Published : 28 Sep 2017 07:51 AM
Last Updated : 28 Sep 2017 07:51 AM

பெங்களூருவில் இன்று 4-வது ஒருநாள் போட்டி: சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய அணி - தொடர்ச்சியான தோல்விகளை தடுத்து நிறுத்துமா ஆஸ்திரேலியா

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று 4-வது ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ள இந்திய அணி, ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று 4-வது ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. தொடரை ஏற்கெனவே தன்வசப்படுத்திக் கொண்டாலும் இந்திய அணி வீரர்கள் நேற்று சின்னசாமி மைதானத்தில் வழக்கம் போல தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதனால் வெற்றியின் தருணத்தை இந்திய அணி நீட்டிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரை வென்றுவிட்டதால் அடுத்த இலக்காக ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணியினர் செயல்படக்கூடும். கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோர் தொடர்ச்சியாக சீரான பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் இளம் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் வளர்ச்சி அணிக்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவர், தாக்குதல் ஆட்டம் தொடுத்து 66 பந்துகளில் விளாசிய 83 ரன்களும், இந்தூரில் 294 ரன்கள் இலக்கை விரட்டிய போது சரளமாக சேர்த்த 78 ரன்களும் இந்திய அணி தொடரை 3-0 என கைப்பற்ற பெரிதும் உதவியாக இருந்தது. 3-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே ஆகியோரும் அரை சதம் அடித்து தங்களது பங்களிப்பை சரியான முறையில் வழங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து பலம் சேர்த்திருந்தது.

கே.எல்.ராகுலுக்கு 3 ஆட்டங்களிலும் வாய்ப்பு வழங்கப்படாததால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு வழிவிடும் வகையில் கேதார் ஜாதவ் அல்லது மணீஷ் பாண்டே வெளியே அமர வைக்கக்படுவார்கள் எனத் தெரிகிறது. பேட்டிங்கில் எப்போதும் வலுவாக காணப்படும் இந்திய அணி தற்போது பந்து வீச்சிலும் அசுர பலம் கண்டுள்ளது. புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா வேகக்கூட்டணி ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களுக்கு தொல்லை கொடுப்பதோடு மட்டும் இல்லாமல் கடைசி கட்ட ஓவர்களில் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதிலும் அசாத்திய திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இளம் ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீவ் யாதவ் ஆகியோர் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்டுத்தி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை படைத்த நிலையில், யுவேந்திரா சாஹல் ஆட்டத்தின் நடு ஓவர்களில் விக்கெட்கள் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியவராக திகழ்கிறார். இந்திய அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சும் ஆஸ்திரேலிய அணியை மீண்டும் மிரட்ட தயாராக உள்ளது.

ஏற்கெனவே தொடரை இழந்துவிட்டதால் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்து ஓயிட்வாஷ் பெற்றுவிடக்கூடாது என்பதில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கூடுதல் கவனம் செலுத்த முயற்சிக்கும். கடினமான சூழ்நிலை தற்போது நிலவினாலும் நவம்பர் மாத இறுதியில் ஆஷஸ் டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி அதற்கு முன்னதாக வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

கடைசியாக வெளிநாடுகளில் விளையாடிய 13 ஒருநாள் போட்டிகளில் 11-ல் தோல்வியும், 2 ஆட்டங்களை முடிவு தெரியாமலும் நிறைவு செய்துள்ள ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். இந்திய அணியை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை ஆஸ்திரேலிய அணி தேடிவரும் நிலையில், அந்த அணியின் மிகப்பெரிய அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்தத் தொடரில் சோடை போனதும் கடும் பின்னடைவை கொடுத்துள்ளது.

இந்தூரில் ஆரோன் பின்ச் 124 ரன்கள் விளாசி சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். 40 ஓவர்களில் 232 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய அணியால் கடைசி கட்டத்தில் 300 ரன்களைக் கூட கடக்க முடியாமல் போனது.

கடைசி 10 ஓவர்களில் அந்த அணியால் வெறும் 59 ரன்களே சேர்க்க முடிந்தது. அதிலும் 4 விக்கெட்களை பறிகொடுத்தனர். ஆறுதல் வெற்றிகளை பெற வேண்டுமானால் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்பட்டால் மட்டுமே சாத்தியம்.

காயம் காரணமாக ஆஷ்டன் அகர் விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக ஆடம் ஸம்பா இன்றைய ஆட்டத்தில் களமிறக்கப்படக்கூடும். அதேவேளையில் விக்கெட் கீப்பராக மீண்டும் மேத்யூ வேட் இடம் பெறுவார் என தெரிகிறது. கடந்த ஆட்டத்தில் அவருக்கு பதிலாக விளையாடிய பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 9 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை தேடிக் கொடுத்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். இதற்கு முன்னர் கடந்த 2008 நவம்பர் 14 முதல் 2009-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற 9 ஒருநாள் போட்டிகளை தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி தொடர்ச்ச்சியாக வென்றிருந்தது.

அணிகள் விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஹில்டன் கார்ட் ரைட், ஆரோன் பின்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், டிரெவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட், ஆடம் ஸம்பா, பேட் கம்மின்ஸ், நாதன் கோல்டர் நைல், கேன் ரிச்சர்ட்சன், ஜேம்ஸ் பாக்னர்.

- நன்றி ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’- தமிழ்

நேரம்: பிற்பகல் 1.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x