வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் - இங்கிலாந்து நாளை மோதல் | FIFA WC 2026

வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் - இங்கிலாந்து நாளை மோதல் | FIFA WC 2026
Updated on
1 min read

மியாமி கார்டன்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து திரு​விழா இறு​திக்​கட்​டத்தை எட்டி உள்​ளது. அமெரிக்​கா​வின் மியாமி கார்டனில் நாளை (19-ம் தேதி) அதி​காலை 2.30 மணிக்கு நடைபெறும் 3-வது மற்​றும் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் முன்​னாள் சாம்​பியன்​களான பிரான்ஸ் - இங்கிலாந்து அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

பிரான்ஸ் அணி அரை இறு​தி​யில் 0-2 என்ற கோல் கணக்​கில் ஸ்பெயின் அணி​யிட​மும், இங்​கிலாந்து தனது அரை இறு​தி​யில் 1-2 என்ற கோல் கணக்​கில் நடப்பு சாம்​பிய​னான அர்​ஜெண்​டி​னா​விடமும் தோல்வி கண்​டிருந்​தன. 3-வது இடத்​துக்​கான ஆட்​டம் அர்ஜெண்​டி​னா​வின் லயோனல் மெஸ்​ஸியை முந்தி ‘தங்​கக் காலணி’ விருதை வெல்​வதற்கு பிரான்ஸ் நட்​சத்​திரம் கிலியன் எம்பாப்​பேவுக்கு கிடைத்​துள்ள கடைசி வாய்ப்​பாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் நடப்பு தொடரில் இரு​வருமே தலா 8 கோல்​களை அடித்துள்​ளனர். அதே வேளை​யில், தலா 6 கோல்​கள் அடித்​துள்ள இங்​கிலாந்து அணி​யின் ஹாரி கேன், ஜூட் பெல்​லிங்​ஹாம் ஆகியோ​ரும் இந்த விருதுக்​கான பந்​த​யத்​தில் தொடர்​கின்​றனர். வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் பிரான்ஸ் அணி களமிறங்​கு​வது இது 4-வது முறை​யாகும். இதற்கு முன்​னர் 1958-ல் மேற்கு ஜெர்​மனிக்கு எதி​ராக​வும், 1986-ல் பெல்​ஜி​யத்​துக்கு எதி​ராக​வும் விளை​யாடி வெண்​கலப் பதக்​கத்​தைக் கைப்​பற்​றி​யிருந்​தது பிரான்ஸ் அணி. அதேவேளை​யில் 1982-ல் போலந்​திடம் தோற்று பதக்​கத்தை தவற​விட்​டது.

மறு​புறம், இங்​கிலாந்து அணி வெண்​கலப் பதக்​கத்​துக்​காக விளையாடு​வது இது 3-வது முறை​யாகும். இதற்கு முன்பு 1990-ல் இத்​தாலி​யிட​மும், 2018-ல் பெல்​ஜி​யத்​திட​மும் இங்​கிலாந்து தோல்வியடைந்​துள்​ளது. இங்​கிலாந்து மற்​றும் பிரான்ஸ் அணி​கள் இது​வரை 32 முறை நேருக்கு நேர் மோதி​யுள்​ளன. அவற்​றில் மூன்று போட்​டிகள் உலகக்​கோப்​பை​யில் நடந்​துள்​ளன. 1966-ம் ஆண்டு உலகக்​கோப்பை தொடரின் லீக் சுற்​றில் ரோஜர் ஹண்ட் அடித்த இரண்டு கோல்​களின் மூலம் இங்​கிலாந்து 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்​றது.

தொடர்ந்து 1982-ம் ஆண்டு நடை​பெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்​றி​லும் பிரையன் ராப்​சனின் இரண்டு கோல்​கள் மற்​றும் பால் மரினரின் ஒரு கோல் உதவி​யுடன் இங்​கிலாந்து 3-1 என்ற கணக்​கில் மீண்​டும் வெற்றி பெற்​றது. இவ்​விரு அணிகளுக்கும் இடையே​யான கடைசி மோதல் 2022-ம் கத்​தார் உலகக்​கோப்​பை​யின் கால்​இறு​தி​யில் நிகழ்ந்​தது.

அப்​போது பிரான்ஸ் 2-1 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றது. இதில் பிரான்ஸ் அணிக்​காக ஆரெலியன் சுவாமேனி மற்​றும் ஒலிவியே ஜிரூ ஆகியோர் கோல் அடிக்க, இங்​கிலாந்து அணிக்கு ஹாரி கேன் பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்​தார். எனினும், அதற்​குப் பிறகு கிடைத்த மற்​றொரு பெனால்டி வாய்ப்பை ஹாரி கேன் தவற​விட்​டிருந்​தார். இந்த தோல்விக்கு தற்​போதைய ஆட்​டத்​தில் பதிலடி கொடுக்​க இங்​கிலாந்​து அணி முயற்​சிக்​கக்​கூடும்​.

வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் - இங்கிலாந்து நாளை மோதல் | FIFA WC 2026
யார் இந்த லவுடாரோ மார்டினஸ்? - அர்ஜெண்டினாவின் கடைசி நிமிட கதாநாயகன்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in