Published : 18 May 2023 07:20 AM
Last Updated : 18 May 2023 07:20 AM

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் | ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்; 5 ஆண்டுகளுக்கு பின்னர் மோதுகின்றன

கோப்புப்படம்

புதுடெல்லி: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடருக்கான டிரா வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இரு அணிகளும் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் நேருக்கு நேர் மோத உள்ளன.

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஜூன் 21 முதல் ஜூலை 4-ம் தேதி வரை பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான டிரா நேற்று டெல்லியில் இந்திய கால்பந்து சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், குவைத், நேபாளம் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. லெபனான், மாலத்தீவுகள், வங்கதேசம், பூடான் ஆகிய அணிகள் ‘பி’ பிரிவில் உள்ளன.

லீக் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் லெபனான், குவைத் அணிகள் தெற்காசியாவுக்கு வெளியே உள்ள நாடுகளாகும். இந்த இரு அணிகளும் அழைப்பாளர்களாக பங்கேற்கின்றன. லெபனான், சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் 99-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் இந்தியா 101-வது இடத்திலும், பாகிஸ்தான் 195-வது இடத்திலும் உள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதி இருந்தன. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. எனினும் இறுதிப் போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் மாலத்தீவுகளிடம் தோல்வி அடைந்தது.

ஒட்டுமொத்தமாக சர்வதேச கால்பந்து அரங்கில் அதிகாரப்பூர்வமாக 20 ஆட்டங்களுக்கு மேல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி உள்ளன. இதில் இந்தியா 12 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா 8 முறை பட்டம் வென்றுள்ளது. 4 முறை 2-வது இடம் பிடித்துள்ளது. 2003-ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற தொடரில் மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. அந்த தொடரை இந்தியா 3-வது இடத்துடன் நிறைவு செய்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x