Last Updated : 05 Oct, 2017 03:34 PM

 

Published : 05 Oct 2017 03:34 PM
Last Updated : 05 Oct 2017 03:34 PM

யு-17 உலகக்கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் அமெரிக்காவை அசத்துமா இந்திய அணி?

ஒரு முறை இந்திய கால்பந்து ஆற்றலை நோக்கி ஃபிபா கூறும்போது ‘ஸ்லீப்பிங் ஜெயண்ட்’ என்றது. ஆனால் இப்போதுதான் ஃபிபா யு-17 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி விளையாடுவதன் மூலம் விழித்துக் கொண்டுள்ளது.

உலகக்கோப்பையை நடத்தும் நாடு என்ற முறையில் இந்தியா தானாகவே இந்தத் தொடருக்குத் தகுதி பெற்றது. பிரிவு ஏ-யில் இந்தியா, யு.எஸ்., கொலம்பியா, கானா ஆகிய அணிகள் உள்ளன, இதில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய அணி யு.எஸ்.ஏ அணியை எதிர்கொள்கிறது.

பெரும்பாலும் ஏழ்மைப் பின்னணியிலிருந்து வந்துள்ள வீரர்கள் என்பதால் அவர்களிடம் குன்றாத உத்வேகம் இருந்து வருகிறது, இதனால் தயாரிப்புகளும் சிறந்த முறையில் நடைபெற்றது. இருப்பினும் இந்திய அணி ‘அண்டர் டாக்’ என்ற அடையாளத்தின் கீழ்தான் களமிறங்குகிறது, இது ஒருவிதத்தில் அணியின் மீதான எதிர்பார்ப்புச் சுமையைக் குறைக்கும்.

நாளை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் வீரருக்கு வீரர் ஒப்பிட்டால் அமெரிக்க அணி சிறப்பான அணியாகவே தெரியும். இவர்கள் அனைவரும் முக்கிய லீக் போட்டிகளில் ஆடுபவர்கள், இதில் இருவர் ஐரோப்பிய கால்பந்து கிளப்பிலும் ஆடத் தயாராகிவிட்டனர்.

இந்திய அணியின் கேப்டன் அமர்ஜித் சிங் மற்றும் இவரது சகாக்கள் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர்.

முதல் முதலாக ஃபிபா தொடர் ஒன்றில் ஆடுவதும் வீரர்களிடத்தில் தங்கள் திறமைகளைப் பதிய வேண்டும் என்ற உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

பிரச்சினை என்னவெனில் இந்த உயர்ந்த மட்டத்தில் சவாலான போட்டிகளில் இந்த அணி ஆடியதில்லை என்ற அனுபவமின்மைதான். அமெரிக்க அணி அப்படியல்ல.

மேலும் புதிய தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் நார்ட்டப் டு மேட்டோஸ் தலைமையில் ஒருங்கிணைந்து 7 மாதங்களே ஆகின்றது.

முந்தைய பயிற்சியாளரான ஜெர்மனியின் நிகோலய் ஆடம் பிப்ரவரி 2015-ல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் இவர் நாடு முழுதும் இளம் திறமைகளை அடையாளம் கண்டு திரட்டினார், இதற்காக தனது நேரத்தையும் ஆற்றலையும் அவர் செலவழித்தார். ஆனால் வீரர்களிடத்தில் முறையாக நடக்கவில்லை என்ற காரணத்தினால் நிகோலய் ஆடம் தன் பொறுப்பை இழந்தார்.

போர்ச்சுக்கல் பயிற்சியாளரான டி மேட்டோஸ் அணியில் பல முக்கிய மாற்றங்களைச் செய்தார், சுமார் 6 வீரர்களை களத்தில் முக்கிய நிலைகளுக்கு இவர் கோண்டு வந்தார்.

டி மேட்டோஸ் முன்னெச்சரிக்கையாக இந்த அணி அதிசயங்கள் எதையும் நிகழ்த்தி விடாது, நம் அணிக்கும் பிற அணிக்கும் பெரிய இடைவெளி உள்ளது என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

எனவே எதிரணியினருடன் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடுவது கடினம், தடுப்பு வியூகத்தை வலுவாக வைத்து எதிரணியினரை கோல் அடிக்க விடாமல் தடுப்பதுதான் பிரதான உத்தி என்கிறார் பயிற்சியாளர் டி மேட்டோஸ்

தீரஜ் சிங் கோல் கீப்பராக செயல்படுவார், இரண்டு செண்டர் பேக்ஸ் அன்வர் அலி மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் தடுப்பாட்டத்தில் உறுதி என்று தெரிகிறது.

சஞ்சீவ் ஸ்டாலின் லெப்ட் ஃபுல் பேக் நிலையில் ஆடுவார், ஹென்றி ஆண்டனி வலது புல் பேக் நிலையில் ஆடுவார்.

ஆறடி 2 அங்குல உயரமுடைய தடுப்பாட்ட நடுக்கள வீரர் ஜீக்சன் சிங் அணியில் மிக முக்கியமான வீரராகக் கருதப்படுகிறார். நடுக்களத்தில் இவர் கேப்டன் அமர்ஜித் சிங் மற்றும் சுரேஷ் சிங் வாஞ்சம் ஆகியோருக்கு உதவிகரமாக இருப்பார்.

பிரிக்ஸ் கோப்பையில் பிரேசிலுக்கு எதிராக கோல் அடித்த கோமல் தாட்டல் இடது புறத்தில் அருமையாக ஆடி வருகிறார், அனிகெட் ஜாதவ் மட்டுமே ஒரேயொரு ஸ்ட்ரைக்கர் அணியில் இருக்கிறார்.

அமெரிக்க அணியின் பயிற்சியாளர் ஹேக்வொர்த் தன் அணி வலுவான அணி என்றாலும் ஆரவாரம் மிகுந்த இந்திய ரசிகர்களின் முன்னிலையில் முதல் போட்டியில் இந்திய அணியை வெல்வது சவால்தான் என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x