Published : 03 Sep 2017 11:33 AM
Last Updated : 03 Sep 2017 11:33 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி- பெட்ரா விட்டோவா, மரியா ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் தோல்வியடைந்தார். மகளிர் பிரிவில் பெட்ரா விட்டோவா, மரியா ஷரபோவா, கார்பைன் முகுருசா உள்ளிட்டோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 5-ம் நிலை வீரரும் 2014-ம் ஆண்டு சாம்பியனுமான குரோஷியாவின் மரின் சிலிச், 29-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் டிகோ ஸ்வார்ட்மேனை எதிர்த்து விளையாடினார்.

3 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மரின் சிலிச் 4-6, 7-5, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

இதேபோல் 10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 4-6, 3-6, 6-7 என்ற நேர் செட்டில் 23-ம் நிலை வீரரான ஜெர்மனியின் மிஸ்சா ஜிவெரேவிடம் வீழ்ந்தார். கனடாவின் இளம் வீரரான டெனிஸ் ஷாபாலோவ், ஜெர்மனியின் கெய்ல் எட்மண்டை எதிர்த்து விளையாடினார். இதில் ஷாபாலோவ் 3-6, 6-3, 6-3, 1-0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக எட்மண்ட் வெளியேறினார். இதனால் ஷாபாலோவ் 4-வது சுற்றில் கால்பதித்தார்.

மற்ற ஆட்டங்களில் 17-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சேம் குயரே 4-6, 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் மால்டோவாவின் ராடு அல்போட்டையும், 28-ம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் போர்னா கோரிச்சையும், 12-ம் நிலை வீரரான ஸ்பெயினின் பேப்லோ கார்ரெனோ புஸ்டா 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்டில் பிரான்சின் நிக்கோலஸ் மகுட்டையும், 16-ம் நிலை வீரரான பிரான்சின் லூக்காஸ் பவுலி 2-6, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் மிகைல் குஷ்கினையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-1, 6-1 என்ற நேர் செட்டில் 31-ம் நிலை வீராங்கனையான சுலோவேக்கியாவின் மெக்டலினா ரைபரிகோவாவையும், 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியையும், 13-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா 6-0, 6-4 என்ற நேர் செட்டில் 18-ம் நிலை வீராங்கனையான பிரான்சின் கரோலின் கார்சியாவையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

ஊக்க மருந்து தடை விவகாரத்துக்கு பிறகு முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பங்கேற்றுள்ள 146-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா தனது 3-வது சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனினை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் ஸ்பெயினின் கர்லா சுவாரேஸ் நவரோ, ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜ், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், லத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவா ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

போபண்ணா ஜோடி தோல்வி

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், புரவ் ராஜா ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட்டில் செர்பியாவின் ஜன்கோ டிப்சார்விக், விக்டர் டிரோசிக் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் திவிஜ் சரண், ஜெர்மனியின் ஆந்த்ரே பேகமான் ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸ், மார்க் லோபஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பேப்லோ குயவாஸ் ஜோடி 7-5,4-6, 4-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான இத்தாலியின் பேபியோ போக்னி, சைமோன் போலேலி ஜோடியிடம் வீழ்ந்தது. இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 47 நிமிடங்கள் நடைபெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 7-5, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் லத்வியாவின் ஜெலினா ஒஸ்டெபென்கோ, பிரான்சின் பேப்ரைஸ் மார்ட்டின் ஜோடியிடம் தோல்வி கண்டது.

- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x