Published : 04 May 2023 08:17 AM
Last Updated : 04 May 2023 08:17 AM
லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகனா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். மழை காரணமாக ஆட்டம் 15 நிமிடங்கள் தாமதமாகவே தொடங்கியது. சிஎஸ்கே அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆகாஷ் சிங்கிற்கு பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்த தீபக் சாஹர் களமிறங்கினார். லக்னோ அணியில் கேப்டன் கே.எல். ராகுல் காயம் காரணமாக களமிறங்காததால் கிருணல் பாண்டியா அணியை வழிநடத்தினார்.
பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணி சிஎஸ்கேவின் சுழற்பந்து வீச்சில் ஆட்டம் கண்டது. கைல் மேயர்ஸ் 14 ரன்களில் மொயின் அலி பந்திலும் மற்றொரு தொடக்க வீரரான மனன் வோரா 10 ரன்களில் தீக்சனா பந்திலும் வெளியேறினர். தொடர்ந்து கரண் சர்மா 9, கிருணல் பாண்டியா 0, மார்கஸ் ஸ்டாயினிஸ் 6 ரன்களில் நடையை கட்டினர். 10 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 44 ரன்கள் என லக்னோ அணி தடுமாறியது.
எனினும் ஆயுஷ் பதோனி மட்டையை சுழற்றினார். அதிரடியாக விளையாடிய அவர், 30 பந்துகளில், 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக நிதானமாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் 31 பந்துகளில், 20 ரன்கள் எடுத்த நிலையில் பதிரனா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய கிருஷ்ணப்பா கவுதம் ஒரு ரன்னில் பதிரனா பந்தில் வெளியேறினார்.
லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஆயுஷ் பதோனி 33 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார். சிஎஸ்கே தரப்பில் மொயின் அலி, தீக்சனா, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.
தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை மேற்கொண்டு நடத்த முடியாத நிலை உருவானது. இதனால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள இரு அணிகளும் தலா 11 புள்ளிகளை பெற்றுள்ளன. இருந்த போதிலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் லக்னோ அணி 2-வது இடத்திலும், சிஎஸ்கே 3-வது இடத்திலும் தொடர்கின்றன.
இன்றைய ஆட்டம் ஹைதராபாத் - கொல்கத்தா
இடம்: ஹைதராபாத்
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT