Published : 09 Oct 2017 04:47 PM
Last Updated : 09 Oct 2017 04:47 PM

22 டெஸ்ட் போட்டிகளில் 100விக்.- ரபாடா சாதனையுடன் தெ.ஆ. அணி இன்னிங்ஸ் வெற்றி

புளூம்ஃபாண்டேன் டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் ஆடிய வங்கதேச அணி தன் 2-வது இன்னிங்சில் 172 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரை 2-0 என்று கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா.

ஆட்ட நாயகனாக இந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ரபாடா தேர்வு செய்யப்பட, தொடரின் நாயகனாக டீன் எல்கர் தேர்வு செய்யப்பட்டார்.

தனது 22வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை 3-வது முறையாகக் கைப்பற்றிய ரபாடா, டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 5-வது இளம் வீச்சாளரானார், மேலும் இந்த ஆண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ரபாடா.

3- நாள் ஆட்டத்தில் 2 செஷன்களை முழுமையாக வங்கதேச அணி தாங்கவில்லை.

ஷார்ட் பிட்ச் பந்துகளை அச்சுறுத்தும் விதமாக வீசி முதல் செஷனிலேயெ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா. மீதி 6 விக்கெட்டுகளை உணவு இடைவேளை முடிந்து விரைவிலேயே வீழ்த்தி வங்கதேசத்துக்கு ஆணியறைந்தது.

ரபாடா இந்த டெஸ்ட் போட்டியில் 63 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது, டேல் ஸ்டெய்னின் 60 ரன்களுக்கு 11 விக்கெட்டுகள் சாதனைக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

உணவு இடைவேளைக்குப் பிறகு மஹமுதுல்லா (43, 7 பவுண்டரி 1 சிக்ஸ்), லிட்டன் தாஸ் (18, 4 பவுண்டரிகள்) இணைந்து 9 பவுண்டரிகளை விளாசினர். முதல் இன்னிங்சில் அருமையாக ஆடிய லிட்டன் தாஸ், 2-வது இன்னிங்ஸில் பெலுக்வயோ பந்தை தவறாகக் கணித்து ஆடாமல் விட பவுல்டு ஆனார். ரபாடா பந்தை கல்லியில் டீன் எல்கரிடம் கேட்ச் கொடுத்தார் மஹமுதுல்லா. சபீர் ரஹ்மானும் எட்ஜ் செய்து வெளியேறினார். கடும் வேகத்தில் தைஜுல் இஸ்லாம், ரூபல் ஹுசைன் ஸ்டம்ப்களை இழந்தனர். முஸ்தபிசுர் ரஹ்மானின் லெக் ஸ்டம்ப் சிதைந்த போது வங்கதேசம் தவிர்க்க முடியாத வேதனை நிரம்பிய தோல்வியை அடைந்தது.

இந்த டெஸ்ட் தொடர் அந்த அணி வீரர்கள் மனதில் தீராத வடுவாக பலகாலம் இருக்கும் என்று தெரிகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மைதானம் நெடுக ஓடியதும், பேட்டிங்கில் செய்த தவறுகளும் ஷார்ட் பிட்ச் பந்துவீச்சும் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் மற்றும் வீரர்கள் கனவில் வந்து போகும். இதிலிருந்து மீள வங்கதேச வீரர்களுக்கு கவுன்சிலிங் தேவைப்படும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர். ஷார்ட் பிட்ச் பந்து வீச்சு ஏன் இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் நேற்று காலை கூட 3 பேட்ஸ்மென்கள் ரபாடா, ஆலிவியர் வேகத்தில் ஹெல்மெட்டில் வாங்கினர். இதில் ஒரு அடி வாங்கியவர் முஷ்பிகுர் ரஹிம், பொறிகலங்கிய நிலையில் மருத்துவ உதவி அவருக்கு வழங்கப்பட்டதால் ஆட்டத்தில் சற்று இடைவெளி ஏற்பட்டது. .பிறகு மருத்துவமனையிலும் பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் காயம் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x