Published : 27 Apr 2023 07:22 AM
Last Updated : 27 Apr 2023 07:22 AM

ஜெய்ப்பூரில் இன்று பலப்பரீட்சை: ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே?

கோப்புப்படம்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது. அந்த அணி 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் சிஎஸ்கே தொடர்ச்சியாக 3 வெற்றிகளை குவித்த நிலையில் களமிறங்குகிறது. அந்த அணி 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் குவித்து பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. சிஎஸ்கேவின் ஹாட்ரிக் வெற்றியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, அஜிங்க்ய ரஹானே, ஷிவம் துபே ஆகியோர் முக்கிய பங்குவகித்தனர்.

இன்றைய ஆட்டமானது சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசைக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இடையிலான மோதலாக இருக்கக்கூடும். தொடக்க வீரரான டேவன் கான்வே 7 ஆட்டங்களில் 4 அரை சதங்களுடன் 314 ரன்கள் சேர்த்து இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் கொல்கத்தா அணிக்கு எதிராக 29 பந்துகளில் 71 ரன்கள் விளாசி அனைவரையும் வியக்க வைத்த அஜிங்க்ய ரஹானே 5 ஆட்டங்களில் 209 ரன்கள் சேர்த்து அசத்தி உள்ளர். அவரது ஸ்டிரைக் ரேட் 199.04 ஆக உள்ளது.

இந்த சீசனில் ராஜஸ்தான், சிஎஸ்கே அணிகள் 2-வது முறையாக நேருக்கு நேர் சந்திக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற மோதலில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வென்றிருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். இது ஒருபுறம் இருக்க இன்றைய ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்புகளை சிஎஸ்கே பிரகாசப்படுத்திக் கொள்ளும்.

அதேவேளையில் தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்துள்ள ராஜஸ்தான் அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் தீவிரம் காட்டக்கூடும். அந்த அணி சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்றால் ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் மட்டைவீச்சில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்துவது அவசியம். ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்பதால் அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், யுவேந்திர சாஹல் கூட்டணி சிஎஸ்கே பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

ஜெய்ப்பூரில் சிஎஸ்கே எப்படி?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி ஜெய்ப்பூரில் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் சிஎஸ்கே 4 முறை வெற்றி கண்டுள்ளது. 3 ஆட்டங்களில் தோல்வியை பதிவு செய்துள்ளது.

ஆடுகளம் எப்படி இருக்கும்?

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானம் தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாகவும் ஆட்டத்தின் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். நேரம் செல்லச் செல்ல ஆடுகளத்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு விரைவாக ரன்கள் சேர்ப்பது சிரமமாக இருக்கும். இந்த மைதானத்தின் சராசரி ரன் குவிப்பு 160 முதல் 170 ரன்களாக உள்ளது.

அவுட்ஃபீல்ட் வேகமானது, இதனால் பந்து பீல்டரை கடந்தால் விரைவாக எல்லைகோட்டை நோக்கி பயணிக்கும். ராஜஸ்தானில் நிலவும் தீவிர வானிலை காரணமாக, ஆடுகளம் விரைவாக வறண்டுவிடும். இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, சவாய் மான்சிங் மைதானத்தின் ஆடுகளம் சமநிலையானதாகக் கருதப்படுகிறது, இது மட்டைக்கும் பந்துக்கும் இடையே நியாயமான போட்டியை வழங்கும் என கருதப்படுகிறது. இருப்பினும், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யலாம். ஏனெனில் ஆட்டத்தின் பிற்பாதியில் ஆடுகளத்தின் வேகம் குறையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x