Published : 01 Sep 2017 10:43 AM
Last Updated : 01 Sep 2017 10:43 AM

அலெக்சாண்டர் ஜிவெரேவ், வோஸ்னியாக்கி வெளியேற்றம்: 3-வது சுற்றில் கால்பதித்தார் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ், 5-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் தோல்வியடைந்தனர். அதேவேளையில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ், 61-ம் நிலை வீரரான குரோஷியாவின் போர்னா கோரிச்சை எதிர்த்து விளையாடினார். சுமார் 3 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஜிவெரேவ் 6-3, 5-7, 6-7, 6-7 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி தோல்வியடைந்தார்.

இந்த ஆண்டில் 5 ஏடிபி பட்டங்களை வென்றிருந்த ஜிவெரேவுக்கு இந்த தோல்வி அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த மாதம் நடைபெற்ற மான்ட்ரியல் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி கோப்பையை வென்ற ஜிவெரேவ், அமெரிக்க ஓபனில் 2-வது சுற்றுடன் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மற்ற ஆட்டங்களில் 5-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் புளோரியன் மேயரையும், 10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 6-3, 6-4, 7-5 என்ற நேர் செட்டில் கொரியாவின் ஹையோன் ஹங்கையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர். 8-ம் நிலை வீரரான பிரான்சின் சோங்கா 4-6, 4-6, 6-7 என்ற நேர் செட்டில் 69-ம் நிலை வீரரான கனடாவின் டெனிஸ் ஷாபலோவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஆடவர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் 6-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 6-4, 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாவுரையும், 7-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் செக் குடியரசின் சாப்ரனேக்கையும் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

14-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 3-6, 6-1, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த 235-ம் நிலை வீரரான ஜான் மில்மானிடம் தோல்வியடைந்தார். செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், பிரான்சின் மோல்பில்ஸ், ஸ்பெயினின் ரோபர்டா பவுதிஸ்டா அகுட், அர்ஜெடின்னாவின் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 146-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-7 , 6-4, 6-1 என்ற செட் கணக்கில் 59-ம் நிலை வீராங்கனையான ஹங்கேரியின் பபோஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 5-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 2-6, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் 40-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் கேத்ரினா மகரோவாவிடம் வீழ்ந்தார். இதேபோல் 11-ம் நிலை வீராங்கனையான சுலோவேக்கியாவின் டொமினிகா சிபுல்கோவா 2-6, 7-5, 3-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் 83-ம் நிலை வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்சிடம் தோல்வியடைந்தார்.

மற்ற ஆட்டங்களில் 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் பிரான்சின் 48-ம் நிலை வீராங்கனையான ஓசேன் டோடினையும், 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-4, 6-0 என்ற நேர் செட்டில் சீனாவின் யிங்-யிங் டுயனையும்,13-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா 6-1, 6-2 என்ற நேர் செட்டில் பிரான்சின் அலிஸ் கார்நெட்டையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் 4-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-0, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கேத்ரினா ஷினைகோவாவையும், 8-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் சுவெட்லனா குஸ்நெட்சோவா 4-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் வான்ட்ரோசோவாவையும், 10-ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 6-4, 7-6 என்ற நேர் செட்டில்குரோஷியாவின் பெட்ரா மார்டிக்கையும் வீழ்த்தி 2-வது சுற்றுக் குள் நுழைந்தனர். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x