Published : 16 Apr 2023 06:59 AM
Last Updated : 16 Apr 2023 06:59 AM
அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனில் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் ரன் ரேட் ( 1.588) அடிப்படையில் ராஜஸ்தான் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணியின் ரன் ரேட் 0.341 ஆக உள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகமான குஜராத் அணி அந்த சீசனில் இறுதிப்போட்டி உட்பட 3 ஆட்டங்களில் ராஜஸ்தான் அணியை தோற்கடித்து இருந்தது. இந்த சீசனில் இரு அணிகளுமே பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கின்றன. எனினும் கடந்த சீசனில் 3 முறை ராஜஸ்தானை வீழ்த்தி உள்ளது உளவியல் ரீதியாக குஜராத் அணிக்கு பலமாக இருக்கக்கூடும். மறுபுறம் சஞ்சு சாம்சன் குழுவினர் கடந்த கால போட்டியின் முடிவுகளை கவனத்தில் கொள்ளாமல் முதன்முறையாக குஜராத் அணியை வெல்வதில் தீவிர கவனம் செலுத்தக்கூடும்.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் ஜோடி இந்த சீசனில் பவர்பிளேவில் எதிரணியின் பந்து வீச்சை கடும் சிதைவுக்கு உட்படுத்தி வருகிறது.
முதல் 6 ஓவர்களை உள்ளடக்கிய பவர்பிளேவில் ஜாஸ் பட்லரின் ஸ்டிரைக் ரேட் 196.6 ஆக உள்ளது. இந்த சீசனில் பவர்பிளேவில் மட்டும் பட்லர் 114 ரன்கள் விளாசி உள்ளார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 184 ஸ்டிரைக் ரேட்டுடன் 92 ரன்களை பவர்பிளேவில் வேட்டையாடி உள்ளார். இதனால் இந்த ஜோடி குஜராத் அணியின் பந்துவீச்சு துறைக்கு கடும் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும்.
இந்த ஜோடி மட்டையை சுழற்றும் பட்சத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் அணிக்கு எதிராக முதன் முறையாக வெற்றியை வசப்படுத்தலாம். சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மயர்,ஆகியோருடன் அஸ்வின், ஜேசன் ஹோல்டர் ஆகியோரும் மட்டைவீச்சில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் இந்த சீசனில் சிக்கனமாக ரன்களை (ஓவருக்கு சராசரியாக 7.3) வழங்கிய 2-வது அணியாக ராஜஸ்தான் அணி திகழ்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடம் ஸம்பா, அஸ்வின், யுவேந்திர சாஹல் ஆகியோரை உள்ளடக்கிய சுழற்பந்து வீச்சு கூட்டணி சிறப்பாக செயல்பட்டிருந்தது. முக்கியமாக இவர்கள் நடு ஓவர்களில் சென்னை அணியின் ரன்குவிப்பை கட்டுக்குள் வைத்திருந்தனர்.
எனினும் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியின் பேட்டிங் வரிசை, ராஜஸ்தானின் பந்து வீச்சு துறைக்கு சவால் அளிக்கக்கூடியதாகவே இருக்கக்கூடும். ஏனெனில் ஷுப்மன் கில், டேவிட் மில்லர், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோர் அதிரடியாக விளையாடி அழுத்தம் கொடுக்கக் கூடியவர்கள். விஜய் சங்கர், கொல்கத்தா அணிக்கு எதிராக 24 பந்துகளில் 63 ரன்கள் வேட்டையாடினார். ஆனால் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங், கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்ததால் விஜய் சங்கரின் செயல் திறனுக்கு பலன் கிடைக்காமல் போனது.
அந்த ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசி 31 ரன்களை தாரை வார்த்த யாஷ் தயாளுக்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக களமிறக்கப்பட்ட மோஹித் சர்மா தனது அனுபவத்தால் சிறப்பாக செயல்பட்டு 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார். அவரிடம் இருந்து மீண்டும் ஒரு உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT