Published : 05 Sep 2017 07:43 PM
Last Updated : 05 Sep 2017 07:43 PM

வங்கதேசத்தை வெறுப்பேற்றிய வார்னர், ஹேண்ட்ஸ்கம்ப்: விக்கெட்டுகளை வீழ்த்தத் திணறல்

சிட்டகாங் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தின் 305 ரன்களுக்கு எதிராக 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியது.

கடும் வெயில், உடலில் நீர் வற்றுவது போன்ற பிரச்சினைகளை ஆஸ்திரேலிய அணி எதிர்கொண்டாலும் உறுதியான பேட்டிங், பவுலிங்கை வெளிப்படுத்தியது.

ஆட்ட முடிவில், 170 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 88 ரன்களுடன் வார்னரும், 113 பந்துகளில் 69 ரன்களுடன் ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோர் களத்தில் நிற்கின்றனர். இருவரும் இணைந்து சுமார் 36 ஓவர்களில் ஆட்டமிழக்காமல் 3-வது விக்கெட்டுக்காக 127 ரன்களைச் சேர்த்து வங்கதேச பந்து வீச்சை சாதாரணமாக்கினர்.

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், மண், புழுதி பிட்ச்களில் தனது ஆட்டத்தைக் கண்டுபிடித்துக் கொண்டவராக 94 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் தைஜுலிடம் ஸ்மித் பவுல்டு ஆகி வெளியேறிய போது ஆஸ்திரேலியா 98/2 என்று இருந்தது.

தனது 10-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் ஹேண்ட்ஸ்கம்ப் 4-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். வார்னர், வார்னர் தன்மையில்லாத ஒரு இன்னிங்ஸை ஆடினார், 170 பந்துகளில் இன்னமும் சதமெடுக்காததோடு 4 பவுண்டரிகளை மட்டுமே அடித்திருக்கிறார் என்றால் அவர் பெரிய இன்னிங்ஸிற்கு திட்டமிடுகிறார் என்று பொருள். ஆனால் வங்கதேசத்திடமும் குறை உள்ளது, வார்னருக்கு இருமுறை அவுட் வாய்ப்புகளை வங்கதேசம் தவறவிட்டது.

52 ரன்களில் வார்னர் இருந்த போது ஷார்ட் லெக்கில் கேட்ச் விடப்பட்டது, பிறகு 73 ரன்களில் முஷ்பிகுர் ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவ விட்டார், தைஜுல், மெஹதி ஹசன் ஆகியோர் இதனால் பாதிக்கப்பட்ட பவுலர்கள் ஆவர்.

மேட் ரென்ஷா 4 ரன்களில் முஸ்தபிசுர் ரஹ்மானின் லெக் திசை பந்திற்கு முஷ்பிகுர் ரஹிமின் அபாரமான கேட்சிற்கு ஆட்டமிழந்தார். இது உண்மையில் ஒரு ஸ்டன்னிங் கேட்ச்தான். பிறகு வார்னர், ஸ்மித் கூட்டணி 93 ரன்களைச் சேர்த்தனர். ஸ்மித் 21-வது அரைசதத்தை எடுத்து முடித்து தைஜுலின் ஆர்ம் பால் பதம் பார்க்க பவுல்டு ஆனார்.

முன்னதாக வங்கதேச அணி 305 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x