Published : 06 Sep 2017 10:31 AM
Last Updated : 06 Sep 2017 10:31 AM

இந்தியா - இலங்கை அணிகள் டி 20-ல் இன்று பலப்பரீட்சை

இந்தியா - இலங்கை அணிகள் இன்று டி 20 ஆட்டத்தில் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டித் தொடரை 5-0 என்ற கணக்கிலும் முழுமையாக வென்று இந்திய அணி அசத்தியிருந்தது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒரேயொரு டி 20 ஆட்டம் கொண்ட தொடரில் இந்திய அணி இன்று விளையாடுகிறது.

இந்த ஆட்டமானது, இந்திய அணி தனது சொந்த மண்ணில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 போட்டிகளுக்கு தயாராவதற்கு சிறந்த முறையில் உதவக்கூடும் என கருதப்படுகிறது. இந்திய அணி தனது உள்ளூர் சீசனில் ஒன்பது டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். ஒருநாள் போட்டித் தொடரில் ரன்கள் சேர்க்க தடுமாறிய கே.எல்.ராகுல் நெருக்கடியுடன் களமிறங்குகிறார். ஒருவேளை அவரை நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்தால், அந்த இடத்தில் அஜிங்க்ய ரஹானே இடம் பெற வாய்ப்புள்ளது. மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி ஆகியோர் நடுக்கள வரிசையில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

5-வது ஒருநாள் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறார். அவரது ஆல்ரவுண்டர் திறன் இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமையும் என கருதப்படுகிறது. ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். வேகப் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் இடம் பெறுவார்கள். இதேபோல் சுழற்பந்து வீச்சில் யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இலங்கை அணியில் மாற்றம்

டெஸ்ட், ஒருநாள் போட்டித் தொடரை இழந்த இலங்கை அணி, டி 20 ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. டி 20-ல் அந்த அணி முதன்முறையாக உபுல் தரங்கா தலைமையில் களமிறங்குகிறது. ஒருநாள் போட்டித் தொடரில் மோசமாக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டி 20-க்கான இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

லெக் ஸ்பின்னர் ஜெப்ரி வான்டர்சே, ஆல்ரவுண்டர் தசன் ஷனகா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதபோல் டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விலகியிருந்த வேகப் பந்து வீச்சாளர் சுரங்கா லக்மலும் அணிக்கு திரும்பி உள்ளார். திடீரென சுழல் மாயாவியாக உருவெடுத்துள்ள அகிலா தனஞ்ஜெயாவும் அணியில் நீடிக்கிறார்.

வான்டர்சே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனால் அதன் பின்னர் காயம் காரணமாக, அணியில் தொடர்ந்து இடம்பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். ஆச்சர்யம் அளிக்கும் விதமாக இடது கை சுழற்பந்து வீச்சாளரான லக்சன் சந்தகன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பாக செயல்படாத வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ, துஷ்மந்தா ஷமீரா ஆகியோருக்கும் டி 20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை. மூத்த வேகப் பந்து வீச்சாளரான லசித் மலிங்கா அணியில் தொடர்கிறார். முன்னணி பேட்ஸ்மேனான குஷால் மெண்டிசுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், அஜிங்க்ய ரஹானே, மணீஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர்.

இலங்கை: உபுல் தரங்கா (கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் திக்வெலா, தில்ஷான் முனவீரா, தசன் ஷனகா, மிலின்டா ஸ்ரீவர்தனா, வானிடு ஹசரங்கா, அகிலா தனஞ்ஜெயா, ஜெப்ரி வான்டர்சே, இஸ்ரு உதனா, பிரசன்னா, திசரா பெரேரா, லசித் மலிங்கா, சுரங்கா லக்மல், விகும் சஞ்ஜெயா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x