Published : 05 May 2023 08:53 AM
Last Updated : 05 May 2023 08:53 AM

காவல்துறையினர் எல்லை மீறி நடந்துகொண்டனர்; பதக்கம், விருதுகளை திருப்பி கொடுப்போம் - மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர்மல்க வேதனை

டெல்லி காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து பத்திரிகையாளர்களிடம் கூறிய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்

புதுடெல்லி: பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 23-ம் தேதி முதல் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜந்தர் மந்தர் பகுதியில் மழை பெய்ததால் வீரர், வீராங்கனைகள் ஏற்கெனவே பயன்படுத்திய படுக்கைகள் நனைந்திருந்தன.

இதனால் இவற்றுக்கு மாற்றாக சில படுக்கைகள் மற்றும் மர பெஞ்ச்களை கொண்டுவர முயன்றனர். அப்போது அந்த பகுதியில் பணியில் இருந்த போலீஸார், இந்த படுக்கைகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் சோம்நாத் பார்தி அனுப்பி வைத்துள்ளார். இந்த பொருட்களை போராட்ட பகுதிக்கு கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.

ஒரு கட்டத்தில் இது கைகலப்பாக மாறியது. இதில் மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத்தின் சகோதரர் துஷ்யந்த் உட்பட இருவர் தாக்கப்பட்டனர். வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் ஆகியோர் தங்களை ஆண் போலீஸ் அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்ததாகவும், கீழே தள்ளியதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதனர்.

இதுதொடர்பாக போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கலந்துகொண்டுள்ள ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா கூறும்போது, “மல்யுத்த வீரர்களை இப்படி நடத்தினால், பதக்கங்களை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது? மாறாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து பதக்கங்கள் மற்றும் விருதுகள் அனைத்தையும் மத்திய அரசிடமே திருப்பிக் கொடுப்போம்” என்றார்.

வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் நாட்டின் உயர்ந்த கேல் ரத்னா விருதை பெற்றுள்ளனர். சாக்‌ஷி மாலிக் 2017ம் ஆண்டிலும் பஜ்ரங் பூனியா 2019 ஆண்டிலும் பத்மஸ்ரீ விருது வாங்கியுள்ளனர்.

பஜ்ரங் பூனியா மேலும் கூறும்போது, “போலீசார் வீராங்கனைகளை தள்ளும்போதும், தவறாக நடந்துகொள்ளும்போதும், நாங்கள் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் என்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள். பெண்கள் தெருக்களில் அமர்ந்து நீதிக்காக போராடுகிறார்கள். ஆனால் யாரும் நீதியைப் பற்றி கவலைப்படுவதில்லை” என்றார்.

2020-ம் ஆண்டு கேல் ரத்னா விருது பெற்ற வினேஷ் போகத் கூறும்போது, “பதக்கங்களை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டுள்ளோம். எங்கள் மரியாதைக்காக போராடுகிறோம், ஆனால் நாங்கள் அவர்களின் காலடியில் நசுக்கப்படுகிறோம். பெண்களை துஷ்பிரயோகம் செய்ய எல்லா ஆண்களுக்கும் உரிமை உள்ளதா?. நாங்கள் எங்களது அனைத்து பதக்கங்களையும் திருப்பி கொடுக்கிறோம். உயிரை வேண்டுமானாலும் கொடுக்கிறோம். ஆனால் எங்களுக்கு நீதி வேண்டும்.

போலீஸ்காரர் என்னைத் தள்ளவும், கையை பிடித்து இழுக்கவும் தொடங்கினார். என்னைத் துஷ்பிரயோகம் செய்தார். அப்போது பெண் காவலர்கள் இல்லை. என்னை கீழே தள்ளிய போலீஸ்காரர் ஆக்ரோஷமாக இருந்தார். மற்றொரு போலீஸ்காரர் குடிபோதையில் இருந்தார். படுக்கை விரிப்புகளை நாங்கள்தான் ஆர்டர் செய்தோம். சோம்நாத்பார்தி வழங்கவில்லை. அவர் கொண்டு வந்திருந்தாலும் தூங்குவதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா? படுக்கைகளை கொண்டுவந்தது குற்றமா? அதில், வெடிகுண்டு அல்லது ஆயுதங்கள் இருந்ததா?. டெல்லி காவல்துறையினரின் நடத்தை மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது” என்றார்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவாலும் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுடன் அமர்ந்திருந்தார்.

‘உயிரை பணயம் வைத்துள்ளோம்’

போராட்டத்தை அரசியல் கட்சியினர் அபகரித்துள்ளார்களா என வினேஷ் போகத்திடம் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், "இது அரசியல் என்றால், தயவுசெய்து பிரதமரை எங்களிடம் பேசச் சொல்லுங்கள். உள்துறை அமைச்சர் எங்களை அழைக்க வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எங்களது மல்யுத்த வாழ்க்கையையும், உயிரையும் பணயம் வைத்துள்ளோம்" என்றார்.

‘தேசம் தவறாக வழிநடத்தப்படுகிறது’

பஜ்ரங் பூனியா கூறும்போது, “ஆம் ஆத்மி, காங்கிரஸ் என அனைத்தும் ஏன் அரசியலுடன் தொடர்பு படுத்தப்படுகிறது
என்பதை அறிய நான் விரும்புகிறேன். இந்த விவகாரம் பெண்களுடன் தொடர்புடையது, ஆனால் அதை அரசியல் கட்சிகளுடன் தொடர்புபடுத்தி தேசம் தவறாக வழிநடத்தப்படுகிறது. காவல்துறை பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு ஆதரவாக உள்ளது. எப்ஐஆர் பதிவு செய்த பிறகு
நாங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x