Published : 09 Oct 2017 09:17 PM
Last Updated : 09 Oct 2017 09:17 PM

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: குவஹாட்டியில் 2-வது டி20

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் குவாஹாட்டியில் செவ்வாயன்று (10-10-17) நடைபெறுகிறது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங் மீண்டும் சொதப்பினாலும் டக்வொர்த் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே அமைந்தது. இந்நிலையில் நாளை முழு 20 ஓவர் போட்டியில் ஆஸி.யை வீழ்த்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தடுமாறி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மற்றொரு தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. குவாஹாட்டியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்கத்தின் பார்சபரா மைதானத்தில் இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டி முதன்முறையாக இந்த மைதானத்தில் தற்போது தான் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எந்தவித சிரமமும் இன்றி 4-1 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.

மழையால் பாதிக்கப்பட்ட ராஞ்சி டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இதன் மூலம் தொடரில் 1-0 என முன்னிலை வக்கிகும் இந்திய அணி குறுகிய வடிவிலான இந்த போட்டியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி வெற்றிக்காக போராடக்கூடும். அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடர் 1-1 என சமநிலையை அடையும். இந்த சூழ்நிலை உருவானால் 13-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் கடைசி ஆட்டம், தொடரை யார் வெல்வது என்பதை தீர்மானிப்பதாக இருக்கும்.

இது நடைபெற வேண்டுமானால் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள், கணிக்க முடியாத மற்றும் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான பந்து வீச்சை மேற்கொள்ளும் சுழல் கூட்டணியான குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல் ஆகியோரை சமாளிக்க வேண்டும். இந்த சுழல் கூட்டணி ஒருநாள் போட்டித் தொடரின் 4 ஆட்டங்களிலும், ஒரு டி20 ஆட்டத்திலும் என ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணியின் 16 விக்கெட்களை வேட்டையாடி உள்ளது.

இந்த சுழல் கூட்டணி தான் இரு அணிகள் இடையேயும் பெரிய வித்தியாசத்தை உருவாக்கி உள்ளது. இவர்களின் பந்து வீச்சு வித்தியாசங்களை உணர்ந்து கொள்வதில் ஆஸ்திரேலிய வீரர்கள் தோல்வி கண்டுள்ளனர். மேலும் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தபடி தங்களை வடிவமைத்துக் கொண்டு செயல்படுவதிலும் முன்னேற்றம் பெறத் தவறி உள்ளனர். இதுஒருபுறம் இருக்க அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் இந்திய மண்ணில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் நிலையில் தற்போது ரன் சேர்க்க சிரமப்படுவது ஆச்சர்யமாகவும் உள்ளது.

அதேவேளையில் இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் பேட்டிங், பந்து வீச்சில் அணியின் தேவையை பூர்த்தி செய்பவர்களாக உருமாற்றம் பெற்றுள்ளதையும் கவனிக்க வேண்டும். ஒரு பந்து வீச்சு கூட்டணி ரன்களை அதிகம் விட்டுக் கொடுத்தால் மற்றொரு கூட்டணி ரன்குவிப்பை கட்டுப்படுத்தும் திறனுடன் செயல்படுகிறது. ராஞ்சி போட்டியில் இது கண்கூடாக தெரிந்தது. பாண்டியா, பும்ரா தொடக்க ஓவர்களில் ரன்களை விட்டுக்கொடுத்தனர். ஆனால் குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல் அதனை ஈடுசெய்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பு என்பது வார்னர், பின்ச், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை சார்ந்தே இருந்து வருகிறது. காயம் காரணமாக ஸ்மித் விலகி உள்ளதால் வார்னர், பின்ச் கூட்டணிக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. அந்த அணி தோல்வியில் இருந்து மீண்டுவர வேண்டும் என்றால் இந்திய சுழல் கூட்டணிக்கு சவால் விடுக்கும் வகையில் மட்டையை சுழற்ற வேண்டும். அதிரடி வீரரான மேக்ஸ்வெல், இந்த சுற்றுப்பயணத்தில் சோபிக்காதது அணிக்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.

ஒருநாள் போட்டித் தொடரின் 3 ஆட்டங்களில் வெறும் 58 ரன்கள் மட்டுமே சேர்த்த அவர், ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி 20-ல் வெறும் 17 ரன்களே எடுத்தார். இந்த 4 ஆட்டங்களிலும் அவர், யுவேந்திரா சாஹலிடமே ஆட்டமிழந்தார். இதன் மூலம் லெக் ஸ்பின்னில், மேக்ஸ்வெல் திணறுவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதை அவர், சரிசெய்து கொண்டு பார்முக்கு திரும்பினால் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வலுப்பெறக்கூடும்.

முதல்முறையாக சர்வதேச போட்டியை நடத்தும் பார்சபரா மைதானத்தில் ஆச்சர்யமும் நிகழக்கூடும் என கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இமாச்சல பிரதேச அணி வெறும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆசிஷ் நெஹ்ரா.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர் (கேப்டன்), ஆரோன் பின்ச், டிரெவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஜேசன் பெஹ்ரென்டார்ப், டேன் கிறிஸ்டியன், ஹென்ட்ரிக்ஸ், டிம் பெயின், கேன் ரிட்சர்ட்சன், ஆடம் ஸம்பா, மார்க்கஸ் ஸ்டாயினிஸ், ஆன்ட்ரு டை, நாதன் கோல்டர் நைல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x