

2007 டி20 உலகக் கோப்பையை தோனி தன் கேப்டன்சி அறிமுகத் தொடரிலேயே வென்றது ஒருபுறம் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது என்றால், இன்னொரு புறம் யுவராஜ் சிங், இங்கிலாந்து ஸ்விங் பவுலர் ஸ்டூவர்ட் பிராடை 6 சிக்சர்கள் ஒரே ஓவரில் விளாசியது இன்று மாக்கதையாடல் ஆகி அனைவரது கற்பனையிலும் பல விதங்களில் ஊறித்திளைத்துள்ளது.
ஆனால், யுவராஜ் சிங்குக்கு அது ஒரு மலரும் நினைவுகள், மாறாக பிராடுக்கு? அது மறக்கப்பட வேண்டிய துர்சொப்பனம். ஏனெனில் பிராட் கண்ணை மூடும்போதெல்லாம் யுவராஜ் அடித்த 6 சிக்சர்கள் கண் முன்னால் வந்து போகத்தானே செய்யும்? இது எந்த ஒரு பவுலருக்கும் உண்மையில் பெரிய சித்ரவதையே.
அந்த இன்னிங்ஸுக்குப் பிறகே ஸ்டூவர்ட் பிராடின் தந்தை கிறிஸ் பிராட், யுவராஜிடம் வந்து யுவராஜ் கையொப்பமிட்ட ஜெர்சியை பிராடுக்கு பரிசாக அளிக்கக் கேட்டுள்ளார். யுவராஜ் தான் ஜெர்சியைக் கொடுத்ததாகவும், ஆனால் பிற்பாடு அந்த ஜெர்சியை பிராட் குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் தனக்குத் தெரியவந்ததாக யுவராஜ் சிங் இப்போது கூறியுள்ளார்.
ஆனால் பிராடின் இந்தச் செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்கிறார் யுவராஜ் சிங். மைக்கேல் வானுடன் அவர் ஒரு நிகழ்ச்சியில் உரையாடியபோது, “அவர் டி20-யில் அனுபவமில்லாதவர் என்று நினைத்தேன், இது புரிந்துகொள்ளக் கூடியதுதான். அங்கிருந்து அவர் லெஜண்டரி வேகப்பந்து வீச்சாளராகி 600 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
அவர் அந்த 6 சிக்ஸ் தருணத்தையே அதன் பிறகு தன் வளர்ச்சிக்கான உந்துதலாக்கிக் கொண்டார். ஏனையோர் கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்திருக்கும். ஸ்டூவர்ட் பிராடின் தந்தை கிறிஸ் பிராட், இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின்போது ஆட்ட நடுவராக இருந்தார். அப்போது அவர் என்னிடம் வந்து ‘என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையையே ஏறக்குறைய முடித்து வைத்து விட்டாய்’ என்றார்.
நான் அவரிடம், “சார் நானும் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 5 சிக்சர்க்ள் விளாசப்பட்டுள்ளேன், இம்மாதிரி விஷயங்கள் எப்படி பாதிக்கும் என்று தெரியும்” என்றேன். அவர் உடனே என்னிடம் ‘நீ ஸ்டூவர்டுக்காக உன் கையெழுத்திட்ட ஜெர்சி ஒன்றை கொடுக்க வேண்டும்’ என்றார்.
நான் அதில் நானும் 5 சிக்சர்கள் ஒரே ஓவரில் விளாசப்பட்டிருக்கிறேன், அது எப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்தும் என்று தெரியும். நீங்கள் சிறந்த பவுலராகி விடுவீர்கள்’ என்று கையெழுத்திட்டு கொடுத்தேன்.
ஆனால் கிறிஸ் பிராட் அந்த ஜெர்சியை ஸ்டூவர்ட் பிராடிடம் கொடுத்தபோது அதை அவர் குப்பைத் தொட்டியில் கடாசினார் என்று சமீபத்தில் படித்தேன். அவருக்கு அவ்வளவு கோபம், ஆனால் அந்தக் கோபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே” என்று மனம் திறந்துள்ளார் யுவராஜ் சிங்.