Published : 27 Sep 2017 05:58 PM
Last Updated : 27 Sep 2017 05:58 PM

தொடர்ச்சியான 10-வது ஒருநாள் வெற்றி முனைப்பில் இந்தியா! முறியடிக்குமா ஆஸ்திரேலியா?

நாளை (வியாழன்) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றால், தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டிகளில் வென்ற சாதனைப் பட்டியலில் இடம்பெறும்.

இந்தச் சாதனையை நியூஸிலாந்து இங்கிலாந்து அணிகள் ஒருமுறையும், பாகிஸ்தான், மே.இ.தீவுகள், இலங்கை அணிகள் இருமுறையும், தென் ஆப்பிரிக்க அணி 5 முறையும், ஆஸ்திரேலிய அணி 6 முறையும் செய்துள்ளன.

ஆனால் இந்த 10 தொடர்ச்சியான ஒருநாள் போட்டி வெற்றிகளில் இந்தியா நாளை வென்றால் முதல் முறை சாதிக்கும். இதற்கு முன்பாக திராவிட் தலைமையில் 17 முறை இலக்கை விரட்டி தொடர்ச்சியாக வென்றாலும், அது இலக்கை விரட்டியதில் தொடர் 17 வெற்றிகளே தவிர 17 ஆட்டங்களில் தொடர்ச்சியாகப் பெற்ற வெற்றிகள் அல்ல. எனவே கோலியின் தலைமையில் இன்னொரு மகுடம் காத்திருக்கிறது.

கோலியும் அணிக்குள் எந்த வீரர் வந்தாலும் எதிரணியினருக்குக் கருணை காட்டக் கூடாது என்றும் இந்த வெற்றிப் பயணம் கடைசி போட்டி வரை நீடிக்கக் கூடியது என்றும் கூறியிருப்பது ஆஸ்திரேலிய அணியினரிடத்தில் இன்னொரு ஒயிட்வாஷ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலையில் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆண்டிகுவாவில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியதே கடைசி தோல்வி (தோனி நின்றும் முடிக்க முடியாமல் அவுட் ஆகி கடும் மனச்சோர்வுடன் பெவிலியன் திரும்பிய போட்டி), மாறாக ஆஸ்திரேலிய அணி கடந்த ஜனவரி 26-ம் தேதி பாகிஸ்தானை அடிலெய்டில் வீழ்த்தியதே கடைசி வெற்றி. ஒயிட் வாஷ் என்றால் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தரவரிசையில் 4-ம் இடத்துக்குச் சரியும். டெஸ்ட் போட்டிகளில் ஆஸி. அணி 5-ம் இடத்திலும் டி20 சர்வதேச தரவரிசையில் 7-ம் இடத்திலும் உள்ளது.

இந்திய அணி வெற்றிக் கூட்டணியை மாற்றாது என்று நம்பலாம். அதனால் அணியில் மாற்றமிருந்தால் அதிசயமே. ஆஸ்திரேலிய அணியில் ஆஷ்டன் ஆகர் தாய்நாடு திரும்பியதால், ஆடம் ஸாம்ப்பா விளையாடுவார், பாட் கமின்ஸுக்கு ஆஷஸை முன்னிட்டு ஓய்வு அளித்தால் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் விளையாட வாய்ப்புள்ளது.

விராட் கோலி கடந்த ஆண்டு 739 ரன்களையும் இந்த ஆண்டு 1137 ரன்கள் எடுத்து முன்னிலை வகித்தாலும் உள்நாட்டு மைதானங்களில்அவரது ஒருநாள் சராசரி பெங்களூருவில் அதளபாதாளத்தில் உள்ளது. இந்த மைதானத்தில் கோலியின் ஒருநாள் போட்டி சராசரி 10.50. கோலி ஆடிய 4 ஒருநாள் போட்டிகளில் அவர் எடுத்த ஸ்கோர்: 0, 8, 34, 0 ஆகும்.

டேவிட் வார்னர் தன் 100-வது ஒரு நாள் போட்டியில் நாளை களமிறங்குகிறார்.

ஆஸ்திரேலிய தொடர் தோல்வியையும், ஒயிட் வாஷையும் இந்திய அணியின் 10 போட்டிகள் தொடர் வெற்றியையும் நாளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கை மழை ஆற்றும் என்று வானிலை எச்சரிக்கைகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x