Published : 30 May 2023 06:23 AM
Last Updated : 30 May 2023 06:23 AM

கடைசி இரு பந்துகளில் ஜடேஜா விளாசிய 10 ரன்களால் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டு மாற்றுநாளான நேற்று (திங்கள் கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 47 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசினார்.

முன்னதாக தொடக்க வீரரான ரித்திமான் சாஹா 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து தீபக் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 20 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் தோனியின் மின்னல் வேக செயல்பாட்டினால் ஸ்டெம்பிங் ஆனார்.ஹர்திக் பாண்டியா 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

215 ரன்கள் இலக்குடன் சிஎஸ்கே அணி பேட்டிங்கை தொடங்கியது. மொகமது ஷமி 3 பந்துகளை வீசிய நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது சிஎஸ்கே 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்திருந்தது.

மழை நின்ற பின்னர் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டி 12.10 மணி அளவில் தொடங்கப்படும் என அறிவித்தனர். மேலும் சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கை மாற்றி அமைத்தனர். இலக்கை நோக்கிய விளையாடிய சிஎஸ்கே விரைவாக ரன்கள் சேர்த்தது.

அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களும் டேவன் கான்வே 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் சேர்த்து நூர் அகமது பந்தில் ஆட்டமிழந்தனர். இதைடுத்து களமிறங்கிய அஜிங்க்ய ரஹானே 13 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் விளாசி மோஹித் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவையாக இருந்தது. ரஷித் கான் வீசிய 12-வது ஓவரில் ஷிவம் துபே 2 சிக்ஸர்களை பறக்கவிட 15 ரன்கள் கிடைக்கப்பெற்றது. மோஹித் சர்மாவின் அடுத்த ஓவரை அம்பதி ராயுடு பதம்பார்த்தார். 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விளாசிய அம்பதி ராயுடு 4-வது பந்தில் மோஹித் சர்மாவிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 8 பந்துகளை சந்தித்த அம்பதி ராயுடு 19 ரன்கள் சேர்த்தார்.

வெற்றிக்கு 14 பந்துகளில் 23 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் களமிறங்கிய தோனி முதல் பந்திலேயே ரன் எதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஜடேஜா களமிறங்கினார். 12 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் மொகமது ஷமி வீசிய 14-வது ஓவரில் 8 ரன்களே சேர்க்கப்பட்டது. மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தது.

முதல் பந்தை ஷிவம் துபே வீணடித்தார். அடுத்த 3 பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட அழுத்தம் அதிகரித்தது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு பறக்கவிட ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது.

கடைசி பந்தை ஜடேஜா பைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்ட சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 6 பந்துகளில், 15 ரன்களும் ஷிவம் துபே 21 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது சிஎஸ்கே அணி. மும்பை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. சிஎஸ்கே 2010, 2011, 2018, 2021-ம் ஆண்டுகளிலும் கோப்பையை வென்றிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x