யார் இந்த லவுடாரோ மார்டினஸ்? - அர்ஜெண்டினாவின் கடைசி நிமிட கதாநாயகன்!

யார் இந்த லவுடாரோ மார்டினஸ்? - அர்ஜெண்டினாவின் கடைசி நிமிட கதாநாயகன்!
Updated on
4 min read

போட்டி 90-வது நிமிடத்தை கடந்திருந்தது. அர்ஜெண்டினா ரசிகர்களின் இதயத் துடிப்பு மட்டும் குறையவில்லை. உலகக் கோப்பை அரையிறுதியில் இன்னும் ஒரு கோல் தேவை. எல்லோரின் பார்வையும் மெஸ்சியை நோக்கியே இருந்தது. ஆனால், அந்த நொடியில் ஆட்டத்தின் முடிவை எழுதியது, பெனால்டி பாக்ஸுக்குள் அமைதியாக காத்திருந்தது ஒரு எல் டோரோ (காளை). அந்தக் காளையின் பெயர்... லவுடாரோ மார்டினஸ்.

அர்ஜெண்டினாவுக்கு நெருக்கடியான தருணங்களில் மீண்டும் மீண்டும் தோள்கொடுத்து நிற்கும் வீரராக அவர் ஏற்கெனவே தன்னை நிரூபித்திருந்தார். 2022 உலகக் கோப்பையில் காயத்துடன் வலியை விழுங்கியவர். 2024 கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் கூடுதல் நேரத்தில் வெற்றிக் கோலை அடித்து விமர்சனங்களுக்கு பதிலளித்தவர். 2026 உலகக் கோப்பையிலும் முக்கியமான தருணங்களில் அணிக்கு மீண்டும் உயிர் கொடுத்து வருபவர். அதனால்தான், அவரை ஒரு ஸ்டிரைக்கராக மட்டுமல்ல, “பெரிய போட்டிகளின் பெரிய வீரர்” என்றும் கால்பந்து உலகம் அழைக்கிறது.

அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் பின்னால், வறுமையை மறைத்த பெற்றோர், கால்பந்தையே கைவிட்ட சிறுவன், விமர்சனங்களால் சிதைந்த வீரர், வலியை மறைத்து விளையாடிய உலக சாம்பியன் என எண்ணற்ற கதைகள் புதைந்திருக்கின்றன.

கனவை காத்த பெற்றோர்

1997-ம் ஆண்டு, ஆகஸ்ட் 22-ம் தேதி அர்ஜெண்டினாவின் பஹியா பிளாங்கா நகரில் மேரியோ மார்ட்டினெஸ் மற்றும் கரினா வனிஸாக்கும் மகனாக பிறந்தார் லவுடாரோ மார்டினெஸ். அவருக்கு கால்பந்து என்பது சிறுவயதிலிருந்தே உயிரோடு கலந்த கனவாக இருந்தது. ஆனால், அந்தக் கனவுக்கு பின்னால் இருந்தது அவரது தந்தை மேரியோ மார்டினஸின் அமைதியான போராட்டம்.

அர்ஜெண்டினாவின் கீழ்மட்ட லீக் கால்பந்தில் விளையாடிய மேரியோ, கால்பந்து வீரரின் வாழ்க்கை எவ்வளவு நிச்சயமற்றது என்பதை நன்றாக அறிந்திருந்தார். அதனால், மகன் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. இருந்தாலும், மகனின் கண்களில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்தபோது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.

மார்ட்டினெஸ் எளிமையான குடும்ப சூழலிலேயே வளர்ந்தார். அவரது அப்பா பல மாதங்கள் உழைத்து சேமித்த பணத்தில்தான் மார்ட்டினெஸ்க்கான முதல் தரமான கால்பந்து காலணியை வாங்கிக் கொடுத்தார். ஒரு குழந்தை கவலையில்லாமல் கனவு காண வேண்டும் என்பதற்காக, அந்தக் குடும்பம் தனது வறுமையையே அவனிடமிருந்து மறைத்தது. அந்த அமைதியான தியாகம்தான் பின்னாளில் மார்ட்டினெஸ்ஸின் விடாமுயற்சிக்கும், மனஉறுதிக்கும் அடித்தளமாக மாறியது.

மார்ட்டினெஸ்ஸின் தம்பி ஜானோ உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்ததும், குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்ததும், முக்கியமான தேர்வுகள் மற்றும் போட்டிகளில் கவனம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக அவரிடம் சொல்லப்படவில்லை. அந்த வேதனையை பெற்றோர்களே சுமந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த உண்மையை அறிந்த மார்ட்டினெஸ், “என் பெற்றோரின் தியாகம் வீணாகக்கூடாது” என்ற உறுதியுடன் இன்னும் கடுமையாக உழைக்கத் தொடங்கினேன் என்று நினைவூகூர்ந்தார்.

கால்பந்திலிருந்து விலகிய சிறுவன்

இன்று எதிரணி பாதுகாப்பு வீரர்களை அச்சுறுத்தும் மார்ட்டினெஸ், சிறுவயதில் பல நிராகரிப்புகளை சந்தித்தார். உடல் அமைப்பு, உயரம், உடல் வலிமை போதவில்லை என்ற காரணங்களால் பல இளம் வீரர் தேர்வுகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த ஏமாற்றம் அவரை மனதளவில் பெரிதும் பாதித்தது. ஒருகட்டத்தில் கால்பந்தையே விட்டுவிட்டு கூடைப்பந்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் அவரை மீண்டும் மைதானத்துக்கு அழைத்து வந்தவர் தந்தை மேரியோதான். “இது உன் கனவு, ஒரு நிராகரிப்பு உன் வாழ்க்கையை முடிவு செய்யக்கூடாது” என்ற அவரது நம்பிக்கையே, மார்ட்டினெஸ்ஸின் வாழ்க்கையை மாற்றிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஒரு முடிவை அவரது தந்தை மாற்றாமல் இருந்திருந்தால், உலகக் கால்பந்து 'எல் டோரோ'வை பார்த்திருக்காது என்பதே உண்மை.

ஒரு ஓவர்ஹெட் கிக்... திறந்த கதவு

2013-ல் ரேசிங் கிளப்பின் திறமைக் கண்டறியும் பயிற்சியாளர் ஃபேபியோ ரடாயெல்லி, பஹியா பிளாங்காவின் லினியர்ஸ் அணிக்காக விளையாடிய மார்ட்டினெஸ்ஸைப் பார்க்க வந்தார். போட்டி தொடங்கி சில நிமிடங்களே ஆனதும் ஒரு அற்புதமான ஓவர்ஹெட் கிக். இரு கால்களாலும் சமமாக பந்தைக் கட்டுப்படுத்தும் திறன். எதிரணி பாதுகாப்பை உடைக்கும் தன்னம்பிக்கை ஆகியவற்றை கவனித்தவர் அவ்வளவுதான், “இவர் சாதாரண வீரர் இல்லை” என்று முடிவு செய்த ரடாயெல்லி, உடனடியாக அவரை ரேசிங் கிளப்பில் சேர்த்தார்.

அங்கேயே அர்ஜெண்டினாவின் முன்னாள் நட்சத்திரம் டியாகோ மிலிட்டோவின் வழிகாட்டுதல் மார்ட்டினெஸ்ஸின் ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. “ஒரு கோலை 24 மணி நேரத்துக்கு மேல் கொண்டாடாதே; அடுத்த போட்டி மீண்டும் 0-0 என்ற நிலையில்தான் தொடங்குகிறது” என்ற மிலிட்டோவின் அறிவுரை, பின்னாளில் மார்ட்டினெஸ்ஸின் கால்பந்து தத்துவமாகவே மாறியது.

மிலானில் உருவான தலைவன்

2018-ஆம் ஆண்டு சுமார் €25 மில்லியன் பரிமாற்றத்தில் இத்தாலியின் இன்டர் மிலானில் இணைந்தார் மார்ட்டினெஸ். புதிய மொழி, புதிய லீக், மவுரோ இகார்டியின் நிழல் என ஆரம்ப நாட்கள் எளிதாக அமையவில்லை. ஆனால், ரொமேலு லுகாகுவுடன் உருவான கூட்டணி இன்டரின் தாக்குதல் வரிசைக்கு புதிய முகத்தைக் கொடுத்தது.

2020 யூரோபா லீக் இறுதிப்போட்டி, 2021 சீரி A சாம்பியன் பட்டம், 2023 யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி, 2024 சீரி A கோப்பை என ஒவ்வொரு பருவத்திலும் தனது முக்கியத்துவத்தை நிரூபித்த அவர், பின்னர் இன்டர் மிலானின் கேப்டனாகவும் உயர்ந்தார். 2023-24-ம் சீசனில் இன்டர் மிலானை சீரி A சாம்பியனாக்கியதோடு, அந்த சீசனின் சிறந்த வீரர் (Serie A MVP) விருதையும் கைப்பற்றினார்.

கத்தாரின் கண்ணீர்... கோபா அமெரிக்காவின் புன்னகை

2022 உலகக் கோப்பைக்கு முன், மார்ட்டினெஸ் அர்ஜெண்டினாவின் முக்கிய கோல் வேட்டைக்காரராக இருந்தார். ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே அவரை கடுமையான கணுக்கால் காயம் வாட்டியது. கணுக்காலை முழுமையாக மடக்கவே முடியாத அளவுக்கு காயம் தீவிரமாக இருந்தது.

ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் வலிநிவாரண ஊசிகளை எடுத்துக்கொண்டு களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உடல் ஒத்துழைக்காததால், தொடக்க அணியில் தனது இடத்தை ஜூலியன் ஆல்வாரஸிடம் இழந்தார். வெளியிலிருந்து பார்த்தவர்களுக்கு அது ஒரு சாதாரண அணித் தேர்வாகத் தோன்றியிருக்கலாம். ஆனால், அதன் பின்னால் கடுமையான வலியும், மனப்போராட்டமும் இருந்தது.

இருப்பினும், நெதர்லாந்துக்கு எதிரான காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் அச்சமின்றி களமிறங்கி முக்கியமான பெனால்டியை கோலாக்கி அணியின் வெற்றியில் தனது பங்கை உறுதிப்படுத்தினார். பெரிய வீரர்கள் அனைவரும் ஒளிரும் தருணங்களில் மட்டுமல்ல, அணிக்குத் தேவைப்படும் தருணங்களில் தோள்கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதை அந்த ஒரு கிக் நிரூபித்தது.

ஆனால் உலகக் கோப்பைக்குப் பிறகு விமர்சனங்கள் அவரை விடவில்லை. “வாய்ப்புகளை வீணடித்தார்” என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன. அதற்கு அவர் பதிலை வார்த்தைகளால் அல்ல, தனது ஆட்டத்தாலும் கோல்களாலும் கூறினார்.

2024 கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் கொலம்பியாவுக்கு எதிராக கூடுதல் நேரத்தின் 112-வது நிமிடத்தில் அடித்த கோல், அர்ஜெண்டினாவுக்கு கோப்பையை மட்டுமல்ல, மார்டினெஸ்ஸுக்கு மீண்டும் மரியாதையையும் தந்தது. அந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்து கோல்டன் பூட் வென்ற அவர், இறுதி விசில் ஒலித்ததும் கண்ணீருடன் தரையில் அமர்ந்த காட்சி, ஒரு வீரரின் மீட்சிக் கதையாகவே ரசிகர்களின் நினைவில் பதிந்தது.

அணிக்காக வாழும் ‘எல் டோரோ’

‘எல் டோரோ’ என்ற ஸ்பானிஷ் வார்த்தைக்கு ‘காளை’ என்று பொருள். எதிரணி பாதுகாப்பு வீரர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு பின்வாங்காத அவரது ஆட்டம், அபாரமான உடல் சமநிலை, பந்தை பாதுகாக்கும் திறன் ஆகியவை அந்தப் பெயரை அவருக்கு நிரந்தரமாக்கின.

பொதுவாக, ஸ்டிரைக்கர்கள் கோல் அடிப்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். ஆனால் மார்டினெஸ், எதிரணியின் கட்டமைப்பையே சிதைக்கும் முதல் அழுத்தத்தை கொடுப்பவர். எதிரணி டிஃபென்டர்களுக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து பிரஷர் கொடுப்பதே அவரது அடையாளம். அதனால்தான் பயிற்சியாளர்கள் அவரை ஒரு கோல் அடிப்பவராக மட்டும் பார்க்காமல் அணியின் முதல் பாதுகாவலராகவும் பார்க்கிறார்கள்.

இன்டர் மிலானில் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகும் அதே மனநிலையைத்தான் தொடர்ந்தார். “இன்டருக்காக முழு மனதுடன் போராடத் தயாராக இருப்பவர்கள் இருக்கட்டும். இல்லையெனில் வெளியேறலாம்” என்று அவர் வெளிப்படையாக கூறிய வார்த்தைகள், அவரது தலைமைப் பண்பை வெளிப்படுத்தின.

2026 உலகக் கோப்பை…

2026 ஃபிஃபா உலகக் கோப்பையிலும் மார்டினெஸ் மீண்டும் முக்கியமான தருணங்களின் நாயகனாகவே திகழ்ந்தார். ஏழு போட்டிகளில் மூன்று கோல்கள், ஒரு அசிஸ்ட். வெறும் 313 நிமிடங்கள் மட்டுமே களத்தில் இருந்தாலும், மாற்று வீரராக வந்து போட்டியின் போக்கை மாற்றிய தாக்கத்தை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தினார். சுவிட்சர்லாந்துக்கு எதிராக கூடுதல் நேரத்தில் வெற்றிக் கோல், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தீர்க்கமான கோல் என முக்கியமான தருணங்கள் அனைத்திலும் அவரது பங்களிப்பு இருந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அவர் அடித்த வெற்றிக் கோல், அர்ஜெண்டினாவை தொடர்ந்து இரண்டாவது உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றது. அந்த கோலின் மூலம் சர்வதேச அரங்கில் தனது 40-வது கோலையும் பதிவு செய்து, அர்ஜெண்டினாவின் தலைசிறந்த கோல் வேட்டைக்காரர்களில் ஒருவராக தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்தினார்.

லியோனல் மெஸ்சி ஒருமுறை, “மார்டினெஸ் ஒரு முழுமையான ஃபார்வர்டு. அவருக்குச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது” என்று கூறியிருந்தார். அந்த நம்பிக்கையை ஒவ்வொரு தொடரிலும் அவர் தனது ஆட்டத்தின் மூலம் நிரூபித்தும் வருகிறார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு வீரர் இருப்பார். அவரைப் பற்றி பேசும்போது கோல்களின் எண்ணிக்கை மட்டும் நினைவுக்கு வராது; அவர் விழுந்த இடத்திலிருந்து எத்தனை முறை எழுந்தார் என்பதுதான் முதலில் நினைவுக்கு வரும். லவுடாரோ மார்டினஸ் மட்டும், அணியின் வெற்றியையும் தனது வரலாறையும் ஒரே நேரத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்.

அர்ஜெண்டினாவின் ஜெர்சியை அணியும் ஒவ்வொரு முறையும், அவர் கோல்களை மட்டும் தேடுவதில்லை. தனது பெற்றோரின் தியாகத்துக்கும், தன்னை நம்பியவர்களின் நம்பிக்கைக்கும், நாட்டின் கனவுக்கும் பதில் சொல்ல ஓடிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் கடைசி நிமிடங்களில் அர்ஜெண்டினா ஒரு கோலைத் தேடும்போது, ரசிகர்களின் மனதில் முதலில் ஒலிக்கும் பெயர்களில் ஒன்று ‘எல் டோரோ’ லவுடாரோ மார்டினஸ்.

யார் இந்த லவுடாரோ மார்டினஸ்? - அர்ஜெண்டினாவின் கடைசி நிமிட கதாநாயகன்!
ஸ்பெயினின் வலப்புற இரும்புச் சுவர்... உலகக் கோப்பை கனவை சுமந்து நிற்கும் பெட்ரோ போரோ!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in