Published : 01 Sep 2017 10:41 AM
Last Updated : 01 Sep 2017 10:41 AM

முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற வங்கதேச அணிக்கு ஆஸி. ஊடகங்கள் பாராட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணிக்கு ஆஸ்திரேலிய ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்தது. இப்போட்டியில் வங்கதேச அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வங்கதேச அணி பெற்ற முதல் வெற்றியாகும். மேலும் 101 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வங்கதேச அணி பெற்றுள்ள 10-வது வெற்றியாகும் இது.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ள வங்கதேச அணி 4-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருப்பது கிரிக்கெட் உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெற்றிக்காக வங்கதேச அணியை ஆஸ்திரேலிய ஊடகங்கள் பாராட்டி உள்ளன.

அதே நேரத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்ற தங்கள் நாட்டு அணியை அவை கடும் விமர்சனம் செய்துள்ளன.

ஆஸ்திரேலிய கிரிகெட் வீரர்கள், சமீபத்தில் தங்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள விவகாரத்தில் ஒப்பந்தம் ஏற்படாமல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாகக் கூறினர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கான சம்பளத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உயர்த்தியது.

இதன்படி அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு சம்பளம் வழங்க சுமார் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த அளவுக்கு சம்பளம் வாங்கும் வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய அணியை, மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் வீரர்களைக் கொண்ட வங்கதேச அணி வீழ்த்தி விட்டது என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் விமர்சகரான பீட்டர் லலோர் எழுதியுள்ள கட்டுரையில், “ஆசிய கண்டத்தில் ஆஸ்திரேலிய அணியால் இனியும் வெற்றிகளைக் குவிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரையே பெரிதும் சார்ந்துள்ளது. அவர்கள் ஆட்டமிழந்த அடுத்த நிமிடத்திலேயே அணியின் பேட்டிங் வரிசை சரிந்து விடுகிறது” என்று விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வங்கதேச அணிக்கு எனது வாழ்த்துகள். இந்த வெற்றிக்கு அந்த அணி முழுமையாக தகுதி பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x