மத, பாலின, வர்க்க பேதங்கள் அனைத்துமே அவர்களுக்குத் தேவைப்படும்போது வளைத்து, நெளித்து, நீட்டிக் கொள்ளக்கூடிவைதான்.

கலாவின் துன்பங்கள் அவள் தாயின் இதைச் செய், இப்படிச் செய், இப்போதே செய் என்ற ஆணாதிக்க ரீதியிலான மோசமான குழந்தை வளர்ப்பு முறை, அதனால் விளைந்த பால்ய பருவ மனக்காயங்கள், அவள் மிளிர விரும்பிய இசைத் துறையில் நிரம்பி வழிந்த ஆணாதிக்க சுரண்டல்களால் கட்டமைக்கப்பட்டவை.

ஜெகன் “பாட்டுதான் என் உயிர். நான் எனக்காகப் பாடுகிறேன்” என்று ஒரு காட்சியில் சொல்லியிருப்பான். ஆனால், இசையை அதே அளவு நேசித்த கலா, துயரங்கள் நிரம்பிய சாதகப் பறவையாகத்தான் உருவாகிறாள்.

குழந்தைகள் பெரும்பாலும் தன் குடும்பத்தில் இருப்போரின் பேச்சு, செயல்பாடுகளை பிரதியெடுப்பவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் குழந்தை வளர்ப்பும் ஒரு சீரிய கலையாக பாவிக்கப்படுகிறது.

ஊர்மிளாவைப் பார்த்து வளர்ந்த கலா, ஒரு விஷயத்தை முடித்துக் கொள்ள ‘செக்ஸுவல் ஃபேவர்கள்’ தவறில்லை என்று தன் தாயிடமிருந்தே கற்றுக் கொள்கிறாள். சன்யாலுக்கு அவள் இடும் உதட்டு முத்தமும், இசையமைப்பாளர் சுமந்த் குமாருக்கு கிட்டத்தட்ட ஒரு செக்ஸ் ஸ்லேவ் போல் மாறிவிடுவதும் மோசமான குழந்தை வளர்ப்பின் தாக்கமே.

ஊர்மிலாவின் சமரசங்கள் ஆணாதிக்கத்தை வழிநடத்தும் பெண்கள் தங்களுக்குக் கிடைத்த சலுகையாகக் கருதி செய்துகொள்ளும் ‘செல்ஃப் ஹார்ம்’

ஜெகனுக்காக ஒடுக்கப்பட்டவள், ஓரங்கட்டப்பட்டவள் திருமணம் மூலம் நிரந்தரமாக விலக்கி வைக்கப்படவும் முயற்சிகள் நடக்கிறது.

“அம்மா நான் உன் மகள் அல்லவா? நீ எனக்காக நிற்க வேண்டாமா?” என்று கலா ஆதங்கப்படுவாள். பின்னாளிலும், “அம்மா, எனக்கு ஏதோ ஆகிறது. எனக்கு உன் துணை தேவை?” என்று கெஞ்சுவாள்.

ஆணாதிக்க தாக்கத்தால் உந்தப்பட்ட ஒரு மோசமான குழந்தை வளர்ப்பு, ஒரு குழந்தையின் நீங்கா வடுவாக மாறும். அந்த வடுவுக்கு ஆறுதல்களும், தேறுதல்களும் இல்லாதபோது அது மனநோய் ஆகும்.

‘கலா’வில் மனநோய் அணுகப்பட்ட விதமும் நிச்சயம் பேசப்பட வேண்டியது. பெண்களின் மன அழுத்தம் பெரும்பாலும் மாதவிடாய் கால மனநிலை ஊசலாட்டங்களுடன் தொடர்புபடுத்தப்படும் ஸ்டீரியோடைப்பை படத்தில் பேசியிருக்கிறார்கள்.

கலா தெளிவாக, “என் உடலுக்கு எதுவுமில்லை. நான் உள்ளிருந்து நொறுங்கியதுபோல் உணர்கிறேன். எனக்கு காதில் ஏதோ குரல் கேட்கிறது” என்று சொல்வாள். ஆனால் மருத்துவர் ஆரம்பநிலையில் அதை அசட்டை செய்வார்.

இன்றும்கூட சமூக ஊடகங்களில் கேர்ள் ஃப்ரெண்ட் / மனைவியின் மென்ஸ்ட்ரூவல் மூட் ஸ்விங்ஸை எப்படிக் கையாள்வது என்று மலினமான அட்வைஸ் வீடியோக்களை காண முடிகிறது.

‘நாங்கள் பெண்களை மதிப்பவர்கள்’ என்று சிலர் காட்டும் அரைவேக்காட்டுத்தனங்களும் அபத்தமே.

மருத்துவரின் முன்முடிவு, கலாவின் நோயை முற்றச் செய்யும். காதில் கேட்ட குரல், எப்போதாவது நிழலாடிய ஜெகன் உருவம், போகப்போக அவள் முன் தெளிவாக நின்று தர்க்கம் செய்யும்.

ஆண்கள் என்றாலே மோசமானவர்கள். ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் என்று பொதுமைப்படுத்திவிட முடியாது என்பதற்கு சான்றாக இருப்பார் படத்தில் வரும் பாடலாசிரியர் மஜ்ரூ (வருண் க்ரோவர்). கலா துவண்டு போகும்போது தேற்றுவான். அவள் சுமந்த் குமாரால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும்போது ‘நீதான் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று ஊக்குவிப்பான்.

ஆறுதல்கள் சில இருந்தாலும்கூட அவளின் மனநோய் முற்றுகிறது. ஜெகனுக்கு அவள் பாலில் கலந்து கொடுத்த பாதரசம், அவன் தூக்கில் தொங்கும் காட்சிகள் மாறி மாறி நினைவுக்கு வந்து அவளை அச்சுறுத்துகின்றன. அவளுடைய போராட்டங்கள் நம்மை கண்ணீரில் கிடத்தும். அவளுக்காக இறங்காத மஞ்சுஸ்ரீ மீது கோபம் கொள்ள வைக்கும்.

ஈகோவுடன் இருக்க வேண்டும் என்று ஆணாதிக்கம் கற்றுக் கொடுத்ததை, புறக்கணிப்பாக வெளிப்படுத்தி ஒரு கூரிய வாள் போல் மீண்டும் மீண்டும் கலாவின் இதயத்தில் இறக்கிக் கொண்டிருப்பாள் மஞ்சுஸ்ரீ.

ஒரு சிறந்த பாடகியாக வேண்டும். தனக்கும், தாய்க்கும் பெருமை சேர்க்க வேண்டும். இது எத்தனை உயரிய கனவு. ஆனால் ,இந்தக் கனவை துரத்த கலாவுக்கு இருளும், கற்களும் நிறைந்த பாதைகளை விரித்தார்கள் ஆணாத்திக்கம் தரித்த தாயும், ஆணாதிக்கத்தில் ஊறிய கலை உலகத்தினரும்.

கலா தன் கலை தாகத்துக்காக மனிதம் இழந்து பாதகம் செய்தால், மாண்பை இழந்து சமரசம் செய்தால். அதனாலேயே வெற்றியடைந்தும் கூட நிம்மதி கிட்டாமல் குற்ற உணர்வால் தவிப்பாள்.

மகள் என்றும் பாராமல் கடுமை காட்டிய ஊர்மிளாவுக்கும், வளரும் கலைஞர் என்ற பாராமல் அவளைச் சுரண்டிய சுமந்த் குமாருக்கும் குற்ற உணர்வு ஏற்படவில்லை. ஆனால், அவர்கள் நிகழ்த்திய ஆணாதிக்க வன்முறைகளால் கலாவுக்கு உண்டானது.

ஜெகன் மகன் என்பதால் அதீத அன்பும், கலா பெண் என்பதால் அதீத வன்மமும் காட்டினாள் ஊர்மிளா. இரண்டுமே ஆணாதிக்கத்தால் தூண்டப்ப்ட்டதே. கலா, ஜெகனின் உயிரைப் பறித்தது, ஆணாதிக்கத்தை தவிர வேறொன்றும் இல்லை.

பாதிக்கப்பட்டவரே மீண்டும் பலியாவது காலங்காலமாக பெண்களுக்கு நடந்து கொண்டிருக்கும் அநீதி.

படத்தின் இறுதியில் அதற்கு கலா ஒரு கண்ணீர் சாட்சியாகிவிடுகிறாள்.

கலாவின் கண்ணீர் கானங்கள் கடைசியில் ஊர்மிளாவின் ஆணாதிக்கத்தை மட்டும்தான் கழுவியிருக்கும். ‘கலா’ காலப்போக்கில் இன்னும் பலரை ஆணாதிக்கத்தில் இருந்து மீட்கும் என்று நம்புவோம்.

| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

QALA: ஆணாதிக்கம் தரித்த தாயும், ‘கண்ணீர் சாட்சி’ கலாவும் | திரை தேவதைகள் 27
Good Luck to You, Leo Grande: பேரிளம் பெண்ணின் காமமும், நான்சிக்கு கிட்டிய புரிதலும் | திரை தேவதைகள் 26
QALA: ஆணாதிக்கம் தரித்த தாயும், ‘கண்ணீர் சாட்சி’ கலாவும் | திரை தேவதைகள் 27
Kaathal: The Core - இணையரை ரட்சித்து மீண்ட ‘மீட்பர்’ ஓமனா | திரை தேவதைகள் 25

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in