Published : 16 May 2023 09:40 AM
Last Updated : 16 May 2023 09:40 AM
சென்னை: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் கடைசியாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தோல்வி கண்டபோதிலும் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் வர வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலவரப்படி குஜராத் அணி 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு போட்டியில் முடிவு இல்லை என்ற நிலையில் 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
இன்னும் 9 லீக் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைத் தவிர மற்ற அணிகள் முதல் 4 இடங்களுக்குள் வர வாய்ப்புகள் உள்ளன. அணிகள் பெறும் வெற்றி, தோல்விகளைப் பொறுத்து இந்த வாய்ப்புகள் அமையும் என கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் அணிகள் முதல் 4 இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறித்த அலசல்:
1. குஜராத்: முதலிடத்தில் உள்ள குஜராத் அணி, புள்ளிகள் அடிப்படையில் முதல் அணியாக நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி முதலிடத்தில் நீடிக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
2. சிஎஸ்கே: நேற்று முன்தினம் நடைபெற்ற கொல்கத்தா அணியுடனான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தாலும், பட்டியலில் 4 இடங்களுக்குள் வருவதற்கு அந்த அணிக்கு 94.9 சதவீத வாய்ப்புள்ளது. கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றால் எளிதில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
3. மும்பை: 3-வது இடத்தில் மும்பை அணி இன்னும் 2 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த அணி பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் வர 89.1 சதவீத வாய்ப்புகள் உள்ளன.
4. லக்னோ: தற்போது 4-வது இடத்தில் உள்ள லக்னோசூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி), லீக் சுற்றின் முடிவில் பட்டியலில் 4 இடங்களுக்குள் வர வாய்ப்பு (65.2 சதவீதம்) உள்ளது.
5. பெங்களூரு: 5-வது இடத்தில் உள்ள ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்பு 43.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
6. ராஜஸ்தான்: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டபோதிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்டியலில் 4 இடங்களுக்குள் வர 18.8 சதவீத வாய்ப்புள்ளது. கடைசி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று மற்ற அணிகள் தோல்வியுறும்போது இந்த வாய்ப்பு ராஜஸ்தானுக்குக் கிடைக்கும்.
7. கொல்கத்தா: முதல் 4 இடங்களுக்குள் வருவதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 21.1 சதவீத வாய்ப்பு உள்ளது. ஒரு அணியோ அல்லது 5 அணிகளுடனோ சம புள்ளிகளைப் பெறுவதற்கு அந்த அணிக்கு வாய்ப்பு உள்ளது.
8. பஞ்சாப்: பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி, பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் வர 43.8 சதவீத வாய்ப்புகள் உள்ளன.
9. ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குஜராத் அணியுடனான தோல்விக்கு பிறகு முதல் சுற்றில் இருந்து வெளியேறி உள்ளது.
10. டெல்லி: கடந்த சனிக்கிழமை பஞ்சாப் அணியுடன் தோல்வி கண்டதால் டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது.
முதல் 4 இடங்களுக்குள் அணிகள் வருவதற்கான வாய்ப்புகள், அந்த அணிகள் பெறும் வெற்றி, எதிரணிகள் பெறும் தோல்வி, நிகர ரன் ரேட் போன்றவற்றைப் பொறுத்து அமையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT