Published : 28 Sep 2017 10:45 AM
Last Updated : 28 Sep 2017 10:45 AM

57-வது தடகள சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றார் தமிழக வீரர் சந்தோஷ் குமார்

57-வது தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் சந்தோஷ் குமார், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது. இதில் சந்தோஷ் குமார் பந்தய தூரத்தை 50.16 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.

கடந்த 2009-ம் ஆண்டு ஜோசப் ஆபிரகாம் பந்தய தூரத்தை 50.26 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. இதனை சந்தோஷ் குமார் முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். சர்வீசஸ் அணியைச் சேர்ந்த ராமச்சந்திரன் 2-வது இடத்தையும், உத்தரபிரதேச வீரர் அஃப்டாப் ஆலம் 3-வது இடத்தையும் பெற்றனர்.

ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் ரயில்வே அணியைச் சேர்ந்த சித்தார்த் யாதவ் 2.23 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனை நிகழ்த்தி தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. போல் வால்ட்டில் ரயில்வே அணியைச் சேர்ந்த பிரீத், 5 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த கே.கணபதி பந்தய தூரத்தை 1:27:33 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். நேற்றைய நிலவரப்படி பதக்கப் பட்டியலில் ரயில்வே அணி 12 தங்கம் உட்பட 26 பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது. சர்வீசஸ் அணி 22 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x